சமையல் எரிவாயு மாதம்தோறும் விலை உயர்வு?அச்சிடுக
01 ஜூலை 2014 காலை 11:54

இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய கசப்பான மருந்தை உட்கொள்ள நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டன.

ரயில் கட்டண உயர்வைத் தொடர்ந்து மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதம் தோறும் ரூ.10 உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஆட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 9 ஆகவும், கடந்த ஜனவரி மாதம் 12 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இராக் உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட காரணங்களினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது பேரல் ஒன்றுக்கு 115 டாலராக உயர்ந்துள்ளதால் பெட்ரோலியப் பொருளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியமும் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

article-0-157D9EA1000005DC-153_634x377

இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்யும் வகையில், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, அவரது அமைச்சகத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை அமைப்பு பரிந்துரை அளித்துள்ளது. அந்த பரிந்துரையில், மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதம் தோறும் ரூ.10 அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்களுக்கான எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதன் மூலம் எரிவாயு விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று எஸ்.ஜி.தாண்டே குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் 291 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜுன் 1 ஆம் தேதி முதல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் 6 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் 2.8 கோடி நுகர்வோருக்கு ரூ.5,400 கோடிக்கும் மேல் எரிவாயு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்குகளில் ஆதார் கார்டு எண் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆதார் கார்டு கிடைக்காத நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமம் குறித்து புகார் எழுந்ததால், கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் நேரடி மானியத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் குறித்து ஆய்வு நடத்த கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக பேராசிரியர் எஸ்.ஜி.தாண்டே தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

அந்தக் குழு அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், நேரடி மானியத்திட்டத்தின் மூலம் எரிவாயு விநியோக முறையில் ஏற்படும் குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கம் நிறைவேறியுள்ளது.

அதே வேளையில், ஆதார் கார்டு முழுமையாக வழங்கப்படாத மாவட்டங்களில் நுகர்வோரின் புகார்கள் அதிகரித்துள்ளன.

எனவே, இந்தத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை இந்தக் குழு உறுதியாக பரிந்துரைக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh