கடல் கடந்த காயலரின் உறவும் பிரிவும்..!அச்சிடுக
16 செப்டம்பர் 2014 காலை 08:57

வேடந்தாங்கள் பறவைகள் ஒவ்வொன்றாய் தங்கள் வாழ்விடம் நோக்கிப் பறக்கத் துவங்கி விட்டன.

கடந்த ஒரு சில மாதங்களாய் வெளிநாடு வாழ் காயலர்களின் வருகையால் களைகட்டி இருந்த காயல்பட்டணம் கொஞ்சம் கொஞ்சமாக தனது இயல்பு நிலைக்குத் திரும்பி விட்ட வேளை இது .

flight

புலம் பெயெர்ந்தவர்கள் பணத்தை விட பெறுமதி மிக்கதாய் கருதும் ஒவ்வொரு விடுமுறை

நாளையும் எண்ணி எண்ணி களிப்புடன் கழித்திட , நாட்கள் எப்படிப் பறந்தது என்று புரிவதற்குள்ளே அதன் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது .இதனை ஆங்காங்கே நாம் சந்தித்து உரையாடும் வேளை - நம் நண்பர்கள் மூடி மறைக்க முயற்சித்தாலும் இவர்களையும் மீறி முகங்களில் வெளிப்பட்டு நிற்கும் பிரிவின் சோகம் நமக்கு சொல்லித் தந்தது.

ஊருக்கு வந்திறங்கிய புதிதில் எத்துனை குதூகலமான குசலம் விசாரிப்புகள். பயணம் நெருங்கிவிட்ட வேளையில் சுரம் சுண்டிய தொனியில் பயணம் சொல்லும் விதம், அது வெளிக் கக்கும் உணர்வலைகள் கேட்பவரையும் ஒரு வித சோகத்தில் ஆழ்த்திவிடும் .

தாம் பிறந்து வளர்ந்த இந்த தாய் மண்ணையும் ,பார்த்துப் பழகிய பந்தங்களையும் பிரியப் போகிறோமே!

என்ற கவலையும் ஆதங்கமும் இவர்களிடம் மேலோங்கி நிற்கிறது .

இந்த மண்ணின் மீது தான் எத்துனை காதலும் கரிசனையும் ?

உறவுகளோடு தான் எத்தகைய பாசமும் பிணைப்பும் பாருங்கள் ...?

குடும்பத்துடன் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் நிலையே இவ்வாறு என்றால் ,

குடும்பத்தையே பிரிந்து செல்பவர்களின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் வடிக்க இயலவில்லை. இவை ஒரு தனி மனிதனின் உள்ளம் உணர்வு சார்ந்த பிரத்தியேக மொழி இவைகளை உணர்த்திட எழுத்துக்கள் எத்தனித்தால் தோல்வியை தழுவிக் கொள்ளும் . அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்படும் ஒரு தனி மொழி என்பதே மறுக்க முடியாத உண்மை .வலியும் வேதையும் தனக்கு வந்தால் தானே தெரியும் ! என்பார்களே அந்த மொழிதான் அது.

sent_off

இவர்கள் உறவுகளிடம் விடை பெற்று ஊரிலிருந்து புறப்பட்டுச்செல்லும் பொழுதினில் வழி நெடுக நிற்கும் மின் கம்பங்கள் முதல், மரம் செடி கொடி புல் பூண்டுகள் வரை , இன்னும் சொல்வதென்றால் சாலை ஒரக் கல்லும் மண்ணும் கூட கை அசைத்து வருத்தத்துடன் வழி அனுப்புவதாய் உணர்வார்கள் .

கடந்து செல்லும் வீதிகளைக் கூட இனி எப்போது காண்போம் ? என்ற தவிப்பில் திரும்பித் திரும்பி பார்பார்கள் - சோகம் தொண்டைக் குழியை இறுக்க மனம் நொறுங்கி , மௌனியாய் மனதிற்குள் விம்மி விம்மி அழுவார்கள். இது எந்தச் செவிகளையும் சென்றடையாது.

வெளி உலகில் இந்த நிலை என்றால் , பயண ஏற்பாடுகளைத் துவக்கிய நேரம் முதலே ஒரு வித சோகமும் இறுக்கமும் வீடுகளில் உறவுகளில் தொற்றத் துவங்கி விடும். இத்தனை நாட்கள் ஒன்றாய் இருந்த உறவுகளைப் பிரியப் போகிற நேரம் நெருங்க நெருங்க ஏதோ ஒன்றை இழக்கப் போவதாய் உள்ளமும் உடலும் ஒரு சேர பட படக்கும். உண்மையில் உள்ளம் உறவுகளோடு தங்கி விட உடல் மட்டுமே பணி இடம் நோக்கி பயணிக்கத் துவங்கும்.

GRP_PH

இந்த உள்ளங்களின் இணைப்பை பிணைப்பை இதற்கான காரணியை இறை மறை இப்படி கற்றுத் தருவதைக் காணலாம்

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(அல்குர்ஆன் 30:21)

இருந்தாலும்

இவர் ஆண் பிள்ளை அல்லவா ?

மனைவியும் , மக்களும்

இவரைக் கண்ணீர் மல்க

வழியனுப்பிடும் வேளை

தன்னைக் கட்டுப் படுத்தி

கட்டளையிடுவார்

உள்ளமே ! நீ உருகிடாதே !

கண்களே ! நீ கலங்கிடாதே !

கல்லாகிப்போ என்று !

இதனையும் மீறி பிரிவின் துயரை தாங்க முடியாமல் மனம் விட்டு அழ வேண்டும் போல் இருக்கும் .

ஆனாலும் ஆண் மகன் அழுதால் கோழை என்று சமூகம் சொல்லி வைத்திருக்கிறதல்லவா ?

அதனால் துக்கம் தொண்டையை நெரித்தாலும் ஆண்களால் மனம் விட்டு அழ முடிவதில்லை.

அழுவது பெண்களுக்கே உரியது என்று பட்டா போட்டு புழக்கத்தில் வந்து பல காலமாச்சு . உறவின் பிரிவிலிருந்து மீண்டு வருவது என்பது ஒவ்வொரு முறையும் இவர்களுக்கு பெரும் போராட்டமே .

பிரிவு பிரசவிக்கும் காயங்களும் வலிகளும் அவ்வளவு எளிதாக ஆறுவதில்லையே ! ஊரில் தங்கி இருந்த காலத்தில் மனைவியோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட மறக்கமுடியாத தருணங்களும், குழந்தைகளுடன் கொஞ்சிக் குலாவிய நினைவுகளும், உறவுகளுடன் ஒன்று கூடி உறவாடிய இனிமையான நிகழ்வுகளும் , அடுக்கடுக்காய் அணிவகுத்து ஒவ்வொரு நாளும் கிழமை வாரியாக நேரம் வாரியாக மனக் கண்ணில் வட்டமிட்டு வாட்டி வதைக்கும்.

hubaib

பணிக்குச் சென்றால் வாட்டும் நினைவுகள் சற்றே ஓய்வெடுக்கும் என்று நினைத்தாலும் கூட ஓயாமல் துரத்தித் துரத்தி தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு கணமும் வீட்டு நினைவு விடுவதாய் இருக்காது .இப்படியே உறவும் பிரிவும் இவர்களை அலைக்கழித்து ஆட்டிப்படைக்கும். என்ன செய்ய உழைத்து காசு தேட வேண்டுமே ? என்ற நிலையில் இது தான் வாழ்க்கை என்றாகி விடும் பரிதாபம். அதுவும் புது மணத் தம்பதிகளாய் இருந்து விட்டால் இவர்கள் படும் துன்பத்தை சொல்லில் வடிக்க முடியாது . வாழ்க்கைத் துணையின் பிரிவு இவர்களைப் பாடாய் படுத்தி விடும் தேட்டத்தில் தவித்துத் தேய்ந்து தொலைந்து போவார்கள் .

பிரிந்த ஏக்கத்துடன் நாட்கள் உருண்டோட உறவுகளின் தேட்டத்துடன் இன்னும் ஒருவருடமோ இரு வருடமோ தொடரும் காத்திருப்பு, சோகம் தோய்ந்த தொடர் கதையாகிப் போகும். இது போன்று குடும்பத்தை பிரிந்திருக்கும் சக நண்பர்கள் பணி தேசங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாகும் ஆதரவாகும் கை கோர்த்து இருப்பார்கள். இவர்களின் அனுசரணையிலேயே தனிமை தரும் துன்பத்தைத் தனிமைப் படுத்திடுவார்கள்

இடைப்பட்ட இந்த வனவாச காலத்தில் மனைவியும் ,கணவனும் ஒருவர் மற்றவரின் கடிதத்தின் வருகைக்காக தவமிருப்பர்கள். கடிதங்கள் அதை எழுதும் ஒருவரின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் எழுத்து வடிவில் சுமந்து சென்று உரியவரிடம் எழுத்துக்களை உணர்வுகளாக உரு மாற்றம் செய்து ஒப்படைத்திடும் ஒரு அற்புதமான தொடர்பு சாதனம் .

எனவே ஒவ்வொரு நாளும் கடிதம் வந்து விடாதா என்று வழி மேல் விழி வைத்து காத்திருப்பார்கள் .கடிதம் வரவேண்டிய நாளை எண்ணிக் கணக்கிட்டு அட்டவணை போட்டு காத்திருப்பார்கள்.கடிதம் கைகளில் கிடைத்து விட்டால் இவர்களைக் கையில் பிடிக்கவே முடியாது. தனது வாழ்க்கைத் துணையே நேரில் வந்து விட்டதாக கொண்டாடுவார்கள் . எத்தனை வேலையாக இருந்தாலும் கடிதத்தைப் பிரித்து வாசித்து முடித்தால் தான் ஆர்ப்பரிக்கும் உள்ளம் அமைதி பெரும். அத்தோடு முடிந்து விடுமா என்ன ?

பேணி பாதுகாத்து பத்திரப்படுத்தி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வாசித்து ஆறுதல் அடைவார்கள் .

இதைத் தான் ஒரு கவிஞன் இப்படிச் சொன்னான் போல -

நான் அனுப்புவது கடிதம் அல்ல ....உள்ளம்

அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல....எண்ணம்

உன் உள்ளம் அதை கொள்ளை கொள்ள..

முன் சென்ற பல தலைமுறையினரின் வாழ்க்கை,வெறுமனே கடிதங்களுக்குள்ளே கரைந்து போன வரலாறும் உண்டு.சந்தடியின்றி சேவைகள் பல செய்த கடிதப் போக்குவரத்து இந்த தலைமுறையினரிடம் இருந்து விடை பெற்று விட ஆபத்பாந்தனாக பிரிந்து வாடும் உள்ளங்களை இணைத்திடுவேன் என்று உதவிக்கு ஓடோடி வந்திருப்பது கைபேசியும் SKYPE யும் தானே. இவைகள் இன்றைய கடல் கடந்து வாழும் ஜீவன்களின் பிரிக்க முடியாத பிராண வாயுக் குப்பிகள் . இதனைக் கண்டு பிடித்து பயன் பெறத் தந்தவர்கள் மறக்க முடியாத நன்றிக்குரியவர்கள் இல்லையா ?

humaidh

இது போன்ற ஊரின் தேட்டமும் உறவுகளைப் பிரிந்த தவிப்பும் யாரை ஆக்கிரமித்திருக்கிறது ? என்று கேட்டால்

இந்த ஊரிலே பிறந்து வளர்ந்து ஆடி ஓடி , படித்துப் பழகி ஆளாகி இருக்கும் சென்ற தலை முறைகளைத்தான்.

இதை ஒத்த உணர்வலைகள் சமகால தலை முறையினரிடம் எந்தளவு தாக்கம் செலுத்துகிறது ?

என்று காதை விரித்து கேட்கத் துவங்கினால் கிடைக்கின்ற செய்தி என்னவோ மகிழ்ச்சிக்குரியதாய் இல்லை என்பதே நிதர்சனம்.

ஆக்கம் : ஹாஜி S.I புஹாரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh