இலையில் தங்கிய துளிகள்! தொடர் கட்டுரை!! நினைவுகளை அரிக்கும் கரையான்.. (பாகம்-1)அச்சிடுக
07 டிசம்பர் 2014 மாலை 08:09

ஒரு திரட்சியான அடைமழையின் போது நாம் அதன் துளிகளைக் காண்பதில்லை. மழையின் நோக்கம் மண்ணில் விழுவதே.எந்தப் பெரிய மழையும் தன் துளிகளை இலைகளில் விட்டுவைக்காமல் செல்வதில்லை.பிரமாண்டத்தை விட துளிகள் தரும் பிரமாண்டம் அற்புதமானது.முழுப் பிரபஞ்சத்தையும் அது தனக்குள் அடக்கிக் கொள்கிறது.

leaves

அன்றாட வாழ்க்கையில் நாம் துளி போன்ற எத்தனையோ விசயங்களை மறந்து விட்டு அவற்றைக் கடந்து செல்வதுண்டு.மானுட வாழ்க்கையில் சிதறிக் கிடக்கும் நன்மைகளை கைகளில் அள்ளிக் கொள்ள மனிதனுக்கு சந்தர்ப்பம் இருந்தும் அவன் தவற விடுகிறான்.அந்த சந்தர்ப்பங்களை கொஞ்சம் சமீபமாகக் காட்டும் முயற்சியாக இந்தத் தொடர் அமைகிறது.

1- நினைவுகளை அரிக்கும் கரையான்

ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்காமல் இருக்க முடியுமாயின் உலகில் அது ஒரு உயர்ந்த செயலாகவே இருக்கும்.அன்றாட வாழ்வில் நாம் கொள்ளும் நினைப்பில் அதிகமானவை பிறரைப் பற்றிய தப்பெண்ணமே. மிக நெருக்கமாகப் பழகுபவர்களும் சரியான புரிதல் இல்லாதவர்களாக இருக்கும் போது அதிகமாகத் தப்பெண்ணம் கொள்ள இடமிருக்கிறது. சிறியதாகச் சேரும் அந்த நினைவுகள் ஒரு நாள் வெடித்துச் சிதறும் போது உறவே கசப்பாகிவிடுகின்றது.

பொறாமை,ஈகோ,குரோதம் எனப் பல காரணங்களால் மனிதன் அடுத்தவனைப் பற்றி தப்பெண்ணம் கொள்கிறான்.தப்பெண்ணம் கரையானைப் போல நினைவுகளை அரிக்கக் கூடியது.

ஒருவரைப் பற்றி மனம் தப்பாக நினைத்துவிட்டால் அதன் பிறகு மனது உறக்கம் கொள்வதே இல்லை அந்த நினைவு குறித்த தேடலில் இறங்கிவிடுகிறது.அந்த நினைவுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் தேடிய கொடிய பயணத்தில் அவன் இறங்கிவிடுகிறான்.பின் அவனைப் பற்றி தப்பாகப் பேச ஆரம்பித்துவிடுகிறான்.பின் இறற்தவனின் மாமிசத்தைச் சாப்பிடும் இழிநிலைக்கு அவன் ஆளாகிவிடுகிறான்.

கற்பாறையில் ஊர்ந்து செல்லும் கட்டெறும்பு போல தப்பெண்ணம் நம்மை அறியாமலேயே நமக்குள் வந்துவிடுகிறது.ஒருவன் புதிதாய் ஒரு வீடு கட்டுகிறான் அல்லது வாகனம் வாங்குகிறான் என்று வைத்துக் கொண்டால் அவனுக்கு எப்படிப் பணம் வந்தது என்பதிலிருந்து அந்த நினைவு ஆரம்பித்து விடுகிறது.இதுபோல ஆயிரம் நிகழ்வுகள் அன்றாட வாழ்க்கையில் தப்பெண்ணத்துடன் சம்பந்தப்படுகின்றன.

அடுத்தவரைப் பற்றிய நல்லெண்ணமே மனித உறவின் நீட்சிக்கு அடிநாதமாய் அமைகின்றது.ஒருவர் எமக்குத் தீங்கு செய்யும் போதும் அவரைப் பற்றி நல்லெண்ணம் கொள்ள முடியுமாக இருந்தால் அதி மனிதனின் நிலைக்கு ஒருவரால் மாற முடியும்.ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

இன்றைய உலகில் மனித உறவு கெட்டுப் போயிருப்பதற்கு தப்பெண்ணமும் ஒரு பிரதான காரணியே.நமக்குப் பிடிக்காத ஒருவரின் கடுகளவு குறையையும் கடலாப் பார்ப்பதற்கும் பிடித்த ஒருவரின் கடலளவு குறையையும் கடுகாகப் பார்ப்பதற்கும் மனிதன் பழகியிருக்கிறான்.எனவே தனக்குப் பிடித்தவனை மட்டுமே அவன் பாராட்டுகிறான்.அவனது வெற்றியை மட்டுமே அவன் உயர்த்திப் பேசுகிறான்.தனக்குப் பிடிக்காத ஒருவரின் வெற்றியை தனது தப்பெண்ணத்தால் மாசுபடுத்தி விடுகிறான்.

இறை தூதர் இரு முறை தனது தோழர்களிடம் ஒருவரைக் காட்டி சுவனவாசியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.ஏன் அவர்சுவனவாதி என ஏனைய தோழர்கள் தேடிப் பார்த்த போது அவர் யாரைப் பற்றியும் தப்பெண்ணம் கொள்வதில்லை எனத் தெரிய வந்தது.

தப்பெண்ணம் கொள்ளாமல் இருப்பது சுவர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒன்றென்பதாலோ என்னவோ அது அவ்வளவு கடினமாக இருக்கிறது.

தொடரும்..

ஆக்கம் : இன்சாப் சலாஹுத்தீன் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh