மழலைக்கு மது புகட்டும் மடமை : அதிரவைக்கும் அரங்கேற்றம்! கட்டுரை!! அச்சிடுக
08 ஜூலை 2015 காலை 02:02

தமிழகத்தில் மது அருந்துவோரின் சராசரி வயது 13 என்கிறது ஒரு புள்ளி விபரம். பெரிசுகள் மதுவுக்கு அடிமையாகி தனது வாழ்நாளை தொலைத்தது போதாது என்ற வகையில் தற்போது இளைஞர்களுக்கு மத்தியில் உலாவும் மது பழக்கம் தான் அதிக வேதனையைத் தருகிறது என்று பேசிக்கொண்டிருந்த நமக்கு..

தற்போது மழலையருக்கும் மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கும் நிகழ்வுகள் நடந்தேறியதை நினைக்கும்போது "அய்யாமுல் ஜாஹிலிய்யா" எனும் அறியாமை காலத்திற்கு நம்மை பின்னோக்கி கொண்டு செல்கிறது என்றே உணர முடிகிறது.

சிறுவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றி கொடுக்கும் கொடுமை 

இளைஞர்கள் சிலர், நான்கு வயது சிறுவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றி கொடுக்கும் காட்சி "வாட்ஸ்அப்", "பேஸ் புக்"கில் வெளியாகி கடந்த சில தினங்களாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

drink

1 நிமிடம் 37 விநாடிகள் ஓடிய காட்சியில், சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வலியுறுத்துவதும், குடித்து முடித்ததும் டம்ளரை வேகமாக சிறுவன் வீசி எறிவதும் காண சகிக்க முடியாத ரணங்களாக தமிழகத்தில் அரங்கேறி வந்த காட்சி நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சி இருக்கிறது.

ஆடு மேய்க்கச் சென்ற பாட்டி முனியம்மாள், தனது பேரனையும் அழைத்துச் சென்றுள்ளார். மேல்சோழங்குப்பம் ஏரி அருகே உள்ள காலி இடத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனை அவனது தாய்மாமன் முருகன் அழைத்துச் சென்றுள்ளார்.

மரத்தடியில் சிறுவனை உட்கார வைத்து, வாங்கி வைத்திருந்த பீர் நிரப்பப்பட்ட டம்ளரை கொடுத்து இளைஞர்கள் சிலர் குடிக்க செய்துள்ளனர் என்பதே அந்த கொந்தளிக்க வைத்த செய்தி..

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம்

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி உலகில் 2 பில்லியன் மக்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். அவர்களில் 75 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் மதுப்பழக்கத்தினால் உண்டான உடல் உபாதைகளினால் அவதிப்படுகின்றனர். மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமான நோய்களினால் இறக்கின்றனர்.

15 முதல் 29 வயதிற்குட்பட்டோரில் 9 சதவிகித இறப்புக்கு மதுப்பழக்கம் நேரிடையான காரணமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பரவலாக வளர்ந்த நாடுகளில் மதுப்பழக்கம் குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல், அதனை வணிகப்படுத்தியமை, அதன் ஏற்றுமதி இறக்குமதி விதிகளில் தாராளம் இவையே அதற்கு காரணம் எனவும் அது கூறுகிறது.

தமிழ்நாட்டில் ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதில் பெரும்பாலும் ஆண்களே எனினும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆய்வில், பெண்களும் கிட்டதட்ட ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

பின்னோக்கிய வழுக்கள்

சமுதாயத்தில், பல்வேறு தரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளில், உண்மையான சமுதாய அக்கறையுடன் தொலைநோக்குப் பார்வையுடன், நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை வருங்கால சந்ததியினர் நிச்சயம் போற்றுவர்.

நாட்டுக்கு வருமானம் முக்கியம் என்றால், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நிச்சயம் பெருக்கிக் கொள்ள முடியும். மதுக்கடைகளை தன்கையில் எடுத்துக் கொண்ட அரசு மணல், கிரானைட் கல்குவாரிகளை தன் வசம் எடுத்துக் கொண்டு முறைப்படுத்தினாலே, அரசு கஜானாவில் கணிசமாக வருமானம் அதிகாளவில் வந்துசேரும்.

இன்றைய ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மது போதை தாராளமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கு தனித்துறை ஏற்படுத்தி சேவை செய்கிறது. "TASMAC" (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாடு முழுவதும் சுமார் 6500 சில்லரை கடைகள் 36000 ஊழியர் கள் 41 சேமிப்பு கிடங்குகள் மூலம் தமிழ் மக்களின் தாகங்களை தீர்க்கிறார்கள். தெருக் குழாயில் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் ""டாஸ்மாக்கில்" தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்.

tasmac

டாஸ்மாக் வருமானம் 

டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ.23 ஆயிரத்து 401 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் விற்பனை வரியாக ரூ.17 ஆயிரத்து 533, கலால் வரியாக ரூ.5,868 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.26 ஆயிரத்து 295 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதன் பொருள் மிகுதியான இளைஞர் சமூகம் வருடம் தோறும் புதிதாக போதைக்குள் நுழைகிறார்கள் என்பதுதான் இதன் மறைமுக உண்மை. கடந்த தீபாவளி பண்டிகை இரண்டு நாளில் மட்டும் சரக்கு விற்பனை 160 கோடிக்கும் மேல்..

மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். தள்ளாடித் திரியும் தமிழர்கள் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஆம்! இந்தியாவிலேயே அதிகமானோர் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். கடந்த ஆண்டு மட் டும் 16,561 நபர்கள் அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர்கள் இந்த தற்கொலை சாவு களில்; 50% பின்னணியில் இருப்பது மதுப் பழக்கமே

அரசு திருந்துமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆகையால் ஒவ்வொரு இளைஞனும் நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள் எனும் உறுதி மொழியை ஏற்று மதுவின் மயக்கத்திலிருந்து நாட்டை மீட்க வேண்டும்.

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது." (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத்

தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம்,மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே,அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

ஆக்கம் : எடிட்டர்

காயல் நியூஸ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh