இழப்பும், இறப்பும் மழையால் அல்ல...! எழுத்தாளர் அன்பின் அலாவுத்தீன் கட்டுரை!!அச்சிடுக
28 நவம்பர் 2015 மாலை 03:32

இன்றைய செய்தி..

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகள் சிலவற்றில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா இன்று கூறும்போது, "தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது.

gallerye_231932169_1375591

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்துக்கு, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

கட்டுரைக்குள் நுழைவோம்..

எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம், சென்னை முதல் குமரி வரை மிதக்கிறது. என தினம்... தினம் தலைப்புச் செய்தி இடியாகவே விடிகிறது... தமிழகத்தை புயல் சுற்றுகிறதோ! இல்லையோ.. நம் தலை சுற்றுகிறது. மக்களின் கண்ணீர், மழையில் கலந்தே கடலை முத்தமிட்டு மொத்தமாக்கி கொள்கிறது. தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மை சரியான விதத்தில் இல்லாமையே ஒட்டுமொத்த தமிழகமே வெள்ளத்தில் தள்ளப்பட்டதற்கு காரணம். மழையல்ல.

ஏரிகள், குளங்கள், வனங்கள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51ஏ வரையறுக்கப்பட்டும் ஏனோ ஆட்சியாளர்கள் அதைப் பேணிக் கவனிக்க,காப்பாற்ற தவறி விடுகிறார்கள். எனவே இது போன்ற மழைவெள்ளத்தில் இழப்பும், இறப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

rain1

இந்தியாவிலேயே குளங்கள், ஏரிகள், நீர்பாசனங்கள் தமிழகத்தில் தான் அதிகம். வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர்நிலைகள் இன்றைக்கு பொதுநலவாதிகள் என தங்களை அடையாளப்படுத்தும் அரசியல் சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. தற்போது உள்ள நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டாமா? என்பது தான் இப்போதைய மில்லியன்டாலர் கேள்விகளை அரசை நோக்கி மக்கள் எழுப்பும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கியுள்ளது?

சென்ற 12.11.15 முதல் தொடர் பருவமழை அதுதன் கடமையை செவ்வனே பொழிந்து வருகிறது. ஆண்டுககு மழை சராசரியாக 44செ.மீட்டரில் 48 சதவீதம் இப்போது பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட தாமதமாகவே தொடங்கினாலும் இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் 35செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 7.05 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் இரண்டறக் கலந்து விட்டது.

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. இதில் 20,040குளங்கள் தமிழகப் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு,பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி, போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்து விட்டன. சென்னை போரூர் ஏரியின் பரப்பு 800 ஏக்கர்களாக இருந்ததை தற்போது 330ஏக்கராகச் சுருங்கிவிட்டது. இதுக்கு என்ன காரணம்? ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் போது இவைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் தீர்வு...

mo3_copy

சென்னை நகரில் மட்டும் 36 ஏரிகள் இருந்து, புறநகர் பகுதியில் தற்போது இருக்கும் 15 ஏரிகளின் மொத்தப் பரப்பளவு 2416.51 ஹெக்டேர் அதில் 589.02 ஹெக்டேர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் 37கண்மாய்களில் 30 கண்மாய்கள் இன்றுவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை! காணாமல் போய்விட்டன? காயலில் இரட்டைக் குளம், கற்புடையார் குளம், தருவைகுளம் மாளாக்குளம், கீரிக் குளம், பச்சிரான் குளம் மற்றும் எண்ணற்ற குளங்கள் மற்றும் அதிக ஓடைகளையும் காணவில்லை. அதில் மூப்பனார் ஓடை மட்டும் பதி சுருங்கி வாழ்கிறது, மீதி வீட்டு மனைகளாக வாழ்கிறது. தமிழகத்தில் அதிக நகரங்கள் ஊர்களிலும் ஆக்கிரமிப்புக் காரணங்களால் மழைகாலத்தில் அதிக வெள்ளக்காடாகக் காட்சி தருகின்றன என்பது தான் நிதர்சனம்.

rain2

விவசாய நிலங்கள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் நீர் ஓடைகளை ஆக்கிரமத்து கட்டிய வீடுகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம், சட்டவிரோதமாக புற்றீசல் போல பெருகிய இந்த குடியிருப்பு பகுதிகள் பற்றி கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவேயில்லை. சிஎம்டிஏ, நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்பட பல சம்பந்தபட்ட அரசு நிர்வாகமும் ஆக்கிரமிப்புகளை கைகூலிப் பெற்று வேடிக்கை பார்த்தே வந்துள்ளன என்பதற்க்கு இப்போது கொடுக்கும் விலைதான் இது.

நமதூரும் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்றாண்டும, தற்போதும் தள்ளப்பட்டுள்து. நாம் இதை கவனத்தில் கொண்டு தன்னார்வமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நமக்கு நாமே நன்மைகளை செய்துக் கொள்ளவில்லை என்றால் வரும் காலங்களில் நமது பிள்ளைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக எழுவதற்கு நாமே துணை போனவர்களாகிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம். என்ற சிந்தனையை இதுபோன்ற சீற்றத்தைக் கண்டும் உணரவில்லையானால் நாம் அறிவாளிகள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!

rn2_copy

நதிகளின் நீரை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகள் கலந்து நதிநீர், கடல் நீர் நஞ்சுத்தன்மை அடைந்து பயன்பாட்டுக்கே உதவாத வகையில் சில ஆதிக்க சக்திகள் ஆட்டிப்படைக்கின்றன என்பது அரசுக்கு தெரியாதா?

ஆங்கிலேயர் காலத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் அதன் பின் இதுவரை முழுமையாக தூர்வாரப்படவில்லை. அப்படியே தூர்வாரினாலும் அரைகுறையான பணிகள் மட்டுமல்லாது ஊழல் மலிந்து கிடப்பதால் பணிகள் சரியகா நடப்பதில்லை என்றே சுற்றுவட்டார மக்கள் உரிமை குரல் எழுப்புவது அவ்வப்போது தொலைக்காட்சியில் மட்டுமே காண முடிகிறது! ஏன்? அரசு காதுகள் 'செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறதோ'...?

இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை, ராக்கெட்டை கட்டமைக்க தெரிந்த இந்தியாவுக்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா? முடியும் ! ஆனால் ஊழலற்ற தைரியமான அரசியல் தலைமையால் மட்டுமே இது சாத்தியம்...

ஜப்பானில் மழை வந்தால் ஐந்து நிமிடத்தில் மழைத்தண்ணீர் காணமல் போய் விடுகிறது. ஆனால் நம்மண்ணில் மழை வந்தால் ஐந்து நிமிடத்தில் சாலையே காணாமல் போய்விடுகிறது. காரணம் என்ன? என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். முறையிடுவது யார் இடம்? அரசு இடம் தானே, அந்த அரசே இதுபோன்ற ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வதே சுயலாபத்திற்கு தானே?

இன்றைக்குத் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை மிதக்கிறது, தற்போதைய நிலவரப்படி, தாமிரபரணியில் கடனாநதி, ராமநதி, ஆகியவை கலக்கும் அரியநாகிபுரம் அணைக்கட்டுப் பகுதியில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளமாக வெளியேறுகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையின் 4000 கனஅடி நீர் வீணாகச் சென்று புன்னக்காயல் கழிமுகத்தின் வழியே வங்கக்கடலில் கலக்கிறது.

நிலமைகள் இப்படி இருக்க பாபநாசம் அணையை ஏன் இப்போது திறக்க வேண்டும். விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டார்களா?. பெரிய வெள்ள அபாயம் இல்லையே? அணைiயைத் திறக்க வேண்டிய காரணம் என்ன? அணையைத் திறந்து தண்ணீரை வீணடிப்பதின் நோக்கமென்ன?

papanasam-dam1

தாமிரபரணி - வைகை - காவேரி - தென்பெண்ணை - பாலாறு போன்ற நதி தீரங்களில் வெள்ளக்காடாக வேடிக்கைத் தான் பாக்கின்றோமே தவிர அந்த வெள்ள நீரைச் சேமிக்க ஆட்சியாளர்களால் முடியவில்லையே? பண்டைக் காலத்தில் முன்னோர்கள் திட்டமிட்டு எப்படி நீரைச் சேமிப்பு செய்தார்கள் என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டாமா? நதிகளை தேசியமயமாக்கி கங்கை - காவேரி - வைகை - தாமிரபரண - குமரி மாவட்ட நெய்யாற்றுடன் இணைக்க வேண்டாமா? மழை காலத்தில் வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரை - முறையாக 'திட்டமிடு - வென்று விடு' - என சேமித்து வைத்தால் கோடையில் அண்டை மாநிலங்களை எதிர்பாக்க வேண்டிய அவசியம் ஏன்?

தமிழகம் இம்முறை இன்னும் புயல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அதற்குள் தமிழகம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களுக்கு மேல் மாண்டு விட்டது. 2004 சுனாமியின் போது தமிழகம் 7,996உயிர்களை பறிகொடுத்த போதும், கடுமையான விலை கொடுத்தது,கடலூர் 2011 - தானே புயலின் போதும் பெரும் விலை கொடுத்தது, இப்போது சீரழிகிறது.

cd1_copy_copy

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழிந்துள்ளன. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 25 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும், 50 ஆயிரம் வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆயிரக்கணக் கில் இறந்துள்ளன. 29 ஏரிகள் உடைந்துள்ளன. சுமார் ரூ.1,000 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.

சரியாக ஒருமாதத்துக்கு முன் அக்.16 அன்றே இப்போதைய மழைதொடர்பான எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டது. ஆனால் நாம் கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன?

இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு அபாய புவிச்சுழலைக் கொண்டது ஜப்பான். பேரிடர்களை எதிர்கொள்ளும் கல்விக்கு மிகச் சிறந்த வழி; அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. ஒடிஷா - விடமிருந்து நாம் பாடம் காற்றுக் கொள்ளலாம். தமிழகத்தை விடப் மிகபின்தங்கிய மாநிலம். கோடையில் கடும் வறட்சியிலும், மழைக்காலத்தில் கடும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் மாநிலம் ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'பாய்லின் புயலை' அவர்கள் எதிர்கொண்ட விதம் ஐ.நா சபை உள்பட உலக அரங்கில் ஏராளமானோரின் பாரட்டுகளை ஒடிஷா - வுக்குப் பெற்றுதந்தது என்றால் அந்த அரசு வெள்ளம் வரும் முன் அதுபற்றிய அதிக விழிப்புணர்வுடன் இருந்ததே, செயலாற்றியதே அதற்கு காரணம்!

மழையில் மடியில் சடலங்களை போட்டுக் கொண்டு கதறுபவர்களை காண சகிக்கவில்லை. பாரிஸில் 129 - பேர் உயிரிழந்தால், சர்வதேசத்தின் வெளியுறவுக் கொள்கையே மாறுகிறது, ஆனால் இந்திய மரணங்கள் ஏன் யாரையும் உலுக்குவதில்லை? அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் மாகாணம் 2005 - ல் 'கத்ரினா புயலால் பாதிப்புக்குள்ளானது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் புஷ்ஷுக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள். அதன்பின் நியு ஆர்லியன்ஸ் மாகாண காவல் கண்காணிப்பாளர் எட்டி காம்பல் பதவி நீக்கப்பட்டார். மேயர் ரே நாகீன் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு உள்ளக்கப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.

அமெரிக்கப் பேரிடர் மேலாண்மை முகமை பல மடங்கு மேம்படுத்தப்பட்டது. மக்கள் அங்கு உயிரிழப்புகளை அரசியலாகப் பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் இங்கு உயிரிழப்புகளை வெறும் இழப்பீடுகளாகப் பார்க்கிறார்கள்.

2004 - ம் ஆண்டு அமெரிக்காவின் சாதாரண ஒபாமா 2007 - ம் ஆண்டு அக்கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபரும், அயல் நாடுகளின் சக்கரவர்த்தியும் ஆனார். எப்படி முடிந்தது? அந்நாட்டு மக்கள் அறிவுக்கும்,ஆற்றலுக்குமே முதலிடம் கொடுகின்றார்கள். நம்நாட்டில் ஊழல்களுக்கு முதலிடம் கொடுத்தால்?

ஒபாமா இன்னொரு முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்து வந்தாலே அது சாத்தியம். நாம்நாட்டில் மரணம் வரை கட்சி தலைவரும், ஆட்சியாளரும் ஒருவரே..! உலகம் இப்படி வர்ணிக்கிறது." நீங்கள் கடவுள் நம்பிக்கையுடையவர் என்றால் அமெரிக்க அதிபர் இருக்கை இரண்டாம் கடவுள் ஒருவேளை நீங்கள் கடவுள் நம்பிக்கையில்iலாதவர் என்றால் அமெரிக்கா அதிபர் இருக்கை தான் கடவுள்"

அந்நாட்டில் பதவிக்கு தான் முகவரி நம்நாட்டில் முகத்துக்குத்தான் முகவரி. எனவேதான் அவர்கள் வல்லரசாகவும், நாம் வளைந்த அரசாகவும் இருக்கிறோம்...

கல்லில் கால் மோதினால் காயம் ஏற்படத்தானே செய்யும் இதற்கு யார் காரணம்? வீதியில் கிடந்த கல்லா..? அல்லது அதன்மீது மோதிய நாமா..? இயற்கை விதியோடு இணங்கிப் போகும் போது மனிதன் இன்பமாக இருக்கிறான். அதோடு மோதிக் கொள்ளும் போது துன்பம் அடைகிறான். இயற்கையைக் குற்றஞ்சாட்ட முடியாது, ஒரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது ஆட்சியாளர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? அதிகாரிகள் எதற்கு பணியமர்த்தப்படுகிறார்கள்? அதிகார வர்க்கம் என்ன செய்கிறது?

தமிழகத்திற்கு எதிர்காலத்தில் 30 - லிருந்து 50 சதவீதம் நீர்பற்றாக்குறை ஏற்படும் என்று ஓர் ஆய்வு கணித்துள்ளது. எனவே,விவசாயத்திற்கும், குடி தண்ணீருக்கும் தனியாகவே ஒரு பட்ஜெட்டையே தமிழக அரசு திட்டமிட்டு தயாரிக்க வேண்டும் என்பது அந்த ஆய்வின் கருத்து. தற்போதைய அரசும், 2016 - ல் அமையப் போகும் அரசும் இவைகளை தொலை நோக்கு பார்வை கொண்டு செயல்படும் என்று நம்புவோம்..!

ஆக்கம்: அன்பின் அலாவுதின்

சமூக ஆர்வலர். எழுத்தாளர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh