بسم الله الرحمن الرحيم
Tuesday 16th July 2019 | 13 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
அன்றாட மின்வெட்டும், ஆபத்தான கூடன்குளமும்!அச்சிடுகமின்-அஞ்சல்
05 மார்ச் 2012 மாலை 03:27

சுதந்திரப் போராட்டத்திற்கு பின்பு, நாடு இப்படியான ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தைக் கண்டதில்லை என்கிற அளவுக்கு மக்கள் சாரி சாரியாக சுய விருப்பத்துடன் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது, எந்த ஆசைக்காட்டலுக்கும் பணியாது  தீரத்துடன் போராடும் ஓரே இடம் கூடன்குளம்!

Koodankulam_863403f

பள்ளி மாணவனிலிருந்து பல்போன கிழவன் வரை, தொட்டில் குழந்தையில் இருந்து தொண்டு கிழவி வரை ஒரே உணர்வுடன் கை கோர்த்து போராடுகிறார்கள்.

GP02I4D

பொதுவாக போராட்டம் என்றாலே ஏதாவது 'தேவை' சார்ந்து முன்னிறுத்தி தான் இருக்கும். ஆனால் எங்களுக்கு இது 'தேவையில்லை' 'வேண்டாம்'  'அப்புறப்படுத்துங்கள்'  என்ற கோஷம் விண்ணைப் பிளக்கிறது. அது கூடன்குளம் அணுமின் உலை எதிர்ப்பு போராட்டம்!  200 நாட்களுக்கு மேலாக அது  நடக்கிறது.  இனியும் தொடரும் நிலையில் உள்ளது.

LAT_PROTEST_787288f

அணு என்பது ஆபத்தானது என்ற சிந்தனை, இன்று நேற்றல்ல. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக- அதாவது ஹீரோஷிமா, நாகசாகி (ஜப்பான்) அணுகுண்டு வீச்சிலிருந்தே  உலக சமுதாயம் உணர்ந்து வந்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் மோதல் விளையாட்டாக இருந்த அணு இன்று மக்களின் உயிர் வாழ்க்கையோடு நேரடியாக விளையாடும் ஆபத்தான பொருளாக மாறி இருக்கிறது. அதன் சமீபகால விளையாட்டுக் களமே கூடன்குளம்!

இந்தியாவின் அணுநீர் முழ்கி கப்பலை கட்ட இந்திராகாந்தி ரஷ்யர்களின் உதவியை நாடினார். ஆனால் ரஷ்யர்கள் பதிலுக்கு 8 அணு உலைகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இந்திரா சம்மதித்தார். ஆனால் அவர் 1984-ம் ஆண்டு மறைந்த பின்னர் 1988 நவம்பர் 20-ம் தேதி ராஜீவ் காந்திக்கும், கோர்ப்சேவுக்கும் இடையில் அணுஉலை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 1986 ஏப்ரல் 26 அன்று செர்நோபிலில் வெடித்த அதே ரக அணு உலையை பெயர் மட்டும் மாற்றி இந்தியாவிற்கு விற்றனர். செர்நோபிலில் அது RBMK என்ற பெயரில் இயங்கியது. இந்தியாவுக்கு அது VVER (1000) என்ற புதிய பெயரில் அது விற்பனை செய்யபட்டது. அதுவே இன்று கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ளது. கூடன்குளத்தில் அமைந்துள்ள ஏஏநுசு அணு உலையில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.

kudankulam2

அதன் கண்ட்ரோல் ராடு, அவசர காலமின் சேமிப்பு பாதுகாப்பு அமைப்புக்கள் போன்றவற்றில் ஏராளமான கோளாறுகள் உள்ளன. 'கண்ட்ரோல் ராடுகளின் உதவியோடுதான். யுரேனிய  கம்பிகளை பிரித்து வைக்க வேண்டும். 2006 மார்ச் 6ம் தேதி பல்கேரியாவிலுள்ள கொஸ்விடி என்ற இடத்தில் உள்ள அணுமின் உலையில் இந்த கண்ட்ரோல் ராடுகள் சரியாக இயங்காததால் பெரும் விபத்து ஏற்பட்டது.

அமெரிக்காவின் 'மூன்று மைல் தீவுகள்' ரஷ்யாவின் செர்னோபில் போன்ற இடங்களில் அணு உலை வெடிப்பால் மிகப்பெரும் விபத்துக்கள் ஏற்பட்டது நாம் அறிந்ததே. இதில் செர்னோபிலில் மிகப் பெரிய விபத்து லட்சக்கணக்கானவர்கள் அதில் பாதிக்கப்பட்டனர். அணு உலைகளால் ஏற்படும் விபத்துக்களின் மோசமான பாதிப்பையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் அரசுகள் மறைக்கின்றன. சரியான தகவல் தருவதில்லை.

'மின்சாரம் வேண்டும் என்று கேட்க யாவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது கூடன்குளத்திலிருந்து தான் வேண்டும்'. என கேட்க எவருக்கும் உரிமை இல்லை. மின் தட்டுப்பாட்டால் இன்று நாம் அவதியுறுவது நிஜம். ஆனால் அதற்கு கூடன்குளம் ஒரு தீர்வாகாது. இன்று கூடன்குளத்தில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படும் 1000 MW அப்படியே ஒன்றும் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிட்டிவிடப் போவதில்லை. அணுமின் நிலையம் என்ற பெயரில் அணு ஆயுதம் தயாரிக்கின்றனர். இதுதான் உண்மை. 1998-ம் ஆண்டு பொக்ரானில் சோதிக்கப்பட்ட அணு ஆயுதம் நமது கல்பாக்கத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

பொக்ரானில் அணுவெடிப்பு நிகழ்ந்த போது அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பலருக்கு மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது. அங்கு சென்ற அன்றைய பிரதமர் வாஜ்பாய் 'நாடு விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியுறும் போது சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியத்தான் செய்யும்' என்றார். இன்று கூடன்குளம் அணுமின் நிலையம் ஆபத்தற்றது என்று கூட்டல் போடும். நபர்கள் ஏன் அதை தங்கள் பகுதிக்கு வரவேற்கக் கூடாது? நமதூர் அருகாமையில் இருக்கும் மிக ஆபத்தான தொழிற்சாலைகளை எதிர்த்து விட்டு கூடன்குளம் வேண்டும் என்று போராடுவது. அதற்காக கடையடைப்பு செய்வது முரண்பாடாகதா..?

இன்றும் சிலர் 'எதில்தான் விபத்து இல்லை?' பஸ்ஸில் விமானத்தில் போகும்போது விபத்து ஏற்படவில்லையா? அதற்காக அவைகளை நாம் தவிர்த்து வருகிறோமா...? என்று இயல்பாக கேட்கின்றனர். அந்த விபத்துக்களில் அவைகளில் பயணம் செய்யும் நபர்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அணு விபத்து அவ்வாறானதல்ல. பல கிலோமீட்டர் சுற்றுப்புறம் பாதிக்கும் மக்களின் வாழ்வாதாரமான மண்வளம், நீர்வளம் போன்றவைகளை பல நூறு ஆண்டுகளுக்கு யாரும் பயன்படுத்த முடியாதபடி அது அமையும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான ஹிரோஹிமாவிலும், நாகசாகியிலும் இன்றளவும் அதன் பாதிப்பு உணரப்படுகிறது.

பல ஆயிரம் கோடி பணம் செலவு செய்து உருவாக்கப்படும் இந்த அணு மின் உலையின் ஆயுட்காலம் வெறும் 40 ஆண்டுகள் மட்டுமே. அதன் கழிவுகள் நாற்பதாயிரம் ஆண்டுகளாயினும் அழியாது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரம், மொத்த உற்பத்தியில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே!

தமிழகத்தின் இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கும் கூடன்குளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 'கூடன்குளம் திறக்கப்பட்டால் மட்டுமே தமிழகம் வெளிச்சம் பெறும்' என்ற சிலரது கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. தமிழகத்தை கடந்த பத்து ஆண்டுகளாக ஆள்வோரின் அலட்சியமும் தொலைநோக்கற்ற பார்வையுமே. இந்த மின்வெட்டிற்கு காரணம். 'ஆடத்தெரியாதவன் தெருக்கோணல்' என்றானாம் அது தான் கதை. முன்பு தமிழக மின்சார வாரியம் உற்பத்தி செய்த மின்சாரம், தனியார் கைகளுக்கு என்று சென்றதோ, அன்றே இந்த தலை மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியது. வீணாகும் மின்சாரம், கொக்கி போட்டு திருடப்படும் மின்சாரம் என பல வகையிலும் மின் விரயம் ஏற்படுகிறது. அணைகளில் தூர்வாரப்படாமல் நீர் மின் அளவும் வெகுவாகக் குறைந்துவிட்டது. காற்றாலைகளில் வாங்கிய மின்சாரத்திற்கு பல வருடங்களாக அரசு பணம் கொடுக்கவில்லை. எனவே காற்றாலை அதிபர்கள் அரசுக்கு மின்சாரம் கொடுக்க மறுத்தனர். அனல் மின்நிலையங்களில் தரமற்ற நிலக்கரியை உபயோகித்ததால் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாயின.

'கோடிக்கணக்கான பணம் செலவழித்த பிறகு இவ்வாறு போராடலாமா..? அந்தப் பணம் வீண் தானே...! இப்போராட்டத்தை முதலிலேயே ஆரம்பித்து இருக்கலாமே....' என்பதும் சிலரது வாதமாகும். இதுவும் தவறான வாதமாகும். இந்த அணு உலையின் ஆரம்ப காலம் தொட்டே சிறு சிறு அளவில் போராட்டங்கள், எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடைபெற்றே வந்தன. 1997-ல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தூத்துக்குடியில் வந்து போராடினார்.

இந்த அணுஉலை கட்டுமானத்திற்கு வட நாட்டிலிருந்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்காக இறக்குமதி செய்யப்பட்டனர். அவர்களின் வரவால் அப்பகுதி (கூடன்குளம்) மக்களின் அன்றாட வாழ்வு சற்று சிரமமின்றி நடைபெற்றது. போராட்டத்தில் அப்பகுதி மக்களின் ஆரம்பகால அலட்சியத்திற்கு அதுவே காரணம்.

மக்களின் உயிர் வாழ்வே ஆபத்துக்கு உள்ளாகும் போது பணம் - அது எத்தனை கோடி செலவானால் தான் என்ன? ஸ்பெக்ட்ரம் ஊழல், காமென்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல் இவைகளை விட அணு உலைக்கு செலவழித்த பணம் ஒன்றும் பெரிதல்ல.

தங்கள் நாட்டில் அமையாத தொழில் நுட்ப உதவி மட்டுமே செய்து தரும் ஒரு அணு உலையின் விஷயத்தில் ரஷ்யர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுவது என்ற 'விபத்தே நடக்காது' 'நூறு சதமானம் பாதுகாப்பானது' 'சுனாமி வந்தால் கூட அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றெல்லாம் கூறுபவர்கள் 'விபத்து ஏற்பட்டால் அரசு நஷ்ட ஈடு தராது' என்று ஏன் சொல்கிறார்கள்? என்ன காரணம்? கூடன்குளம் ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது.

நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மிக ஆபத்தான  தொழிற்சாலைகளுக்கு  ஒரு நிலையும், கூடன்குளம் அணுமின் உலைக்கு இன்னொரு நிலையும் எடுக்கப்படுவது நம்மை உள்ளபடியே பலவீனப்படுத்தி விடும்.எனவே கூடன்குளம் ஆதாரவளார்கள் யோசிக்க வேண்டும். மின் வெட்டுக்கு தீர்வு கூடன்குளம் அல்ல.. என்பதையும் அவர்கள் இத்தருணத்தில் உணர்வார்கள் என நம்புகிறோம்.

ஆக்கம் :நமது கட்டுரையாளர்

கே.எஸ் முஹம்மது ஷுஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com