بسم الله الرحمن الرحيم
Tuesday 16th July 2019 | 13 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு!அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஏப்ரல் 2012 காலை 07:17

"கல்வி" என்ற சொல்லின் நேரடிப் பொருள், கற்றுக் கொள்ளல், உலக ஞானத்தை தனக்குள் திரட்டிக் கொள்ளல், ஒரு ஒழுங்கமைவுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளல் என்று பொருள்படம். அதை (கல்வி) விரிவான பொருளில் நோக்கினால், மனிதாபிமானம்- ஒழுக்கம், நன்னெறி, சமூக ஈடுபாடு, இரக்கம், கருணை- இவைகளை உள்ளடக்கியது. அல்லது இவைகளால் உணரப்படுவது கல்வி என்றும் சொல்லலாம்.

"கற்றுக் கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் பிரித்துக் காட்டும் முக்கிய குணம். மனித நாகரீகத்தின் சாராம்சத்தைக் காட்டுவதும் இந்த ஆற்றல்தான். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு, இந்த ஆற்றலை மனிதன் இழக்க நேர்ந்தால், பிற ஜீவராசிகள் அனைத்தும் எண்ணற்ற திறன்களில் தன்னை விஞ்சி நிற்பது அவனுக்குத் தெரிய வரும்" என்கிறார் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

யாருமே சுயமாக கற்பது இல்லை. கற்றுக் கொடுக்கப்படுகிறது. இறைவன் நபிகளாருக்கு "ஓதுவீராக..!" என்று ஜிப்ரீல் (அலை) மூலம் கற்றுக் கொடுக்கிறான். கற்பவர்- மாணவர், கற்றுக்கொடுப்பவர்- ஆசிரியர். இந்த மாணவர், ஆசிரியர் உறவு இன்று தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது? என்று சற்று நிதானமாக கவனித்தால், இன்றைய தமிழகம் கல்வியில் எந்த நிலையில் இருக்கிறது? என்பதை ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.

சென்னையில் ஆசிரியரைக் கொலை செய்த மாணவன் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். இணையத்தில் அது குறித்து நிறைய விவாதிக்கப்பட்டு விட்டது. எனவே நாம் அதைத் தொடவேண்டாம். ஆசிரியர்களின் சீண்டலால் அதுபோலவே நிறைய மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டு தங்களின் இன்றுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவை பெரும்பாலும் கல்வி என்ற அடிப்படையிலிருந்து விலகி "உளவியல்" ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் இது. தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் ஆசிரியர்- மாணவர் உறவு இவ்வளவு மோசமடைந்ததில்லை. இதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்.

பொதுவாகச் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இவைகளில் "கல்வி" கற்றுக்கொடுப்பதில்லை. தேர்வுக்கான பயிற்சி மட்டுமே இங்கு மாணவர்களுக்குத் தரப்படுகிறது. இன்றைய தமிழக் கல்விக் கூடங்கள் வெறும் பயிற்சிக் கூடங்கள் மட்டுமே. தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட "பயிற்சிக்கூடம்" (TRAINING CENTER) நம்மவர்களில் தவறாக "தரமான கல்விக்கூடங்கள்" என அழைக்கப்படுகின்றன.

இந்த பயிற்சியைக் கூட சரியான முறையில் தராத பள்ளிகள் தேர்வின் போது மாணவர்களுக்கு "உதவி" செய்கின்றன. என்ன மாதிரி உதவி அது? அண்மையில் நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் - கணிதத் தேர்வு அன்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்களே "காப்பி" அடிக்க உதவி செய்கிறார்கள் என்ற தகவல், அம்மாவட்ட ஆட்சியர் காதுகளுக்கு எட்ட, அவர் தனது பரிவாரங்களோடு அதிரடியில் அப்பள்ளியில் சோதனையிட்டார். அச்சோதனையின் போது கிடைத்த விவரங்கள் இதோ:-

 • கணிதத் தேர்வுக்கான விடைகள் பள்ளி அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். 20 ஜெராக்ஸ் பிரதிகள் கைப்பற்றப்படுகின்றன.
 • தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் (Examiner) விடைகள் அடங்கிய துண்டுத்தாள்கள் (பிட்) இருக்கிறது. இவை எந்த மாணவரிடம் இருந்தும் கைப்பற்றியதல்ல. பின் அவருக்கு இது எப்படி வந்தது? பதில் இல்லை!
 • எட்டு ஆசிரிய, ஆசிரியைகளின் செல்போன்களில் தேர்வு நேரத்தின் போது ஏராளமான அழைப்புகள் பதிவாகி இருந்தன.
 • ஒரு ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவனின் பெயர், தேர்வு எண், அத்தோடு 200 ரூபாய் பணம் கைப்பற்றப்படுகிறது. (தினமணி –நெல்லைபதிப்பு- 18.4.2012)

இதற்கு ஆசிரிய, ஆசிரியைகள் மட்டும் பொறுப்பல்ல. பெற்றோர்களும் இதற்கு உடந்தை. தனது பையன் எஸ்.எஸ்.எல்.சி அல்லது ப்ளஸ்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால், பிறகு உயர்கல்விக்கு போகும்போது கொடுக்கப்படும் "தண்டத்தொகை" யாவது குறையுமே..!. இதன் காரணமாக நன்றாகப் படிக்கும், படிக்காத மாணவர் என்ற வேறுபாடு இன்றி எல்லோருக்கும் இந்த "பிட்கள்" சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக அந்த பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியான உடன், டுட்டோரியல் கல்லூரிகளின் விளம்பரமும், இதழ்களில் வெளியாகும். சுவரொட்டிகள் நிறைய ஒட்டப்படும். இப்போது எந்தப் பாடத்தில் ஒரு மாணவர் பெயிலாகிறாரோ... அதை மட்டும் திரும்ப எழுதினால் போதும் என்ற சிஸ்டம் வந்த பிறகு, டுட்டோரியல் கல்லூரிகளின் நிலை ஆட்டம் கண்டுவிட்டது. இப்போது அந்த இடத்தையும் பள்ளிகளே பிடித்துக் கொண்டன. தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படத்தோடு பள்ளிகளின் விதவிதமான அரைப்பக்க, முழுப்பக்க விளம்பரங்கள் இதழ்களை நிறைக்கின்றன.

நாமக்கல் பிராய்லர் கோழிகளுக்கு மட்டுமல்ல, இந்த விதமான "பயிற்சிக் கோழி"களுக்கும் சிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு, அவர்களை தூங்கவிடாமல் கூட பயிற்சி அளிக்கப்படுகிறது என கேள்விப்பட்டேன். மாணவர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக மட்டும் கற்கப்பட வேண்டிய கல்விக்கு இவ்வளவு 'விலை' கொடுத்துதான தீர வேண்டுமா? என வேதனைப்பட்டேன்.

இன்று தொழில், வணிகம் போன்றவை கார்ப்பரேட் முதலாளிகளின் கைவசம் போய்விட்டதால், கல்வி இருந்தால் மட்டுமே, பிழைக்கமுடியும் என்ற சிந்தனை பெற்றோர்களை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக அவர்கள் எது செய்யவும் தயங்குவதில்லை. இவர்களில் பலருக்கு தங்களது மாணவப் பருவத்தில் தனது கற்கும் திறன் எப்படியிருந்தது? என்பது மறந்து போயிருக்கும். அல்லது "அந்தக் காலத்தை" நினைக்க விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்களின் ஜீன் களைக்கொண்டு பிறந்துள்ள தங்களது குழந்தைகள் மட்டும் எப்பாடுபட்டாவது, ஒரு டாக்டராகவோ, என்ஜீனியராகவோ, ஆகிவிட வேண்டும். எவ்வளவு பேராசை பார்த்தீர்களா...?

இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கென "கோத்தாரி கமிஷன்" போன்றவை அரசால் போடப்பட்டன. ஆனால் நடைமுறையில் எந்தப் பயனும் இல்லை.

கல்வி என்பது ஆசிரியர்- மாணவர் உரையாடலாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் இங்கு ஆசிரியர் எஜமான் போலும், மாணவர்கள் அடிமைபோலும் இருக்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் போது, அவன் "அடங்காபிடாரி" அடையாளப்படுத்தப்படுகிறான். ஆசிரியர்கள் சொல்வதை மட்டும் மாணவர்கள் தங்கள் தலைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். இத்தகு கல்வி முறையை பாப்லோ பிரையரோ போன்ற நவீன கல்வியாளர்கள் "வங்கிமுறைக்கல்வி" என்று குறிப்பிடுகிறார்கள். பாடப்பொருட்களை ஆசிரியர், மாணவர்களின் தலைக்குள் திணிப்பதையே அவர் இவ்வாறு அடையாளப்படுத்துகிறார்.

வகுப்பறையில் மாணவர்கள் பட்டை தீட்டப்படுவதாக பலரும் நம்புகின்றனர். உண்மையில் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும்? அவர்கள் எதைக் கற்க ஆவலுடன் விரும்புகிறார்கள்? என்று பெரியவர்களுக்கு அக்கறை இல்லை. குழந்தைகளின் மலரினும் மெல்லிய உலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கருத்துக்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. இதனால்தான் "வகுப்பறையில் கூழாங்கற்கள் பட்டைத் தீட்டப்படுகின்றன. வைரங்கள் ஒளிமங்கிப் போகின்றன" என்று வேதனைப்படுகிறார் தமிழகக் கல்வியாளர். அ. ஜான் லூயி.

சமீபத்தில் சென்னைக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ப்ளஸ்டு தேர்வில், மிக அதிக மதிப்பெண் எடுத்து தேறி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பிய ஒரு மாணவன் தனது பெற்றோர்களின் கண்டிப்பால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கு ஒரு இரண்டு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி நம் அனைவரின் நெஞ்சையும் உலுக்குவதாகும்.

காப்பியடிக்கும், காசு கொடுத்து படிக்கும் இதுபோன்ற மாணவர் சமுதாயத்தில் இருந்துதான் ஆசிரியர்களும் தோன்றுகின்றனர். இன்று அரசு பள்ளியின் ஆசிரியப்பணி என்பது "பொன் முட்டையிடும் வாத்து" போன்றது. கைநிறைய ஊதியம், தேவையான விடுமுறை நாட்கள், டியூஷன் போன்ற எக்ஸ்ட்ரா வசதிகள். தேர்வுத்தாள் திருத்தும்பணி. இன்னபிற வசதிகளுடன் அவர்கள் குறையில்லாமல் வாழ்கிறார்கள். இதில் அர்பணிப்பு உணர்வுடன் பணி செய்பவர்கள் மிகக்குறைவே. நிறைய ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருபவர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள், வட்டிக்கு பணம் கொடுத்து கந்து வட்டி முதலாளியாக மாறிப்போனவர்கள் என்று ஆகிவிட்டார்கள். (எல்லா ஆசிரியர்களையும் நாம் குறிப்பிடவில்லை)

எனவே இன்றைய தமிழகத்தின் கல்விச்சூழல் நினைத்து பெருமைபடத்தக்கதாக இல்லை. கல்வி வணிகமயமாகப் போய்விட்டது என்று கூறப்படுகிறது. அந்த வணிகத்தில் கூட 'வணிக அறம்' என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், எந்த தார்மீக அறமும் இல்லாத வெறும் சூதாடிகள் மடமாக நமது கல்வித்துறை இன்று மாறிப்போய் விட்டது. இந்த நிலைமையில் இருந்து தமிழகத்தை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்

கம்பன் பிறந்த தமிழ்நாடு" – என்றார் பாரதியார்.

இன்றைய நிலையில்; "கல்வியால் நொந்த தமிழ்நாடு" என்று அதை சற்று மாற்றிப் பாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

துணை நின்ற நூலும், இதழ்களும்:-

1. "தமிழகத்தில் கல்வி" – வே. வசந்தி தேவி – சுந்தரராமசாமி

காலச்சுவடு பதிப்பகம். நாகர்கோவில் -1

2. "உயிர் எழுத்து" – மாதஇதழ் - ஏப்ரல் 2012

3. "புத்தகம் பேசுது" - மாதஇதழ் - மார்ச் 2012.


ஆக்கம் : K. S. முஹம்மது ஷுஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com