மண வீடும், மரண வீடும்...! கே.எஸ் முஹம்மத் ஷுஐப் கட்டுரை!!அச்சிடுக
23 டிசம்பர் 2014 காலை 09:23

திருமண அழைப்பிதழை வீடுவீடாக சென்று விநியோகிக்கும் அந்த சகோதரர் அந்த அழைப்பிதழை எனது கையில் தந்து விட்டுச் சென்ற அடுத்த கணமே ..பள்ளிவாசல் ஒலிபெருக்கி அலறத் தொடங்கியது. பொதுவாக பாங்கு நேரம் அல்லாத வேறு நேரங்களில் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி முனங்கத் தொடங்கினாலே...

அது நல்ல அறிகுறியல்ல ..என்று ஒரு எண்ணம் ஊரில் பல பேருக்கு இருக்கிறது. ஏனெனில் ,அது பெரும்பாலும் மரண அறிவித்தலுக்குரிய நிகழ்வாகவே இருக்கும். அன்றும் அப்படித்தான் ஒரு மரண அறிவித்தலை மும்முறை அறிவித்துவிட்டு அது ஓய்ந்தது.

IMG_20141221_103511338

எனது ஒரு கையில் வாழ்வின் துவக்கத்தை அறிவிக்கும் ஒரு திருமண அழைப்பிதழ் .இன்னொரு புறமோ...வாழ்க்கையின் முடிவை அறிவிக்கும் அந்த துக்க செய்தி. இரண்டுக்குமிடையே எனது மனம் கிடந்தது அல்லாடியது. வாழ்வு என்பதுதான் என்ன...?

அதை நாம் எவ்வாறு வாழ்ந்து தீர்க்கிறோம்...?

வாழ்வின் முடிவில் நாம் எதை அடைகிறோம்...?

வாழ்க்கையின் அந்த சந்தோஷ நாட்களில் எதை நாம் இழக்கிறோம்...?

காலண்டரில் தேதியின் தாள்கள் ஒவ்வொன்றாகக் கிழிக்கப்படுவதைப் போலவே நமது வாழ்க்கையின் நாட்களும் கழிந்து போகின்றன. பிறப்புக்கும் ,இறப்புக்கும் இடையே நாம் ஆடும் சடுகுடு ஆட்டம்தான் வாழ்க்கை. "சொற்ப துனியாவில் அற்ப வாழ்க்கை "என்று நமது பெரியவர்கள் மிக அழகாகச் சொல்வார்கள்.

"ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் 'எனபது நபி மொழி. மரணமிலாப் பெருவாழ்வு இங்கு யாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் யாரும் மரணத்தை விரும்புவதில்லை. அளவிட முடியாத துன்பத்தில் உழலுபவனும் கூட துன்பத்தின் கூடிய சுமையால் ..."ஆண்டவா...எனக்கு மொவுத்தை தந்து விட மாட்டாயா...?"

என்று மனம் நொறுங்கிப் புலம்பலாம். ஆனால் அந்தப் புலம்பலில் கூட வாழ்வின் ருசிதான் தெரியும். வாழ்க்கையின் ஆதர பலமே நம்பிக்கையின் அந்தக் கடைசித் துளிதான்.

IMG_20141221_102946951

அல்லாஹ் கூறினான் : இறை நம்பிக்கையுள்ள என் அடியாருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சுவர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும் 'என்று நபிகளார் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹ் புகாரி -6424)

ஆக மரணத்துக்கும் கூட இறைவன் நற்க்கூலி வழங்குகிறான். என்றாலும் நாம் எவருமே மரணத்தை விரும்புவதில்லை. காரணம்....?வாழ்வின் ருசியும், வாழ்க்கையின் போதாமைகளும்தான்.

மணவாழ்வு ஒருவனை முழுமையாக்குகிறது. திருமணம் எனது வழிமுறைகளில் ஓன்று என்று கூறிச் சென்றார்கள் நபி (ஸல் )அவர்கள். திருமறை கூறுகிறது...

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே உங்களின் நல்லொழுக்கம் உள்ள (ஆண் மற்றும் பெண் ) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன அருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான்

( 24:32 )

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருவன் திருமணம் செய்துகொள்ளவே விரும்புகிறான். ஆண்-பெண் துணை எனபது இயற்கையானது. மனிதர்களின் உணர்சிகளுக்கு வடிகாலாக இருப்பது அது. வாழ்வின் இளம்பருவத்தில் மனிதனுக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுப்பது. ஆனால் ஓன்று மரணம் அதுவாகவே வருவது.

திருமணத்திற்கு நாம் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். குலம், கோத்திரம், அழகு வசதி இவைகள் மட்டுமே இன்று திருமணங்களை நிச்சயிக்கிறது. இப்போது புதிதாக கல்வியும் அதில் சேர்ந்து கொண்டது.

பெண்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் விரும்புகிறார்களோ, இல்லையோ.. மணமகன் கட்டாயம் விரும்புகிறான்.

திருமணம் என்றாலே, உள்ளம் குதுகலிக்காத மனிதர்கள் யாரும் இல்லை. அதுபோல மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்களும் இல்லை. இந்த மகிழ்ச்சியும், பயமும் கலந்த சரிவிகித வாழ்க்கையைத்தான் இந்த உலக வாழ்வு அர்த்தப்படுத்துகிறது. மகிழ்ச்சி அடையவேண்டிய ஓன்று.

பயம்.....? விலக வேண்டிய ஓன்று. இந்த இரண்டும் ஒன்றோடு ஓன்று கலந்த சிந்தனையைத்தான் அந்த திருமண அழைப்பிதழும், அந்த மரண செய்தியும் என்னுள் தோற்றுவித்தது.

ஆக்கம் : கே.எஸ் முஹம்மத் ஷுஐப் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh