38வது சென்னை புத்தகக்காட்சி - ஒர் பார்வை! எழுத்தாளர் கே.எஸ் ஷுஐப் கட்டுரை!!அச்சிடுக
30 ஜனவரி 2015 மாலை 04:07

அரசு பொருட்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி, இவைகளிலிருந்து எந்த வகையில் மாறுபட்டது புத்தகக்காட்சி? 'காட்சி எனும்போதே, அதில் ஒரு கொண்டாட்டம், கோலாகலம் தொக்கி நிற்பதை நாம் அறிவோம். 'காட்சி' என்றைக்குமே வெகுமக்களுக்கானது. இதுபோன்ற கொண்டாட்டம். கோலாகலம், ஆரவாரக் காட்சிகளுக்கு சென்னை புத்தகக்காட்சியும் விதிவிலக்கல்ல. சோளப்பொறி ஸ்டால்கள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், பாம்பே அப்பளம், 15 ரூபாய்க்கு கிடைக்கும் சாயா, உப்பு, மிளகை மேலே தூவி விற்கும் வெள்ளரிக்காய் பத்தைகள் - இவைகள் எல்லாமே... எல்லாமே... அந்த வகையில் சார்ந்தவைதான்!

ks2

புத்தகம் என்பது ஒரு பொருளா? என்றால் பொருள்தான்! தாள்களாலும், அட்டைகளாலும் ஆன காகிதம் - பேப்பர் பேக் - அதனளவில் அதுவும் ஒரு பொருள்தான்! ஆக, புத்தகமும் பொருள் சார்ந்த ஒரு காட்சிதான். ஆனாலும் சற்றே மாறுபட்ட காட்சி. அந்தப் பொருள் கண்கள் மட்டும் வேண்டுவதன்று. மனமும், மூளையும், உணர்வுகளும் சேர்ந்தே வேண்டும் ஒரு பொருள் புத்தகம்.!

ஒரு புதிய புத்தகத்தை கையில் தொடும்போது, நமக்குத் தெரியவராத ஒரு பொருளை, புதுப் பெண்டாட்டியை முதன் முதலில் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிக் கலவைகளே நெஞ்சில் கொப்பளிக்கிறது. இது நிஜம்! வெறுமே உதாரணத்துக்கு எழுதப்படுவதல்ல..!

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக, புத்தகங்களோடு வாழ்கிறேன், அல்லது மல்லுக்கட்டுகிறேன். வாழ்க்கையும்கூட சில நேரங்களில் சலித்துப்போகும். வாழ்வோடு மல்லுக் கட்டுகிறமோ என்றும் ஒரு தோற்றம் ஏற்படும். சில புத்தகங்களோடு அவ்வாறு மல்லுக்கட்டியிருக்கிறேன். ஆனாலும், அவைகள் எக்காலத்தும் என்னில் சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அது மனதைக் கவரும் புத்தகமோ, அல்லது மண்டையை உடைக்கும் புத்தகமோ, இரண்டும் ஒன்றுதான் என்ற ஞானநிலைக்கு, மேலான நிலைக்கு எப்போதோ வந்துவிட்டவன் நான்.

நூற்களில்லாமல், வாழ்க்கையில்லை. வாழ்வின் வழிகாட்டியாக, வாழ்வை அர்த்தப்படுத்துவதாக, அல்லது வாழ்க்கையை உணரச் செய்வதாக நூற்களே எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

சென்னை புத்தகக்காட்சி என்பது எனது நீண்ட நாளைய கனவு. சென்னைக்குப் போவதும், அங்கு நடைபெறும் ஒரு புத்தகக்காட்சியில் கலந்து கொள்வதும், என்ன நிலவுக்குப் போகும் காரியமா..? அதென்ன கனவு? என்று நீங்கள் கேட்கலாம். நாம் எளிதானது என்று நினைக்கும் காரியங்கள் எவையும், ஒரு சந்தர்ப்பத்தில் கை கூடுவதில்லை. நாம் பயணம் செய்ய நினைத்திருக்கும் ஒரு ரயில் அல்லது பஸ் தவறிப்போய், அதனால் நாம் நினைத்த இடத்தை, குறித்த நேரத்தில் அடைய முடிவதில்லையல்லவா..? அதேபோன்றுதான் இந்த சென்னை புத்தகக்காட்சியும் எனக்குப் பல வருடங்களாக 'டேக்கா' கொடுத்து வந்தது.

இந்த வருடமும் கூட, போயே தீர்வது என்று நான் தீர்மானிக்கவில்லை. என் ஆசைகளையறிந்த, என்பால் நல்லெண்ணம் கொண்ட சில நல்ல உள்ளங்கள் தீர்மானித்தன. அதற்கு இணங்கியது மட்டுமே நான் செய்த காரியம்.

சுமார் 2 லட்சம் சதுரஅடி பரப்பளவு, 700 ஸ்டால்கள், 5 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட சென்னை புத்தகக்காட்சி நந்தனம் லுஆஊயு உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 9-ம் நாள் துவங்கியது. கடந்த 77-ம் ஆண்டு சென்னை காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் வெறும் 30 ஸ்டால்களோடு மட்டுமே துவங்கிய சென்னை புத்தகக்காட்சிக்கு இது 38-வது ஆண்டு! 700 ஸ்டால்கள் மட்டுமே அந்த மைதான கொள்ளளவில் அமைக்க முடிந்ததாம். இன்னும் ஸ்டால்கள் அமைக்க வேண்டி நின்ற 120 ஸ்டால்களுக்கு இடம் தர முடியவில்லையாம். சென்ற புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் BAPASI சங்கம் வருடந்தோறும் இக்கண்காட்சியை ஜனவரி மாதத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்துகிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய, நடுவான, மிகச்சிறிய பதிப்பகம் முதற்கொண்டு பக்கத்து மாநிலங்கள் மற்றும் அகில இந்திய அளவில் இயங்கும் மிக முக்கியமான பதிப்பகங்கள் யாவும் இக்கண்காட்சியில் கடை விரித்திருந்தன. தமிழ்நாட்டின் முண்ணனி புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் எல்லோரும் பங்கு கொண்டனர்.

ks1_copy

தினமும் குறும்பட திரையிடலும், பிரபல எழுத்தாளர்கள், ஆளுமைகள் கலந்து கொள்ளும் மெல்லரங்கமும் திடலிலேயே நடந்தேறின. புத்தக வெளியீகளும் நடைபெற்றன.

சாரிசாரியாக மக்கள் திரண்டு வந்தனர். வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட, ஏதாவதொரு புத்தகத்தொடு திரும்பினர். 5 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றன. ;வை-பை' இலவச சேவையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

எதை வாங்குவது..? எதை விடுவது? திகைப்புதான் மேலோங்கியது. பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கை கொள்ளும் அளவே நூற்களை வாங்க முடிந்தது. பத்து சதவீதம் கழிவு கொடுத்த பின்பும் கூட, பெரிய அனவில் புத்தகங்களை வாங்க முடியவில்லை. தட்டு நிறைய அல்வாவை முன்னே வைத்து, அதில் உள்ள முந்திரி பருப்பை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று ஒருவருக்கு கட்டளையிட்டால் அவனது நிலை என்னவோ, அதுதான் எனது நிலையும்!

புத்தகக்காட்சிக்கு என்றே முதன்முறையாக புதிதாக சென்னை வந்திருந்த இலங்கை சகோதரர், எழுத்தாளர் இன்ஸாப் ஸலாஹுத்தீன் (மீள்பார்வை மீடியா) அவர்களும் என்னைப் போலவே திகைத்தார்.

தம்பி முஜாஹித் அலி, தம்பி எஸ்.கே.சாலிஹ், சகோதரர் இன்ஸாப், தம்பி சாளை பஷீர் இவர்களோடு கண்காட்சியை சுற்றி வந்தேன். நிறைய எழுத்தாளர் மற்றும் ஆளுமைகளையும் சந்திக்க முடிந்தது. 'காலச்சுவடு' கண்ணன், 'உயிர்மை' மறுஷ்யபுத்திரன், எழுத்தாளர் கௌதமசித்தார்த்தன், தமிழ்ஸ்டூடியோ அருண், 'சமரசம்' துணையாசிரியர் சகோதரர் சையத் சுல்தான், 'சமநிலைச்சமுதாயம்' ஜாபர்சாதிக் பாக்கடா, 'அடையாளம்' சாதிக், ;விருட்டம்' அழகியசிங்கர் எஸ்.ராமகிருஷ்ணன் எல்லோருடனும் உரையாடினேன்.

KS3

எழுத்தாளர் இன்சாப், கௌதம சித்தார்த்தனையும், தமிழ்ஸ்டூடியோ அருணையும், நேர்காணல் செய்தார். முழு இரண்டு மாலைப் பொழுதுகள் புத்தகக் காட்சியில் இனிதே கழிந்தது.

KS4

பைகளில் சுமக்க முடியாத அளவுக்கு புத்தகங்களை அள்ளிக் கொண்டு பலர் நடந்து வந்ததை நான் பார்த்தேன். என்னதான் இணையம், முகநூல், ட்விட்டர் என்று வந்தாலும் காகிதத்தாலான அந்த புத்தக வாசிப்பின் சுவையே தனிதான் என்பதை இக்காட்சிகள் நிரூபித்தன.

சரி, நான் என்ன புத்தகங்கள் வாங்கினேன்..? பட்டியல் இதோ...

1. 'நிழலற்ற பெருவெளி' - தாஹர் பென் ஜுலோவ்ன்

(மொ.பெ. எஸ்.அர்ஷியா)

2. நிலவொளி எனும் இரகசியத்துணை - எம்.டி.முத்துக்குமாரசாமி

3. யாருடைய எலிகள் நாம்? - சமஸ்

4. அரேபிய இரவுகளும், பகல்களும் - நாகிப் மக்பூஸ்

(மொ.பெ. சா.தேவதாஸ்)

5. இஸ்லாத்தில் இசை  - கலாந்நி முகம்மது இமாரா

6. அரேபிய இடைகால முதல் ஜஸீதா வரை - எம்.எஸ்.எம்.அனஸ்

7. காடோடி - நக்கீரன்

8. யூத பயங்கரவாத ரகசிய அறிக்கை - செர்கி ரிலஸ்

9. சங்பரிவார் - நேற்று, இன்று, நாளை - எம்.கே.ஏ.முகம்மது தாஹா

இப்புத்தகக்காட்சியில் 11 லட்சம் வாசகர்கள் கலந்து கொண்டனர். பத்து லட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. 15 கோடி புத்தகங்கள் விற்பனையாயின.

ஆக்கம் : கே.எஸ் முஹம்மது ஷுஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh