கொலை கொலையா முந்திரிக்கா...! எழுத்தாளர் கே.எஸ் முஹம்மது ஷுஐப் கட்டுரை!!அச்சிடுக
24 பிப்ரவரி 2015 மாலை 11:09

என்ன நடக்கிறது நமதூரில்...?

இன்று நடந்த சம்பவம் மனதைப் பதற வைப்பதாகும். இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே அ தி மு க தலைவியும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாள் அக்கட்சியினரால் மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் வேளை.

ஒலிபெருக்கியில் எம் ஜி ஆரின் பாடல்கள் மிகுந்த சப்தத்தோடு ஒலிக்கிறது. ஐ சி ஐ சி வங்கி முனையிலும் அதே போன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். தொண்டர்கள் சட்டையில் அணிந்த பேட்ஜோடு, கையில் கொடியோடும் திரண்டு நிற்கும் அந்த உற்சாகப் பொழுது...!

stop-killing-love-people-131028344696

பேருந்து நிலையத்தின் உள்ளே சிவபெருமாள்-கலைச்செல்வி தம்பதியினரால் நடாத்தப்பட்டுவரும் அந்த பத்திரம் எழுதும் ஆபீசில் சில இளைஞர்கள் கையில் அரிவாளோடு நுழைகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் சிவபெருமாளை அரிவாளால் ஓங்கி வெட்டுகிறார்கள். முதல் வெட்டு தோள்பட்டையில் விழுகிறது. அலறித்துடிக்கிறார் சிவபெருமாள். ரத்தம் ஆறாகப் பாய்கிறது. பக்கத்து கடையில் இருப்பவரிடம் போய் தஞ்சமடைகிறார்.அவரையும் தள்ளிவிட்டு கும்பல் மறுபடியும் சிவபெருமாளை மாறி மாறி வெட்டுகிறது. மனைவியின் கண் முன்னே சிவபெருமாள் துள்ளித் துடித்து இறந்து போகிறார். கும்பல் தயாராக இருக்கும் பைக்கில் ஏறி ஓடி விடுகிறது.

போலீஸ் ஸ்டேஷன் இல்லாத ஊர்...தகராறு இல்லாத ஊர் ..அமைதியான மக்கள் வாழும் ஊர் என்று பாரம்பரியமாகப் பெருமை பேசி வந்த நமது ஊரின் அழகிய முகத்தில் ஒரு ரத்தப் பொட்டாக தெறித்திருக்கிறது இந்தக் கொலைச் சம்பவம். அதுவும் நட்டநடுப் பகலில் ..ஊர் கூடியிருக்கும் வேளையில்....!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆத்தூர் கீரனூரிலும்,ஸ்ரீவைகுண்டத்திலும் கூட இதுபோன்ற கொலைகள் ...பட்டப்பகலில் நடந்து முடிந்திருக்கிறது. காலையில் நாளிதழைத் திறக்க முடியவில்லை. கொலைச் செய்திகளும்,கொள்ளைச் செய்திகளும் பக்கங்களை நிறைக்கின்றன. ஒரு வாரத்துக்கு முன்பு வள்ளியூரில் ஒரு பொறியியல் பயிலும் மாணவன் கொலை செய்யப்படுகிறான். ஒரு இருபது நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இரண்டு பள்ளி மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

சட்டம் ஒழுங்கின் சரிவு என்று மட்டும் இந்த சம்பவங்களைப் பார்க்க முடியாது. யாரை யார் கொலை செய்வார்கள் என்று எண்ணியவாறு காவல்துறை யார் பின்னாலும் சதாகாலம் அலைந்து கொண்டிருக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல.

பிறகு என்ன நடக்கிறது....? முன்பெனில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் எப்போதோ ஒருமுறை அபூர்வமாகத்தான் நடக்கும். போலீசும் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துவிடுவார்கள். அதே சமயம் அந்தக் கொலைகள் ஆதாயக் கொலைகள் அல்ல. கொலையுண்டவரால் பாதிக்கப்பட்ட நபர் அவரைக் கொலை செய்திருப்பார். துண்டித்த தலையை கையில் ஏந்தியவாறு காவல் நிலையத்தில் சரண் அடைந்த எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவரது ஒரே நிம்மதி தனது "எதிரி ஒழிந்தான் " எனபது மட்டும்தான். அதன் பிறகு கிடைக்கப்போகும் நீண்ட நாள் சிறை வாழ்க்கை குறித்தோ, அல்லது தூக்குத் தண்டனை குறித்தோ அவர் கவலை கொள்வதில்லை. சிலர் போதிய சாட்சியமின்றி குற்றம் நிரூபிக்கப் படாமல் விடுதலையான சம்பவங்களும் உண்டு.

ஆனால் இன்று கொலை செய்யப்படுபவருக்கும், கொலையாளிகளுக்கு எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. இவர்கள் கூலி வாங்கிக்கொண்டு கொலை செய்பவர்கள். வன்மத்தை வாடகையை பெற்றுக்கொண்டு வஞ்சம் தீர்ப்பவர்கள். பெரும்பாலும் படித்து வேலையில்லாமல் ஊர் சுற்றும் இளைஞர்கள் அல்லது குடும்ப வறுமையை போக்க வழியில்லாமல் திகைத்து நிற்பவர்கள், அல்லது சாதி வெறி பிடித்த இளைஞர்கள் அல்லது கொலை செய்வதையே ஒரு திரில் லாக செய்பவர்கள்..இவர்கள் போன்றவர்களைப் பயன்படுத்தித்தான் இன்று கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமனைக் கொன்றவர்களுக்கும், சங்கரராமனுக்கும் என்ன சம்பந்தம்...? முன்னாள் மந்திரி நேருவின் தம்பி ராம்ஜயத்தைக் கொன்றவர்களுக்கும், ராமஜெயத்துக்கும் என்ன சம்பந்தம்...?எதுவுமில்லை.

இதுபோன்ற கூலி கொலையாளிகள் கொலை செய்த பிறகு ஒரு வாரத்துக்கு எங்கேயும் தங்க மாட்டார்களாம். சதாகாலம் பயணத்திலேயே இருப்பார்களாம். செல்போனும் பயன்படுத்த மாட்டார்களாம். பரபரப்பு சற்று அடங்கிய பிறகு எங்காவது ஜன சந்தடி மிக்க நகர்ப்புறங்களில்...அல்லது மின்சார வசதி கூட அற்ற பட்டிக்காட்டில் கூலி வேலை செய்வார்களாம். பிறகு எங்காவது வடமாநிலங்களுக்குத் தப்பியோடி அங்கு இரண்டு,மூன்று வருடங்களைக் கழித்துவிட்டு ..பிறகு தங்களது சொந்த ஊருக்கு அண்மையில் உள்ள நகரத்தில் வந்து தங்குவார்களாம். ஒரு முறை ஜூனியர்விகடன் இதழ் இவர் போன்றவர்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தது.

வயதில் குறைந்த இளைங்கர்களை கொலைக்கு பயன்படுத்துவதில் இன்னொரு நோக்கமும் உண்டு. முதலில் இவர்களின் வேகமான செயல்பாடு, இளம் கன்று பயமறியாது போன்ற துணிச்சல்...முக்கியமாக ஒருவேளை இவர்கள் போலீஸ் பிடியில் அகப்பட்டுக்கொன்டாலும் ,வயதைக் காரணம் காட்டி இவர்களை சிறைக்கு அனுப்பாமல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி ஒரு மூன்று வருட தண்டனையோடு இவர்களை வெளியே கொண்டுவந்து விடலாம் என்ற சுலப தண்டனைத் திட்டம். கொலைக்குத் திட்டமிடுபவர் ஒன்றுமறியாத அப்பாவி போல வெளியே இருக்க ,காசுக்கு ஆசைப்படும் இதுபோன்ற இளைஞர்கள் குற்றம் செய்து தங்களின் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். அல்லது குற்றம் செய்தவர்கள் தப்பிக்க,வேறு சிலர் " நாங்கள்தான் இந்தக் கொலையை செய்தோம் "என்று போலியாகக் கூறி நீதிமன்றத்தில் சரணடைந்து போலீஸ் கவனத்தை திசை திருப்புகிறார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் அப்படித்தான் நடந்தது.

அதுவுமல்லாமல்...துல்லியமான , எவ்வித அலிபியும் இல்லாத திட்டமிட்ட நுணுக்கத்துடன் ,தொழில் நேர்த்தியுடன் செயப்படும் கொலைகள். பல கொலை வழக்குகளில் குற்றவாளிகளை போலீஸ் நெருங்கக்கூட முடியவில்லை. திணறுகிறார்கள். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. இதுவரை சந்தேகத்தின் பெயரில் கூட எவரையும் கைது செய்ய போலீசால் முடியவில்லை. எத்தனையோ போலீஸ் புலிகள் இவ்வழக்கில் துப்பு துலக்கி விட்டார்கள். எதுவும் பயனில்லை. பிறகு ராமஜெயத்தைக் கொன்றவர்கள் யார்...? யாருக்கும் தெரியவில்லை.

பெரும்பாலும் சொத்து தகராறுகள்...குறிப்பாக ரியல் ஸ்டேட் தொழில் பயன்பாட்டுக்கு வந்ததும்தான் கொலைகளின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகி விட்டதற்கு ஒரு காரணம் என்று கூடச் சொல்லலாம். ரியல் ஸ்டேட் தொழிலில் பெரும் பெரும் தாதாக்கள்தான் மூலதனம் போட்டு தொழில் செய்கிறார்கள். இவர்கள் தங்களின் தொழிலுக்கு குறுக்கே ஒரு ஈ,எறும்பு வருவதைக் கூட விரும்ப மாட்டார்கள்.

அடுத்தபடியாக சாதி. இன்று தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளில் நூற்றுக்கு அறுபது சதவீதம் சாதி மோதல்கள், அல்லது சாதி விட்டு சாதி மாறி காதலிப்பது, அல்லது வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது, ...இவைகளினால் மட்டுமே நடக்கிறது. தருமபுரி இளவரசன் ஒரு நல்ல உதாரணம்.

இதுவுமல்லாமல் பொருளுக்காக, அல்லது மித மிஞ்சிய காமவெறியால் நடக்கும் கொலைகள், இன்னபிற கொலை வகைகளும் எல்லா நாட்களும் நடக்கின்றன.

இவைகளுக்கெல்லாம் நாம் மேலே சொல்லிய காரணங்கள் தவிர்த்து உளவியல் ரீதியாக வேறு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று ஆராய்ந்து பார்த்தால்...இன்று இளைஞர்களிடையே நிலவும் கடும் ஆன்மீக வறட்சி, சக மனிதன் என்ற சாதாரண மனிதாபிமானம் கூட இல்லாதிருப்பது, சினிமா கதாநாயகர்களின் அரிவாள் தூக்கிய ஓங்காரக் கூச்சல் ஏற்ப்படுத்தும் மனவியல் தாக்கம்....இப்படி நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம். நகரங்களை விடவும் கிராமப்புற இளைஞர்களே இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

நகரத்து இளைஞர்களின் கவனத்தை மடை மாற்ற அங்கு எத்தனையோ சங்கதிகள் உள்ளன. கிராமத்தில் அவை எதுவும் கிடையாது. சாதி வெறியும்,சின்னச்சின்ன தகராறுக்கு எல்லாம் அரிவாளைத் தூக்கும் கலாச்சாரமும் கிராமங்களிலேயே அதிகம்.

இன்றைய ஒரு நகர்ப்புற இளைஞனுக்கு இருக்கும் வசதி வாய்ப்புக்கள் ,எதிர்காலத்தில் கிராமப்புற இளைஞனுக்கு கிடைக்கும்போது நிலைமைகள் மாற ஒரளவேனும் வாய்ப்பு உண்டு. அதை அரசும் ,சமூகமும் ஓன்று சேர்ந்து ஏற்படுத்தித தரவேண்டும்.

ஆக்கம் : கே.எஸ் முஹம்மது ஷுஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh