بسم الله الرحمن الرحيم
Tuesday 19th June 2018 | 05 ஷவ்வால் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சங்கத்தமிழனும் சுங்கச்சாவடியும்...! எழுத்தாளர் கே.எஸ் முஹம்மத் ஷுஐப் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
26 மார்ச் 2015 மாலை 11:50

மனித உடலில் ரத்தநாளங்கள் எவ்வாறு ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்துச் செல்கிறதோ,..கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு பணியைத்தான் நாடு முழுவதும் விரிந்து பரந்திருக்கும் சாலைகள் செய்கின்றன. ஆமாம்...ரத்தநாளங்களும்,சாலையும் ஒன்றேதான். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்திற்கு தடைகள் ஏற்படின் அது எவ்வாறும் மனித வாழ்வுக்கே ஆபத்தாக முடியுமோ...அதுபோல சாலைப் போக்குவரத்தில் தடைகள் ஏற்ப்பட்டால் நாடே இயங்காமல் ஸ்தம்பித்து விடும். இந்த யுக்த்தியைப் புரிந்துகொண்டுதான் இப்போது எதற்கெடுத்தாலும்,சாலை மறியல் என்று நாடு ரோட்டில் வந்து உட்க்கார்ந்து விடுகிறார்கள்...

சாலைகள் வெறும் வாகன பயன்பாட்டுக்கு மட்டுமானதல்ல..அது மனித உணர்வுகளையும், இதயங்களையும் இணைப்பது. தூர தூர பிரதேசங்களில் நாம் வாழ்ந்தாலும் நம்மை இணைப்பது சாலைகள் மட்டுமே...!அண்மையில் நான் கன்னியாகுமரி சென்றிருந்தபோது ,அங்குள்ள தங்கநாற்கர சாலையின் முடிவில் ஒருநிமிடம் நின்றேன். அதன் தலைப்பகுதியான காஷ்மீரில் உள்ள அந்த சாலையின் முகப்பிலும் என்போன்று வேறு யாரோ ஒருவர் அந்த நிமிடம் நின்றிருக்கக் கூடும். எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் இடைவெளி...? என்றாலும் என்னையும், அந்தக் கண்ணுக்குத் தெரியாத மனிதனையும் அந்த ஒருநிமிடமேனும் அந்த சாலை இணைத்தது என்றே சொல்ல வேண்டும்.

tol_22

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 234 சங்கச் சாவடி மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில்தான் அதிக அளவில் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் தான் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. அவ்வப்போது கட்டணங்களும் அதிகப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சரக்கு வாகன கட்டணங்கள், பேருந்துகளின் கட்டணங்கள் அதிகரிக்கின்றன. இதனால் ஏற்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவை பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்றன.

இப்போது இந்தியாவெங்கும் புதிய புதிய சாலைகள் உலகத் தரத்துக்கு ஈடாகப் போடப்பட்டு வருகின்றன. மினுமினுக்கும் கருப்பில் ஒரு கறுப்புப் பட்டாடை போல அவை இந்தியாவெங்கும் விரிந்து கிடக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏறத்தாழ 33.4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் இணைப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த சாலைகள் பெரும்பாலும் பொதுமக்களிடமிருந்து அந்நியப்பட்டே நிற்கின்றன. பெரு நகரங்களை மட்டுமே இச்சாலைகள் இணைக்கின்றன. கிராமப்புறச் சாலைகள், சிறு நகரங்களை இணைக்கும் சாலைகள் எப்போதும்போலக் குண்டும், குழியும்தான். பெரும் நகரங்களை இணைக்கும்

இந்த சாலைகளைப் போடுவதற்கு முதல் பலியே மரங்கள்தான். ஒவ்வொரு நூறு கிலோமீட்டர் சாலைகள் போடப்பட 5000 பெரும் மரங்களை வெட்டி வீழ்த்துகிறார்களாம். "சாலை ஓரங்களில் அசோகர் மரம் நட்டார் " என்று நாம் படித்த பள்ளிப் பாடங்களுக்கு நேர் முரணாக இது இருக்கிறது. தூத்துக்குடி-மதுரை வழித்தடத்தில் நீங்கள் பயணித்தாலும் சரி, அல்லது மதுரை-திருச்சி வழித்தடத்தில் பயணித்தாலும் சரி, ஒரு பாலைவனத்தினூடே பயணிக்கும் உணர்வையே பெறுவீர்கள். வழியெங்கும் ஒரு மரம் மட்டை ..பச்சையே உங்கள் கண்ணுக்குப் புலனாகாது. சாலைகளின் நடுவே மரங்களை நட்டு அதற்க்கு லாரிகளில் தண்ணீர் பாய்ச்சும் அரபுநாட்டு பேஷனையும் இங்கு பார்க்கலாம். ஆனால் ரோடு என்னவோ மணலில் நீளவாக்கில் விரித்து வைத்த கருப்பு ரிப்பன்தான். சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு இந்த சாலைகள் ஒரு வரப்பிரசாதம் என்பதை மறுக்க முடியாது. மூடிய கண்ணாடிக்குள் ஏ.சி யைப் போட்டுக்கொண்டு நூறு கி மி வேகத்தில் காரில் சென்றால், கார் ஓடாது நண்பர்களே..! சும்மா அப்படியே வழுக்கிக் கொண்டு செல்லும்...!!

மேலை நாடுகளிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும் நாம் பார்த்து அனுபவித்த இந்த சாலை அனுபவங்கள் இப்போது நமது தாய்நாட்டிலும் காணக்கிடைக்கிறது...ஆனால் அங்கு மட்டுமல்ல..உலகில் வேறு எங்கும் காணப்படாத கொடுமையும் இங்குதான் நடக்கிறது.சாலைகளில் பயணிக்க உலகில் வேறு எங்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை. பாதுகாப்புக்காகவும், வாகன சோதனைக்காகவும் மட்டும்தான் அங்கு சாலைகளின் நடுவே தடுப்பரண்கள் இருக்கும். ஆனால் இங்கு ஒவ்வொரு ஐம்பது கிலோமீட்டருக்கும் இடையே "டோல் கேட் "  எனும் சுங்கச் சாவடிகளை அமைத்து மேற்கொண்டு பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கிறார்கள்.

472

அதுவும் நியாயமில்லாத அதிகக் கட்டணம். அரசு சார்பில் இதைத் தனியார் நிறுவங்களே வசூல் செய்கின்றன. இவைகளில் பல முறைகேட்டிலும் ஈடுபடுகின்றன. பெங்களூர்- ஹர்கிடா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒரு தனியார் நிறுவனம் முறைகேடாக அதிகக் கட்டணம் வசூலிக்கிறது என்று புகார் வந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அங்குள்ள சுங்கச் சாவடிகளை அதிரடியாகச் சோதனையிட்டதில் கணக்கில் வராத 1.87 கோடி ரூபாய்களைக் கைப்பற்றியுள்ளனர். (தினகரன் -23 3 2015 நெல்லைப் பதிப்பு )

இது ஏதோ கார்களை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினை ..நமக்கென்ன...?என்று சும்மா இருந்துவிட முடியாது. இப்போது ஓரளவு நடுத்தர வசதிகள் உள்ளவர்கள் கூட கார்களை வைத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. 1951 இந்தியாவில் ஓடிய வாகனங்களின் மொத்த எண்ணிக்கை வெறும் ஐந்து லட்சம் மட்டும்தான். இப்போது அது 58 கோடியாக பெருகிப்போயுள்ளது.இன்னமும் அதிகரிக்கக்கூடும். நாளுக்கு நாள் வாகனகளின் உற்பத்தியும் ,அதை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே வசதியுள்ள பெரும் பணக்காரர்கள் மட்டும்தான் வாகனங்களை உபயோகிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

மக்கள் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். வாகனங்கள் வாங்கும்போதே அதற்க்கு சாலை வரி (Road Tax ) யையும் சேர்த்தேதான் செலுத்துகிறார்கள். பிறகு எதற்காக நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தனியே கட்டணம் செலுத்த வேண்டும்...?இது அரசே அடிக்கும் பகல் கொள்ளையல்லவா...?கோடிகள் செலவு செய்து சாலைகள் போட்டோம். அந்த செலவை ஈடு செய்யத்தான் கட்டணம் வசூலிக்கிறோம்...என்று அரசு சால்ஜாப்பு சொல்கிறது. எத்தனை கோடிகள் செலவு செய்தீர்கள்...?

அதற்கு கட்டணமாக இதுவரையில் வசூலான தொகை எவ்வளவு...?இன்னமும் செலவு செய்த தொகையில் பாக்கி இருக்கிறதா..? அல்லது செலவு செய்த தொகை மொத்தமும் வசூலாகி விட்டதா...?எதற்கும் அரசிடமிருந்து பதில் இல்லை. தினம் தினம் இந்த சுங்கச் சாவடிகளை ஆயிரக்கணகான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஒவ்வொரு சுங்கச் சாவடியும் லட்சங்களில் பணத்தை அள்ளுகிறது. ரோடு போடுவதற்க்கான செலவையும் மிஞ்சியே கட்டணங்களை இன்னமும் வசூல் செய்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதை உணர்ந்தே சமீபகாலமாக சுங்கச் சாவடிகளில் அடிக்கடி தகராறுகளும், வீண் பிரச்சினைகளும் தோன்றுகின்றன.

எது எதற்கோ கூச்சல் போட்டு ஊரைக் கூட்டும் எந்தக் கட்சியும் இந்த அநியாய வசூல் குறித்து குரல் எழுப்புவதில்லை. நாட்டின் எந்தப் பகுதிக்கும் தங்கு தடையின்றி செல்லும் உரிமையை பொதுமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. அந்த அரசியல் சட்டத்தையே மீறும் வகையாக இதுபோன்ற பகல் கொள்ளை வசூல்கள் ஒரு சட்ட பூர்வமான அரசாலேயே செய்யப்படுவது துரதிருஷ்டவசமாகும்.

tol_chn

இது குறித்து பொதுமக்களின் கோரிக்கைகள் வந்ததாலோ...என்னவோ..சமீபத்தில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது...அதாவது ஐம்பது கோடிக்கும் உட்பட்ட செலவில் போடப்பட்டுள்ள நாட்டின் 68 சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிலுள்ள இரண்டு சாலைகள் அடங்குமாம். அது எந்த சாலைகள் என்று தெரியவில்லை.

இரண்டு சாலைகள் மட்டுமல்ல...எல்லா சாலைகளிலும் உள்ள இந்த வசூல் மையங்களை அரசு நிரந்தரமாக மூடி பொதுமக்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சியில் உப்புக்கு போடப்பட்ட வரியைக் காட்டிலும் மோசமான இந்த பயண வரியை அரசு ஒழித்துக்கட்ட முன்வர வேண்டும்.

குறிப்புகளில் உதவி

"யாருடைய எலிகள் நாம் ?" – சமஸ்

துளி வெளியீடு. சென்னை.

கட்டுரை ஆக்கம் : கே.எஸ் முஹம்மது ஷுஐப்

 

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com