தள்ளாடும் தமிழகம்...அல்லாடும் அரசியல் கட்சிகள்..! எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஐப் கட்டுரை!!அச்சிடுக
06 ஆகஸ்ட் 2015 காலை 09:42

மதுவிலக்குப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.எங்கே பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி ,மது பாட்டில்களை தரையில் போட்டு உடைத்து...மது வெள்ளமென தெருக்களில் ஆறாக பாய்ந்தோடுகிறது. அரசியல் கட்சியினரும், மாணவர்களும், வேறு சில இடங்களில் பொதுமக்களுமே இதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். குடிக்கு எதிரான இந்தக் காட்சிகள் இதுவரை தமிழகம் காணாத ஓன்று. சுதந்திரப் போராட்ட காலத்திலும் கூட காங்கிரஸ் கட்சி இதுபோன்ற கள்ளுக்கடை மறியலில் இறங்கி கள்ளுப்பானைகளை அடித்து உடைத்து நொறுக்கிய காட்சிகள் இருந்தது எனினும், அது இந்த அளவுக்குப் பரந்துபட்ட ஒரு நிகழ்வாகவும் அது இல்லை. அப்போது கள்ளுக்கடைகளை அரசு நடத்தவும் இல்லை. இந்த அளவுக்கு குடிப்பழக்கம் அப்போது விரிவடைந்திருக்கவும் இல்லை.

dr1_copy

உலகின் ஆதி தொழில் என்று இரண்டைச் சொல்வார்கள். அந்த இரண்டில் ஓன்று இந்த மது. காடுகளில் வாழ்ந்த அந்த ஆதி மனிதன் கூட போதைக்கு அடிமையாக இருந்தான். சங்க காலத் தமிழகத்தில் ஆணும்,பெண்ணும் கூடி "தேறல் "என்னும் மது உண்டு களித்தார்கள் என்ற செய்தியெல்லாம் சங்க நூற்களில் காணக்கிடைக்கின்றன. எல்லாக் காலத்திலும் தீவிரமான உடல் உழைப்பில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அது உடல் வலிக்கு மாற்றாகப் பயன்படும் ஒரு மருந்தாகவே பெரும்பாலோரால் உட்கொள்ளப்பட்டது.

இன்றைய நவீன மதுவின் வரலாறு சுதந்திரத்திற்கு பின்னால் தொடங்குகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிப்படையான மது விற்பனை இல்லாவிட்டாலும் ,அந்தஸ்த்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் "பெர்மிட் "வாங்கிக் குடித்தார்கள். ஆங்காங்கே கள்ளச்சாராய விற்பனையும் இருந்தது. அதன் தொடர்ச்சியான போலீஸ் வம்படி வழக்குகள் ,பிரச்சினைகளும் இருந்தன.என்றாலும் பரவலான முழு மதுவிலக்கும் அமுலில் இருந்தது. தி மு க ஆட்சிக்கு வந்ததும் அண்ணா முதல்வராக இருந்த இரண்டு ஆண்டுக்காலத்திலும் மதுவிலக்கு தொடர்ந்தது.

கருணாநிதி முதல்வராகிய பின்புதான் மதுவிலக்கை ரத்து செய்யும் முடிவுக்கு வந்தார். கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு 30 8 1971 ல் மதுவிலக்கு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது. "மதுவிலக்கை ரத்து செய்யும் மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யப்படும் "என்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சொன்னதால் மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கருணாநிதி அதற்க்குக் காரணமும் கூறிக்கொண்டார். மூதறிஞர் ராஜாஜி, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் போன்ற மூத்த தலைவர்கள் கருணாநிதியின் வீடு தேடி சென்று கேட்டுக்கொண்டும் கருணாநிதி தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அன்று தொடக்கம் இன்று வரையிலும் மது தமிழக மக்களை பேய்போல் பிடித்தாட்டுகிறது. மதுவைக் கொண்டு வந்த கருணாநிதி 1974 ம் ஆண்டு அதை ரத்தும் செய்தார். அதன் பிறகு இரண்டே ஆண்டுகளில் அவரது ஆட்சியையும் கலைக்கப்பட்டது. கருணாநிதி வீட்டுக்குப் போனார்.

அன்றைக்கு தமிழ் நாட்டு அரசுக்கு வரி வருவாய் மூலம் கிடைத்த மொத்த வருமானம் 210 கோடி எனில் ,மது விற்பனை மூலம் கிடைத்த தொகை மட்டும் 26 கோடியாகும்.இன்றைக்கு அது பன்மடங்கு பெருகி நிற்கிறது. பிறகு ஆட்சிக்கு வந்த எம் ஜி ஆரும் மதுவிலக்கை கடுமையாக அமுல்படுத்தினார்.

மதுவிலக்குக் கொள்கையில் ஐந்து கடுமையான அவசர சட்டங்களை அப்போதைய எம் ஜி ஆர் அரசு கொண்டுவந்தது. அச்சட்டப்படி "மதுவிலக்கு சட்டத்தின் கீழ் முதல் முறை கைது செய்யப்பட்டால் 3 ஆண்டுச் சிறை,இரண்டாம் முறை கைது செய்யப்பட்டால் 7 ஆண்டு சிறை, மூன்றாவது முறை கைது செய்யப்பட்டால் நாடு கடத்தல்..."என்று அந்தச் சட்டம் சொன்னது.

"சர்வாதிகார ஆட்சியில் கூட இப்படி ஒரு சட்டம் இருக்காது..."என்றார் அப்போது கருணாநிதி.

"என் இறுதி மூச்சு உள்ளவரை மதுவிலக்கை அமுல்படுத்துவேன் .இது எனது தாயின் மீது ஆணை"என்று கூறிய எம் ஜி ஆராலும் அதைத் தொடர முடியவில்லை. கள்ளச் சாராய சாவுகளும், போலீஸ் கெடுபிடிகளும் ,தனது சொந்தக் கட்சியில் இருந்தும், எதிர்க் கட்சியிலிருந்தும் அவருக்கு கடும் எதிர்ப்பை சம்பாதித்துக்கொடுத்தன. 1980 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அ தி மு க பெற்ற தோல்விக்கு எம் ஜி ஆர் கடுமையாக அமுல்படுத்திய மதுவிலக்கும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக 1 5 1981 ல் தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளுக்கடைகளும்,சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. விஸ்கி,பிராந்தி,ஒயின் போன்ற வெளிநாட்டு மது வகைகள் உற்பத்தி செய்வதற்கு கூட்டுறவு உற்பத்தி சங்கங்களுக்கும் ,முதலில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுத்தார் எம் ஜி ஆர். டாஸ்மாக் துவங்கப்பட்டது அப்போதுதான்.

பாலாஜி டிஸ்டிலரீஸ்,எம் பி டிஸ்டிலரீஸ், மோகன் புருவரீஸ் அன்ட் டிஸ்டிலரீஸ், சிவாஸ் டிஸ்டிலரீஸ், சாபில் டிஸ்டிலரீஸ் போன்ற ஐந்து நிறுவனங்களுக்கு மட்டுமே எம் ஜி ஆர் அப்போது அனுமதி கொடுத்தார். மற்ற நிறுவனங்கள் இதற்குள் நுழைய பல்வேறு தடைகள் இருந்தன. 2001 ல் ஆட்சிக்கு வந்த ஜெயலிதா மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார்.

மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ,அவர் பங்குக்கு அவரும் நிறைய மது பான ஆலைகளுக்கு அனுமதி கொடுத்தார். எஸ் என் ஜே டிஸ்டிலரீஸ், கால்ஸ் டிஸ்டிலரீஸ், எலைட் டிஸ்டிலரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அன்ட் ஒயின் (பி )லிமிடெட், கிங் டிஸ்டிலரீஸ் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தார். தி மு க ஆட்சியில் மிடாஸ் நிறுவனத்தில் இருந்தும், அ தி மு க ஆட்சியில் தி மு க சார்பு நிறுவனங்களிலிருந்தும் தங்கு தடையின்றி மது கொள்முதல் செய்யப்பட்டது. இப்போதும் செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் தி மு க அமைச்சர்கள் டி ஆர் பாலுவுக்கும், ஜெகத்ரட்சகனுக்கும் சொந்தமான மது ஆலைகள் இருக்கின்றன. மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

dr2_copy

"தற்போதும் 31 சதவீதம் மது தி மு க சார்பு மது ஆலைகளில் இருந்தும், மிடாஸ்சிடமிருந்து 20 சதவீதமும், மீதி 51 சதவீதம் நாம் மேலே குறிப்பிட்டுள்ள வழக்கமான ,ஆரம்பத்தில் இருந்தே மது உற்பத்தி செய்யும் ஆலைகளில் இருந்தும் பெறப்படுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த வரி வருவாய் தற்போது 96,000 கோடி. இதில் 30,000 கோடி ரூபாய் மது விற்பனை மூலம் கிடைக்கிறது .அதுபோல மொத விற்பனை வரி வசூல் 72,000 கோடி. இதில் மது விற்பனை வரி மூலம் மட்டும் 22,000 கோடி கிடைக்கிறது.

இதுபோன்ற ஒரு சூழலில் மது விற்பனை மூலம் ஆளும் கட்சிக்கு இருக்கும் சாதகமான அம்சம் உணரத் தக்கதே. ஆனால் " மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்க்குச் சமமானது "என்றார் அண்ணா. ஆனால்,அந்த வெண்ணெய்தான் இன்று ஆட்சிக்கே அஸ்த்திவாரமாய் இருக்கும் கொடுமையை என்ன சொல்ல...?

இச்சூழலில் இரண்டு மூன்று தலைமுறைகளே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி ,சதா காலமும் போதையில் மிதந்துகொண்டு, ஒரு ஆரோக்கியமற்ற சமூகமாக ஆவதைத் தடுக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இன்று வைகோ முதற்கொண்டு வேறுபல தலைவர்களும் முன்னெடுக்கும் குடிக்கு எதிரான இந்தப்போர் உண்மையிலேயே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் செய்யப்படுகிறதா...?அதன் பின்னணியில் இவர்களின் உள்ளார்ந்த அரசியல் அபிலாசைகள் இல்லை என்று எவராவது சொல்ல முடியுமா...?எனக்குத் தெரிந்து உண்மையாகவோ, அல்லது பொய்யாகவோ பா ம க மட்டுமே ஆரம்பத்தில் இருந்து மதுவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதன் மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் மதுவுக்கு எதிரான தீர்மானம் ஓன்று கட்டாயம் வாசிக்கப்படும். ராமதாசும் அது குறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

ஆனால் நேற்று வரை இதுகுறித்து எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத தமிழகத்தின் பிரதான கட்சிகள் ...இன்று பெரியவர் சசி பெருமாளின் சவத்தை முன்வைத்து ஒரு கடைசி நேர ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவே தோன்றுகிறது. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி தொடக்கி ,சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வரை முன்னெடுக்கும் மது ஒழிப்பு போராட்டம் வெறும் வன்முறையில் முடிந்திருப்பது அது போகும் சரியான திசை வழியைக் காட்டவில்லை. காவல்துறையின் அடக்குமுறையை மட்டும் ஒரு சேர உரத்த குரலில் கண்டிக்கும் நாம் வன்முறையில் ஈடுப்பட்ட மாணவர்களைக் கண்டிக்கத் தயங்குவதேன்..? நிறைய மாணவர்கள் மது பாட்டிலைத் தூக்கிக் கொண்டு ஓடும் அவல நிகழ்வையும் வேதனையுடன் காணக் கூடியதாக இருக்கிறது. இதுதான் மது ஒழிப்பு போராட்டமா..?

பாரபட்சமின்றி ஒரு கண்ணோட்டமிட்டால்...மதுவிலக்கு எனபது தமிழகத்தில் இந்த ஐம்பது ஆண்டுகளில் நிறைவேற்றக் கடுமையான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. கருணாநிதியும் எம் ஜி ஆரும் அவ்வப்போது அறிவித்துப் பின் கைவிட்ட மதுவிலக்கு அறிவிப்புகளே அதற்க்குச் சாட்சி. காரணம், இங்கு பெரும்பாலான அரசியல் கட்சிகளின் மேல் மட்ட,கீழ் மட்ட தலைவர்கள், தொண்டர்கள் ,அமைப்புக்கள் வரை ஏதோ ஒருவகையில் மதுவோடும், மது உற்பத்தியோடும் தொடர்பு உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

நிறைய பேருக்கு அது கணிசமான வருவாயைக் கொடுத்து வருகிறது. இதில் ஆளும் கட்சி,எதிர்க் கட்சி வேறுபாடில்லை. வெவ்வேறு ஊர்களிலும்,நகரங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் வெவ்வேறு கட்சி நிவாகிகளில்ன் கைகளில் இருக்கின்றன எனபது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்...? இந்த லட்சணத்தில் இவர்கள் மதுவை ஒழிக்கிறேன் என்று கிளம்பினால் ..அதை யார் நம்புவார்கள்...?

எனவே இதைப் பெரிதாக முன்னெடுத்துச் சென்று  ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியுமா...?

அதன் பிறகு தாங்கள் விரும்பியதுபோல மது நிர்வாகத்தை தங்களின் கைக்குள் கொண்டுவந்து அதைத் தங்கள் வசப்படுத்த முடியுமா...? என்பதற்காகத்தான் இங்கு இவளவு கூத்துக்களும், ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன அல்லாமல், மக்களின் நலன் கருதியல்ல எனபது உறுதி.

கே.எஸ் முஹம்மத் ஷுஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh