بسم الله الرحمن الرحيم
Friday 22nd September 2017 | 01 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சமஸ், நீங்களுமா? : மவ்லவீ ஆய்வாளர் எம்.எம். அப்துல் காதிர் உமரீ!அச்சிடுகமின்-அஞ்சல்
16 பிப்ரவரி 2016 மாலை 11:36

இறைவனின் சாந்தி நம் அனைவருக்கும் நிலவட்டும்!

ak_umari

அன்பிற்குரிய தோழர் சமஸ் அவர்களுக்கு! இறையருளால் நலம்; நலமே என்றும் நாட்டம்!
04/02/2016 வியாழன் அன்று தி இந்து தமிழ் நாளிதழில், “இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்? என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை தொடர்பாக இக்கடிதம் எழுதுகிறேன்.

என் பெயர் எம்.எம். அப்துல் காதிர் உமரீ, நான் ஓர் இஸ்லாமிய எழுத்தாளர்; திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்; ஹதீஸ் – நபிமொழி ஆய்வாளர். பல நூல்கள் எழுதியுள்ளேன். நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல. நான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் மட்டுமே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன் தோழரே!

முதலில் நான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மனதைக் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கடிதத்தை நான் எழுதவில்லை. இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டு அரசை, காவல் துறையை, இராணுவத்தை, ஏன் நீதிமன்றத்தையே நம்ப முடியாமல் இருந்த காலகட்டங்களில் உங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் நியாயமான எழுத்துக்களும், விமர்சனங்களும் எங்களுக்கு ஊக்கம் அளித்து வந்தன. நீங்கள் தற்போது எழுதியுள்ள இந்தக்கட்டுரை எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்துத்துவாவிற்குச் சாதகமாக இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதியுள்ளீர்கள் என நான் நினைக்கவில்லை. முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருக்கும் தர்கா வணங்கிகளின் கருத்தை நீங்கள் உள்வாங்கி இவ்வாறு எழுதியுள்ளீர்கள் என்றே நான் கருதுகிறேன். அவர்கள்தான் இவ்வாறு பேசிவருகிறார்கள் என்பது ஊர் அறிந்த விஷயம்.

முதலில் தங்களுக்கு இஸ்லாம் குறித்து சொல்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

1. இறைவன் ஒருவன்தான். பலர் அல்ல. அந்த ஒரே இறைவன்தான் மனிதனையும், இந்த அண்ட சராசரத்தையும், அதில் அடங்கியுள்ள ஒவ்வொன்றையும் படைத்து பாதுகாத்து வருகிறான். அந்த ஒரே இறைவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும்; படைப்பினங்களில் எதையும் வணங்கக் கூடாது.
2.இந்த உலகில் மக்கள் வழிதவறியபோதெல்லாம், அதாவது, மனிதனையும், இறந்தவர்களின் சமாதிகளையும், கல்லையும், மண்ணையும் சுருக்கமாகச் சொன்னால் படைப்பினங்களை வணங்கி அக்கிரமங்கள் செய்துவந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தன் தூதர்களை மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அனுப்பிக் கொண்டே இருந்தான்.
3.இறைவன், தன் தூதர்களுடன் மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்கள் அடங்கிய வேதங்களையும் வழங்கினான். அந்த வேதங்களில் படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் படைப்பினங்களில் எதையும் வணங்கவே கூடாது. அது மன்னிக்க முடியாத குற்றம் என்பது மிகத் தெளிவாக உள்ளது. இவ்வாறு இறைவன் அனுப்பிய தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபியாவார். அவருக்கு இறைவன் வழங்கிய இறுதி வேதம்தான் திருக்குர்ஆன்.
4.இறைவேதம் திருக்குர்ஆனில் மனித குலத்திற்குத் தேவையான அனைத்துச் சட்டங்களும் இறைவனால் வழங்கப்பட்டுள்ளன. இது வெறும் ஆன்மிக நூல் அல்ல. உலக மக்களின் வாழ்க்கை வழிகாட்டியாக இருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம், வணிகம், நீதி, நிர்வாகம், உரிமைகள், கடமைகள் என ஒவ்வொரு சட்டமும் திருக்குர்ஆனில் இருக்கிறது.
5. திருக்குர்ஆனில் உள்ளபடி வாழ்ந்து வழிகாட்டிய இறைவனின் இறுதித் தூதர்தான் முஹம்மத் நபியவர்கள். அவர் கடவுள் தன்மை பெற்றவர் அல்ல.
6. திருக்குர்ஆன் மற்றும் நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி மட்டுமே ஒரு முஸ்லிம் வாழவேண்டும். இதற்கு மாற்றமாக எந்தக் கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றினாலும் அல்லது இத்துடன் வேறு எதையும் சேர்த்துக் கொண்டாலும் அவர் முஸ்லிமாக இருக்கமுடியாது.
7. பிற மதங்களின் கொள்கை கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்வது கூடாது. அப்படி வாழ்பவர் முஸ்லிம் என்ற தகுதி இழந்துவிடுகிறார்.
8.மரணத்திற்குப் பின் மனிதனை மீண்டும் உயிர் கொடுத்து இறைவன் எழுப்புவான்; மறுமை நாள் என்று சொல்லக்கூடிய அந்நாளில் இந்த உலகில் மனிதன் செய்த ஒவ்வொரு குற்றத்திற்கும் இறைவன் தண்டனை கொடுப்பான். அவ்வாறே நன்மை செய்த ஒவ்வொரு மனிதனுக்கும் தக்க கூலியை இறைவன் கொடுப்பான். அதுதான் சுவர்க்கம், நரகம் என திருக்குர்ஆன் கூறுகிறது. இறைவனுக்கு இணையாக படைப்பினங்களில் ஒன்றை மனிதன் கருதினால் அதை இறைவன் மன்னிப்பதே இல்லை. அவனுக்கு நிரந்தர நரகம் என இறைவன் கூறுகிறான்.
9.இஸ்லாம் என்றால் சாந்தி – அமைதி இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுதல் என்று பொருள். இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது ஒரு முஸ்லிமின் கடமையாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் மட்டுமே இந்த உலகத்தில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும். இதற்கு மாற்றமாக எந்த ஒரு வழியிலும் மனித குலம் நிம்மதியை, அமைதியை அடையவே முடியாது. இன்று உலகம் முழுவதும் அமைதியின்மை இதை உணர்த்துகிறது.

மேற்கண்ட இந்த விஷயங்களைப் போதிக்க வந்தவரே முஹம்மத் நபியவர்கள். சவுதி அரபியா என்று அழைக்கப்படும் அரபு நாட்டில் உள்ள கஅபா என்னும் இறைஇல்லத்தில் அன்றைய அரபு மக்கள் சிலைகளை வைத்து வணங்கி வந்தார்கள். அந்த சிலைகளில் முஹம்மத் நபியவர்களுக்கு முன்பு வந்த இறைத்தூதர்களின் சிலைகளும் இருந்தன. நல்லோர்களின் சிலைகளும் இருந்தன. அவ்வாறே இறந்தவர்களின் சமாதிகளையும் மக்கள் வழிபட்டுவந்தார்கள். இது தவிர இன்னும் ஏராளமான மூட நம்பிக்கைகள் மற்றும் சமூகக் கொடுமைகளும் மக்களிடம் குடிகொண்டிருந்தன. இவற்றை எல்லாம் களைவதற்கே இறைவன் இறுதி வேதம் திருக்குர்ஆனை கொடுத்து தன் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை உலகிற்கு அனுப்பினான்.

அரபு மக்கள் அல்லாஹ்வை ஏற்காமலோ நம்பாமலோ இல்லை. எனவேதான், அவர்கள் அப்துல்லாஹ் என பெயர் வைத்தும் இருந்தார்கள். முஹம்மத் நபியவர்களின் தந்தைக்குக்கூட அப்துல்லாஹ் – அல்லாஹ்வின் அடிமை என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அந்த அரபு மக்களிடம் உங்களைப் படைத்தது யார் என்று கேட்டால் அல்லாஹ் (இறைவன்) என்றே சொன்னார்கள். சிலைகளின் பெயர்களை அவர்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு உணவளிப்பது யார் என்று கேட்டாலும், மழைபொழியச் செய்வது யார் என்று கேட்டாலும் அல்லாஹ் என்றே கூறினார்கள். ஆனாலும், அவர்கள் சிலைகளையும்,சமாதிகளையும் வணங்கி வந்தார்கள். காரணம் கேட்டால் இவை அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்துரைக்கும் எனக் கூறிவந்தார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்களின்) செவிப்புலன்கள் மற்றும் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (ஒவ்வொரு) காரியங்களையும் நிர்வகிப்பவன் யார்? என (தூதரே அவர்களிடம்) கேளும்! உடனே, “அல்லாஹ்” எனக் கூறுவார்கள். “அவ்வாறாயின், அவனுக்கு அஞ்சமாட்டீர்களா?” எனக் கேளுங்கள். அவனே உங்களின் உண்மை இரட்சகன் அல்லாஹ். உண்மைக்குப் பின்னே வழிகேட்டைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்? (திருக்குர்ஆன் 10:31,32)

“வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி இருப்பவன் யார்? என நீர் இவர்களிடம் கேட்டால், “ஏக இறைவன் என்றே கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்? (திருக்குர்ஆன் 29:61)

அன்றைய அரபு மக்கள் செய்த அதே சமாதி வழிபாடுகளைத்தான் நம் இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களும் செய்துவருகிறார்கள். இறைவனுக்கு இணையாக தாயத்து, தகடு, கயிறுகளை நம்புகிறார்கள். முஹம்மத் நபியவர்களின் காலத்திற்குப் பின்னர், மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக சமாதி வழிபாடுகள் மக்களிடம் இடம்பிடித்தது. இதைத் தடுப்பதற்கு இறைவன் இன்னொரு தூதரையும், வேதத்தையும் அனுப்புவான் என்ற நம்பிக்கை இஸ்லாமில் இல்லை. எனவே, இறைச் சட்டங்கள் மீறப்படும் போதெல்லாம் இறைவன் தன் நல்லடியார்களில் யாரையேனும் வைத்து மக்களுக்கு வழிகாட்டுவான். அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் முஹம்மத் நபியவர்களின் வழிகாட்டுதலின்படி மக்களை நேர்வழிக்கு அழைப்பார்கள். அந்த வரிசையில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் அரபு நாட்டில் சிறந்த அறிஞர் மற்றும் சீர்திருத்தவாதியாக இருந்தார்.
சமாதி வழிபாட்டையும், மூட நம்பிக்கையையும் குர்ஆன் கூறிய அடிப்படையில், நபியவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அடிப்படையில் கண்டித்தார். இவர் இப்படி சீர்திருத்தம் செய்ததை விரும்பாத சமாதி வழிபாட்டுக்காரர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். எதிர்த்தவர்கள் இதற்கு தாங்களாக ஒரு பெயரை சூட்டினார்கள். அப்படி சமாதிவழிபாட்டுக்காரர் சூட்டிய பெயர்தான் வஹாபியிஸம்.
வஹாபியிஸம் என்பதுஇஸ்லாமில் கிடையாது. இது ஒரு மாயை. அதிலும் என்ன கொடுமை என்றால், இப்பிரச்சாரத்தை செய்து மக்களை சீர்திருத்தியவர் முஹம்மத் என்பவர்தானே தவிர அவரின் தந்தை வஹ்ஹாப் அல்ல. அதாவது அப்துல் வஹ்ஹாப் என்பவரின் மகன் முஹம்மத் என்பவர்தான் சீர்திருத்தவாதியாக இருந்தார். அப்படியே ஓர் இஸமாக அதைக் குறிக்க வேண்டும் என்றாலும், முஹம்மத் இஸம் என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால், சமாதி வழிபாட்டுக்காரர்கள் முஹம்மத் இஸம் எனக் குறிக்காமல், மிகச் சாதுர்யமாக வஹாபியிஸம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில், அவர்கள் முஹம்மத் இஸம் எனக் குறிப்பிட்டிருந்தால், அது நபி முஹம்மத் அவர்களைக் கூட குறிக்கலாம் அல்லவா? அதற்காக திட்டமிட்டு சீர்திருத்தவாதி இஸ்லாமிய அழைப்பாளர் முஹம்மத் அவர்களின் தந்தை வஹ்ஹாப் என்பவரின் பெயரில் வஹாபியிஸம் எனக் கூறலானார்கள்.

இப்போது சொல்லுங்கள் தோழரே! இது எப்படி தனிப்பட்ட ஓர் இஸமாக இருக்க முடியும். இந்த உண்மை புரியாமலேயே நீங்கள் ஒரு கட்டுரையும் எழுதிவிட்டீர்கள்.

உங்கள் கட்டுரையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வரிக்கும் நியாயமான முறையில் உண்மைகளை எடுத்து வைக்கிறேன். தாங்கள் தவறாமல் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தாங்கள் இட்டுள்ள தலைப்பே முற்றிலும் தவறானது. இந்துத்துவம் குறித்து நீங்களும் அறிவீர்கள்; நானும் அறிவேன். உண்மையில் இந்துத்துவம் அடிப்படைவாதம் அல்ல; அது ஒரு பயங்கரவாதம். ஆனால், தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் இந்தச் சிந்தனையில்தான் இருக்கிறார்கள் என்பதும் தவறு. இஸ்லாமில் இல்லாத `வஹாபிஸம் என பொய்யாகச் சுட்டப்படும் ஒன்றை எப்படி தாங்கள் நம்பினீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. இஸ்லாமில் அப்படி ஒரு இஸமே கிடையாது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் எந்த ஒரு முஸ்லிமும் நான் வஹாபியிஸத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதுகூட கிடையாது. குர்ஆனையும் நபிவழியையும் மட்டும் பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் தன்னை வஹாபி என்றோ அல்லது வேறு ஏதேனும் இஸத்தைத் தொடர்புபடுத்தியோ கூறுவதே இல்லை.

உங்களைச் சொல்லி குற்றம் ஏதுமில்லை; தங்களைப் போன்ற நடுநிலையான எழுத்தாளர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதைப் புரியவைக்காதது எங்களைப் போன்ற இஸ்லாம் அறிந்தவர்களின் குற்றம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

உங்களையும், என்னையும், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் படைத்து பாதுகாத்து வரும் இறைவன் குறித்து, திருக்குர்ஆனில், பைபிளில் என்ன கூறப்பட்டுள்ளது; ரிக்,யஜூர், சாம வேதம், அதர்வண வேதம் இப்படி பல்வேறு வேதங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைத் தாங்கள் படித்துள்ளீர்களா இல்லையா என எனக்கு ஐயமாக உள்ளது.

ஏனெனில், தங்களின் கட்டுரை அனைத்து வேதங்களுக்கும் எதிரான கருத்தையே கொண்டுள்ளது. படைப்பினங்களை வணங்குமாறும், படைப்பினங்களுக்கு வணக்கத் தலங்கள் கட்டுமாறும் எந்த வேதத்திலும் இல்லை. தன்னை மட்டுமே வணங்குமாறு இறைவன் எல்லா வேதங்களிலும் சொல்கிறான். (நான் இப்போது உங்களுக்கு கடிதம்தான் எழுதுகிறேன். எனவே, நான் எழுவதற்கான முழுமையான ஆதாரங்கள் தேவைப்பட்டால், ஒவ்வொரு வேதத்தின் அத்தியாயம், பக்கம் மற்றும் வரிகளுடன் உங்களுக்கு கொடுக்க தயாராக உள்ளேன். உங்கள் சம்மதத்துடன் உங்கள் மெயிலுக்கு நான் அனுப்புகிறேன்.)

சரி, இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் எழுதியுள்ள கட்டுரைக்கு நீங்கள் எந்த ஆதாரத்தையும் குறிப்பிடவில்லை; நல்ல எழுத்தாளருக்கு இது அழகன்று. நீங்கள் அறியாத ஒரு துறையைப் பற்றி நீங்கள் எழுத முன்வந்தால், ஒரு தோழர் சொன்னார்; மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பது ஒருபோதும் ஆதாரமாக இருக்கமுடியாது. அந்தத் துறை சார்ந்தவர்களிடம் கேட்டு, தக்க ஆதாரங்களைப் பெற்றுத்தான் நீங்கள் எழுதவேண்டும். இதுதான் ஓர் எழுத்தாளருக்கு அழகு. அதுவும் உங்களைப் போன்ற வெகுஜன நாளிதழ்களில் தொடர்ந்து எழுதுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவறான தகவல்களை நீங்கள் ஒரு முறை கொடுத்துவிட்டால் அதை மீண்டும் அழித்தொழிப்பது கடினம் என்பது உங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. “கழுத்துப் பிடியைக் கொடுத்தாலும் எழுத்துப்பிடியைக் கொடுக்காதே! என நம் முன்னோர் சொல்லியுள்ளதை மறந்துவிடக்கூடாது.

உங்கள் வாதம்:
“சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள்,தேவாலயங்கள் மீதுகூடக் கைவைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?
விமர்சனம்:
தங்களின் இந்த எழுத்து விஷமம் அல்லவா? சற்று சிந்தியுங்கள்!
தர்காக்கள் மீது யாரும் கைவைத்து உடைத்து கலவரத்தை ஏற்படுத்தியதாக உங்களால் ஒரேயொரு சான்றாவது கூறமுடியுமா? தர்கா வழிபாடு இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்பதைப் பிரச்சாரம் செய்வது மட்டும்தான் எங்கள் கடமை. அதை உடைத்தெறிவதற்கு எங்களுக்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் கொடுக்கவில்லை.

இறைத்தூதர் முஹம்மத் நபியும் அப்படித்தான் வழிகாட்டியுள்ளார்கள். அதற்கான ஆதாரம் இதோ…

இஸ்லாம் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத்தெளிவாக உள்ளது. எனவே, வழி கெடுப்பவற்றை நிராகரித்து ஏக இறைவனை நம்பியவர் அறுந்துவிடாத வலுவான கயிற்றைப் பற்றிக் கொண்டார் (அவ்வளவுதான்). ஏக இறைவன் செவியுறுபவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:256)

இறைவனின் இந்த எச்சரிக்கைப்படி யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக்கூடாது. நேர்வழி எது என்பதைப் புரியவைப்பது மட்டுமே முஸ்லிம்களின் கடமை. முஸ்லிம்கள் அதை மட்டுமே செய்துவருகிறார்கள்.

“ஒரே இறைவன்தான் எங்கள் இரட்சகன்” என அவர்கள் கூறியதற்காகவே இவர்கள் நியாயமின்றி தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். மனிதர்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு ஏன இறைவன் தடுக்காதிருந்தால் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் பெயர் துதிக்கப்படும் இறைஇல்லங்களும் அழிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவுவோருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவுகிறான். (திருக்குர்ஆன் 22:40)

…மக்களில் ஒரு கூட்டத்தாரைக் கொண்டு, தீமை செய்யும் மற்றொரு கூட்டத்தாரை அல்லாஹ் தடுக்காவிட்டால், உலகம் சீர்கெட்டிருக்கும். ஆயினும், அல்லாஹ் அகிலத்தாரின் மீது பெரும் கருணையுள்ளவன். (திருக்குர்ஆன் 2:251)

இறைவனின் மேற்கண்ட வாக்குப்படி, மக்கள் தாங்கள் விரும்பிய எந்த கொள்கையையும்
பின்பற்றலாம். அதற்குத் தடையாக யாரும் இருக்கமுடியாது. இறைவனின் விருப்பம் என்ன என்பதையும், இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்ன என்பதையும் எடுத்துரைப்பதை யாரும் தடுக்கமுடியாது; தடுக்கவும் கூடாது. இதுதான் உண்மையாக சுதந்திரம். நீ உன் கருத்தையே சொல்லக்கூடாது; ஆனால், என் கருத்தை மட்டும் திணிப்பேன் என்பதுதான் உண்மையில் வன்முறை.
பிறமதத்தவர்களின் வணக்கத் தலங்கள் இடிக்கப்படக்கூடாது என்பதையும் மேற்கண்ட வசனங்கள் விளக்குகின்றன. ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் இஸ்லாமை தாங்களாக முன்வந்து ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறிவிட்டால் அவர்கள் அந்த வணக்கத் தலங்களில் ஏக இறைவனை மட்டும் வணங்குவது அவர்களின் விருப்பம். இதை நிர்ப்பந்தம் என்றோ, அதிகாரம் என்றோ, அக்கிரமம் என்றோ எவ்வாறு கூறமுடியும்? வரலாற்று நிகழ்வுகள் எல்லாமே இப்படித்தானே நடந்தேறியுள்ளது.
போரில்கூட மனிதநேயத்தைக் கடைபிடிக்குமாறுதான் இஸ்லாம் கட்டளையிடுகிறது.
பைஜாந்தியர்கள் மதீனாவின் எல்லைகளைக் கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்தப் பகுதியை வென்றெடுப்பதற்காக சிறியதொரு படையை இஸ்லாமின் முதல் கலீஃபா – ஆட்சியாளர் அபூபக்கர்(ரலி) அனுப்பினார்.

இஸ்லாமிய போர் விதிமுறைகள் குறித்து நபியவர்கள் கற்றுக் கொடுத்ததை, அப்போது அவர் அந்தப் படைக்கு உபதேசித்தார்:

“தவறாக நடந்து கொள்ளாதீர்கள்; ஏமாற்றவும் செய்யாதீர்கள்; கீழ்ப்படியாதக் குற்றத்துக்கும் ஆளாகிவிட வேண்டாம்; வயதான ஆண், பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாதீர்கள். விவசாயத்தைச் சேதப்படுத்தாதீர்; விவசாயங்களை எரித்துவிடாதீர்; கனிதாங்கிய மரங்களை வெட்டிவிடாதீர்கள். உணவுக்காக அன்றி செம்மறிகளையும்,பசுக்களையும், ஒட்டகங்களையும் கொன்றுவிட வேண்டாம். நீங்கள் கடந்து செல்லும் மடாலயங்களில் ஓய்வு நாட்களைக் கழித்துக் கொண்டிருப்போரை அதே நிலையில் விட்டுவிடுங்கள்” எனக் கூறினார். (நூல்: தாரீக்குல் உமமுல் இஸ்லாமிய்யா – இஸ்லாமிய வரலாற்று நூல்)

எனவே, “நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்? என்ற தங்களின் புரிதல் மிகவும் அவதூறானது; இஸ்லாம் கொண்டிருக்கும் கொள்கை நெறிக்கு எதிரானது.

நம் இந்திய நாட்டில் முஸ்லிம்கள் பல நூறு ஆண்டுகள் ஆட்சிசெய்தார்கள். அவர்கள் எத்தனை கோவில்களை இடித்தார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா? கட்டாய மதமாற்றம் செய்தார்கள் என்றெல்லாம் பொய்யான தகவல்களை வரலாறு என்ற பெயரில் பதிவு செய்துள்ளவர்களால் அதை நிரூபிக்க முடியுமா? இஸ்லாமை ஏற்கமாட்டோம் என்றதால் உயிரை இழந்தவர்கள் எத்தனை பேர் சொல்ல முடியுமா? அல்லது வேறு சாதிக்காரர்கள் எத்தனை பேர் சொல்லமுடியுமா? இந்துத்துவத்தின் சாதியக் கொடுமைகள், வன்முறைகள் தாங்கமுடியாமல் தாமாக முன்வந்து இஸ்லாமை ஏற்றோர் பலர் என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. முஸ்லிம் மன்னர்கள் பலர் கோவில்கள் கட்டிக் கொடுத்தார்கள், கோவிலுக்கு இடம் கொடுத்தார்கள் என்பது வரலாறு. ஆனால், 1992 டிசம்பர் 6 இல் நீதிமன்றத்தையும் அவமதித்து பாபர் மசூதியை இந்துத்துவா இடித்துத் தள்ளியது; அதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். உண்மை இப்படி இருக்க உங்கள் எழுத்து எப்படி இதற்கு எதிராக அமைந்துள்ளது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

உங்கள் வாதம்:

காந்தி சொன்னார், நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட. இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம்,கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம்,இல்லையா?
விமர்சனம்:
இந்த வரிகளில் உங்கள் கருத்து எம்மதமும் சம்மதம் என்பதையே காட்டுகிறது. யாரும் யாருடைய கருத்தையும் யாரிடமும் சொல்லக்கூடாது என்பதுதான் சாராம்சம்.
தோழரே! நன்றாகச் சிந்தியுங்கள்! இது மக்களை முட்டாள்களாக்கும் சொல் அல்லவா? நான் ஒரு வெள்ளைப் பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு இது என்ன நிறம் என நான்கு நபர்களிடம் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் அவர்களில் ஒரு நபர் என வைத்துக் கொள்வோம்.
நீங்கள் சொல்கிறீர்கள் அது வெள்ளை என்று; இன்னொருவர் சொல்கிறார், அது சிவப்பு என்று; மற்றொருவர் சொல்கிறார், அது பச்சை என்று; நான்காம் நபர் சொல்கிறார்,அது கருப்பு. இப்போது உங்களுக்கு மத்தியில் நான் தீர்ப்பு அளிப்பவனாக இருந்தால், நான் எவ்வாறு தீர்ப்பு அளிக்க வேண்டும்?
இரண்டே பதில்கள் மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.
ஒன்று அது வெள்ளை என்று.
இன்னொன்று நீங்கள் அனைவரும் சரியாகத்தான் சொன்னீர்கள் என்று.
இந்த இரண்டு பதில்களில் நீங்கள் எதை ஏற்பீர்கள்? உங்களை இப்படி ஏமாற்றினால் அதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? சகித்துக் கொண்டாலும் அது முறையாகுமா? நிதானமாக யோசியுங்கள்.
இது போன்று அறிவுக்குப் பொருந்தாத உதாரணத்தை உங்களைப் போன்ற தரமான எழுத்தாளர் மேற்கோள் காட்டுவது நகைப்புக்குரியதாகாதா?
உங்கள் வாதம்:
சென்னை வெள்ள நாட்களில் தி இந்துவில் வெளியான ஒரு படம் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்! என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன்,சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!
விமர்சனம்:
தோழரே! இது ஒன்றும் தமிழ் முஸ்லிம்களின் வழிகாட்டுதல் அல்ல. தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய முஸ்லிம்களுக்கு குர்ஆனும் நபியவர்களும் கற்றுக் கொடுத்துள்ள பாடம். இதை வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு எந்த பெருமையும் இல்லை. இஸ்லாமிற்குத்தான் பெருமை. உலகில் எந்த முஸ்லிமும் இதைத்தான் செய்வார் என்பது நிதர்சனம்.
உங்களின் அச்சுறுத்தல்!
சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம்.
விமர்சனம்:
தோழரே! இப்படி ஒரு தவறான தகவலை உங்களுக்கு யார் கொடுத்தது?
உங்கள் அனுமானம்:
“1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்.
உண்மை நிலை:
இந்தத் தகவலை எந்த வரலாற்று நூலிருந்து பெற்றீர்கள்? படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும்; படைப்பினங்களில் எதையும் வணங்கக் கூடாது. அப்படிச் செய்வது இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்ற அதீதக் கட்டுப்பாடு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் உருவாக்கியது அல்ல. இந்த அதீதிக் கட்டுப்பாடு இறைவேதங்கள் எனக் கூறப்படும் எல்லா வேதங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. அவற்றைப் படித்துப் பாருங்கள். ஏன், பகவத் கீதையில்கூட இருக்கிறது. திருக்குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள். உங்களிடம் இல்லை என்றால் நான் மொழிபெயர்த்துள்ள பிரதி ஒன்றின் லிங்க் உங்கள் மெயிலுக்கு அனுப்பியுள்ளேன். அதைப்படித்துப் பாருங்கள். ஏக இறை தத்துவம் என புதிதாக நீங்கள் ஒரு பெயர் சூட்டுகிறீர்கள். படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு இந்து மத வேதங்களிலும் சான்றுகள் உள்ளன. (தேவைக்கு விபரம் அனுப்பப்படும்).
உங்கள் அனுமானம்:
“அதே காலகட்டத்தைச் சேர்ந்தவரான முஹம்மது இப்ன் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபியிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது.
உண்மை நிலை:
முஹம்மத் இப்னு சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர் என்றால் அவர் எத்தனை நாடுகளைப் பிடித்தார். அதன் விபரம் மற்றும் வரலாறு என்ன? அந்த நாடுகள் யாவை? உங்களால் கூறமுடியுமா?
தோழரே! வந்தவர் போனவர் சொன்னதை எல்லாம் வரலாறு என பதிவுசெய்வது நாம் வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? இஸ்லாம் ,முஸ்லிம்கள் தொடர்பாக உங்களை எழுதக் கூடாது என நான் கூறவில்லை. தாராளமாக எழுதுங்கள்! உண்மை நிலையை நன்றாகப் படித்துவிட்டு தக்க ஆதாரங்களுடன் எழுதுங்கள். மேற்கத்திய எழுத்தாளர்களில் பலரும், கிழக்கத்திய எழுத்தாளர்களில் பலரும், ஏன் நம் நாட்டவர்களில் பலரும் இஸ்லாமிய வரலாறுகளை எழுதியுள்ளனர்; ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நாம் விமர்சிக்கவில்லை. தங்களின் எழுத்து தவறானது என்பதால்தான் விமர்சிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம்.
“அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது என உங்களின் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளீர்களே! அந்த நாடு நம் நாடு போல பார்லிமென்டரியோ, அமெரிக்கா போன்ற செனட் டைப் ஜனநாயகமோ இல்லை. அது ஒரு கிங்டம் என்னும் மன்னராட்சி முறை கொண்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் சவுதி அரபியாவை இஸ்லாமிய நாடு என்று சொல்வதில்லை; அது ஒரு முஸ்லிம் நாடு அவ்வளவுதான். இஸ்லாமிய நாடு என்பதற்கும் முஸ்லிம் நாடு என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எனவே, முஸ்லிம்களுக்கு இஸ்லாம்தான் வழிகாட்டியே தவிர எந்த அரபு நாடும் அல்ல.
இஸ்லாமிய அரசில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் திருக்குர்ஆன் கொடுத்துள்ளது. இஸ்லாமிய அரசில் முஸ்லிம்கள் மட்டும்தான் வாழவேண்டும் என்ற எந்தச் சட்டமும் கட்டுப்பாடும் இல்லை. மதீனாவில் இஸ்லாமிய அரசை நபியவர்கள் நிறுவியபோது யூதர்கள், கிறிஸ்துவர்கள், சிலை வணங்கிகள் என பலதரப்பு மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களின் சமூகக் கலாச்சாரப்படி வாழ்வதற்கு இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டன. அப்போது 53 பிரிவுகளாக இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் விபரமும் நான் எழுதியுள்ள பொருமானார் கண்ட போர்க்களங்கள் நூலில் உள்ளது. உங்கள் மெயிலுக்கு லிங்க் அனுப்பிள்ளேன்; படியுங்கள். இஸ்லாமிய அரசு மதம் சார்ந்தது அல்ல, மனிதம் சார்ந்தது.
பொய்யான செய்திகளுக்குத் துணை போகாதீர்கள்!
உங்கள் வாதம்:
மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள்,தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே தவ்ஹீது முன்னிறுத்துகிறது.
“வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. அபாண்டமாக இப்படி பொய்யை எழுதும்போது உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா? இல்லாத ஒரு இஸம், மாயையான ஒரு இஸம் வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது என்பது அபாரமான கற்பனை. தன்னை வஹாபி என்று சொல்லிக் கொண்டு எந்த நாட்டில் யாருடைய வழிபாட்டுத் தலங்களை யார் அழித்தொழித்தது? நம் நாட்டில் பல கோவில்களை முஸ்லிம்கள் இடித்து அழித்துவிட்டார்கள்; வாள்முனையில் இஸ்லாமைப் பரப்பினார்கள் என பொய்யான ஒரு செய்தியை இந்துத்துவா போன்ற தீவிரவாத இயக்கங்களே கூறிவருகின்றன. நடுநிலையான எழுத்தாளர் என்ற பெயர் பெற்ற நீங்களுமா இப்படி எழுவேண்டும்? இப்படி நடந்ததற்கு வரலாற்றில் ஒரு சான்றாவது காட்ட முடியுமா?
சவுதி கலாச்சாரத்தைக் கொண்டதுதான் வஹாபியிஸம் என்கிறீர்கள். இங்கு இஸ்லாமை எடுத்துரைக்கும் முஸ்லிம்கள் சவுதி கலாச்சாரத்தையா பின்பற்றி வருகிறார்கள்.
முந்தைய அரபுக் கலாச்சாரம் என்ன தெரியுமா? படைத்த இறைவனுடன் படைப்பினங்களை வணங்குவதும், பெண்களை அடிமையாக்குவதும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதும், வழிப்பறி செய்வதும், சாதி வெறியும்தான் அரபுகளின் கலாச்சாரம். இப்படி இருந்த அவர்களை நேர்வழிப்படுத்தியதே இஸ்லாமிய கலாச்சாரம்தான்.
யார் எங்கு வசித்தாலும் அவர்கள் தங்களின் கலாச்சாரத்தை பின்பற்றும் உரிமை பெற்றுள்ளனர். இதுதான் மெய்யான சுதந்திரம். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்களே தவிர, அரபியக் கலாச்சாரத்தைப் பின்பற்றவில்லை. இதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வேறு எந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் தோழரே?
உங்கள் வாதம்:
“சவுதி அரேபிய அரச வம்சத்தை 1932-இல் நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபியிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர்களால் ஆளப்படும் சவுதி அரசுக்கும் பெட்ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு.
விமர்சனம்:
இந்திய முஸ்லிம்கள் என்ன சவுதி அரசுக்குக் கூலிப்படையா? நம் நாட்டு இராணுவ ரகசியங்களை நம் நாட்டு முஸ்லிம்கள் வெளிநாட்டிற்கு விற்று பணம் சம்பாதித்தார்களா? காட்டிக் கொடுத்தார்களா? அல்லது ………. இன மக்கள் காட்டிக் கொடுத்தார்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு மாலத்தீவில் வைத்து இந்திய இராணுவ இரகசியங்களை அந்நிய நாட்டுக்கு விற்றவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? என்னதான் சொல்ல வருகிறீர் தோழரே?
உங்கள் வாதம்:
“சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவுதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது?
விமர்சனம்:
நீங்கள் இந்தக் கேள்வியை இந்திய முஸ்லிம்களிடம் கேட்பதில் என்ன பலன்? இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.
உங்கள் வாதம்:
அரசை சின்ன அளவில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது?
விமர்சனம்:
அரசை விமர்சித்தவர்களுக்கு கல்லடி என்பதெல்லாம் எந்த ஊடகத்திலும் இடம் பெறாத கட்டுக்கதை. இஸ்லாமிய சட்டத்திலும் அப்படி ஏதுமில்லை. இல்லாததை எல்லாம் எழுதவேண்டாம் தோழரே!
உங்கள் வாதம்:
“ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன? இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு!
விமர்சனம்:
பயங்கரவாதிகளின் தண்டனை முறையும், அரபியாவின் தண்டனை முறையும் ஒரே மாதிரி இருக்கிறது என்கிறீர்களே, அப்படி எத்தனை தண்டனை முறைகளை நீங்கள் நேரடியாகச் சென்று பார்த்து வந்தீர்கள்? சரி ஒரு வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒரு நாட்டின் குற்றவியல் சட்டம் போல தீவிரவாத அமைப்புகள் தங்களின் தண்டனை முறைகளை அமைத்துக் கொண்டால் அதற்காக அந்த நாடு எந்த வகையில் பொறுப்பேற்க முடியும்? இப்படி எந்தக் கோணத்தில் சிந்தித்தாலும் உங்கள் கட்டுரை பொருத்தமாக இல்லையே தோழரே!
உங்கள் வாதம்:
“வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் – ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது – ஒரே அரசு!
விமர்சனம்:
தவறாகச் சொல்கிறீர்கள் சமஸ் தோழரே! வஹாபியிஸம் என்பது மாயை. இஸ்லாம் எந்த நாட்டில் நுழைந்தாலும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் அதன் முழக்கமாக இருக்கும். இதைப் பகிரங்கமாகச் சொல்வதில் எந்த முஸ்லிமும் கொஞ்சமும் சங்கடப்படமாட்டார்கள். இந்த முழக்கத்தை முஸ்லிம்கள் யார் மீதும் தினிக்கவில்லை; விரும்பி ஏற்பவர்களை அரவணைத்தார்கள். இதற்காக வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். போர்களை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இறைவன் ஒருவன்தான் என்று சொன்னதற்காகத்தான் முஸ்லிம்களின் மீது பிறர் போர்களை திணித்தார்கள்.
மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது – ஒரே அரசு! எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் என்ன அந்தரங்கம் இருக்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைக்கு மக்கள் அனைவரும் வந்துவிட்டால் அந்த மக்கள் இஸ்லாமிய அரசைத்தானே அமைத்துக் கொள்வார்கள். ஆனால், அரசு அமைப்பதே நோக்கம் என்பது தவறான குற்றச்சாட்டு. அமைதியை ஏற்படுத்துவதுதான் முஸ்லிம்களின் நோக்கம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன், நீதிமிக்க அரசு இதெல்லாம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம் என சொல்ல வருகிறீர்களா? நம் நாட்டில் 2500 சாதிகள் இருக்கின்றன. இதில் படித்தரங்கள் வேறு! இன்று வரை இரட்டை டம்ளர் போட்டு டீ கொடுக்கும் டீக்கடைகள் தமிழ் நாட்டில் பல கிராமங்களில் உள்ளன. இந்த சாதி அமைப்பு மாறவே கூடாது என விரும்புகிறீர்களா? நீங்கள் அப்படிப்பட்டவராக இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். பின்னர் ஏன் இப்படி எழுதினீர்கள் என்பதுதான் புரியவில்லை? உங்கள் வாதம்:
“இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிகமயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப்பிரயோகத்துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.
விமர்சனம்:
இஸ்லாம் போதித்துள்ளதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், மாயையான வஹாபியிஸம் உங்கள் கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஒன்று மட்டும் உறுதியாகப் புலப்படுகிறது. உங்கள் வாதம்:
“இஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். இந்தியாவில் இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வாணிப – மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானிகள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என்பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.
விமர்சனம்:
மனித நேயம், மனித உறவுகளில் இஸ்லாம் இந்த உலகத்தில் உள்ள மற்ற எல்லா இஸங்களையும்விட மிகைத்துள்ளது தோழரே!
முஸ்லிமை மாமா மச்சான் என ஓர் இந்து அழைக்கிறார்; உண்மைதான் அவரிடன் சகிப்புத்தன்மை இருக்கிறது உண்மைதான். அதே இந்து தலித்துகளையும் இந்து என்றுதான் கூறுகிறார். அந்த தலித்தை மாமன் மச்சான் என்றுகூட அழைக்க வேண்டாம். மனிதன் என்ற அடிப்படையில் ஒரு சகோதரனாகப் பார்க்கிறாரா? அவனை நாயைவிட கேவலமாக நடத்துகிறாரே ஏன்? இப்போது எங்கே போனது சமூக நல்லிணக்கம்? தொட்டால் தீட்டாம்… பார்த்தால் தீட்டாம்… நாயை நடுவீட்டில் ஏற்றுவாராம்;தன்னைப் போன்ற மனிதனின் கால் தன் வீட்டுவாசலில் பட்டுவிட்டால் தண்ணீர் விட்டுக் கழுவுவாராம். இதைவிட கொடுமை வேறு என்ன இருக்க முடியும்.

இறைவனின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம். மனிதர்களே! நிச்சயமாக உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் அச்சம் கொள்பவரே மிக்க கண்ணியமானவர். அல்லாஹ்வே நன்கறிபவன்; (சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)

உங்கள் வாதம்:
“தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.
விமர்சனம்:
தர்காக்களை யாரும் தாக்கவில்லையே! விமர்சிக்கத்தானே செய்கிறோம். விமர்சனம் செய்யவே கூடாது என்பது எந்த வகையில் சகிப்புத் தன்மையாகும்? இந்துத்துவாதான் முஸ்லிம்கள் இந்துக்களைப் போன்ற கலாச்சாரத்தில் வாழவேண்டும் என நிர்ப்பந்திக்கிறது. இதுதான் சகிப்புத் தன்மையற்ற செயல்.
குடும்பத்தில் பிளவுகள் ஏற்படுகின்றன என்ற விமர்சனமும், யாரே இனம்தெரியாத ஒருவர் தன் அனுபவத்தைக் கூறியதாக ஒரு கதையையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்துத்துவத்திற்கு எதிராக வஹாபியிஸத்தை எதிர்ப்பது தர்மீகக் கடமை என்று கட்டுரையை முடித்துள்ளீர்கள்.
வஹாபிகள் என நீங்கள் கருதும் முஸ்லிம் இளைஞர்கள்தான் தங்களின் உயிரைப் பணயம் வைத்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் மனிதர்கள் என்ற அடிப்படையில் சென்னையில் வெள்ளப் பெருக்கில் இறங்கி களப்பணியாற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்துக்களின் கோவிலையும் சுத்தம் செய்தார்கள் என நீங்களே உங்கள் கட்டுரையில் பதிந்துவிட்டு, அதே கட்டுரையில் அதற்கு முரணாக எழுதலாமா? எனவே, பயங்கரவாதத்தை பகிரங்கமாகப் போதிக்கும் இந்துத்துவத்தோடு இஸ்லாமை ஒப்பிடுவது முறையன்று எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் நேர்வழி நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் முடித்துக் கொள்கிறேன்.
ஆக்கம் :
மவ்லவீ Dr. எம்.எம். அப்துல் காதிர் உமரீ
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவருமே தனது உறவினர்கள்: நடிகர் கமல் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு!!
செவ்வாயன்று ஆய்வுகள் மேற்கொண்டோம்! சிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை குறித்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்!
நாளை ஆகஸ்ட் 22 அன்று நகர மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SD ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com