بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
சுவர்களோடு பேசுதல்! இன்ஸாப் ஸலாஹுதீன் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
03 மார்ச் 2015 மாலை 03:13

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள். வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு பரிவு மிகுந்த அந்த வயதின் இயல்புகளை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது.வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒருவரை நாம் நெருக்கமாகக் காணும் போது முகத்தின் மீது படிந்துள்ள மரணத்தின் ரேகைகள் சொல்ல முடியாத வலியை ஏற்படுத்திவிடுகிறது.

older

ஊரில் நான் கடக்கும் தெருக்களின் வழியே ஊரில் வாழ்ந்து மறைந்த மூதாதையரின் உரையாடல்களை உணர்கிறேன்.கடந்த காலத்தின் சாட்சியங்களாக அவர்களது குரல்களும் நினைவுகளும் நமக்கு முன்னே இருக்கின்றன.காலம் நினைவுகளை மட்டுமே மீட்டித் தருகிறது.

முதியவர் இருக்கும் ஒரு வீடு எப்போதும் ஆனந்தம் நிறைந்தது.அவர் நோயுற்று பாயில் கிடக்காமல் இருந்திருந்தால்.முதியவர்கள் இன்று பலருக்கும் சுமையாக மாறிப் போயிருக்கிறார்கள்.விலகிப் போகும் உறவுகளுக்கு மத்தியில் ஊன்றுகோல் மட்டுமே சிலருக்கு துணையாக இருக்கிறது.

என் சின்ன வயதில் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் செல்லும் போது அதிகமான முதியவர்களைக் கண்டு புன்னகைப்பேன்.இன்று அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.ஊரே இருண்டது போலத் தெரிகிறது. "அப்பா" என்று நெஞ்சு நிறைய அவர்களை அழைக்கும் போது ஒப்பற்ற சுகம் மனதில் குடி கொள்ளும்.

எப்போதும் என்னுடன் அன்பு பாராட்டும் ஒரு முதியவர் ஊரில் இருந்தார்.என்னுடன் முகமலர்ந்து என் தோல்களைத் தட்டி மரியாதையுடன் கதைப்பார்.சிலபோது அவரைக் காண்பதற்காகவே காத்திருப்பேன்.

திடீரென ஒரு நாள் அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.இன்றும் அவர் புன்னகையும் முகமும் என் கன்களுக்குள் ஒரு அழகிய புகைப்படம் போலத் தெரிகிறது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் காத்திருக்கும் முதியவர்களை பரிதாபத்தோடு நோக்குகிறேன்.முகமெங்கும் வாழ்வை வழியனுப்பும் தடயங்கள்.வாழ்ந்து முடித்துவிட்டோம் எனும் பிரியாவிடை வார்த்தையை அவர்களது உதடுகள் தயங்கித்தயங்கி உச்சரிக்கின்றன.

முதுமை வாழ்வின் தவிர்க் முடியாத ஒரு பருவம்.உயிருடன் இருப்பவர்கள் அதை நிச்சயம் அடைகிறார்கள்.நிதானமும் பக்குவமும் நிறைந்த பருவம் அது.ஒருவரின் குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் அங்கீகாரம் முதுமையில் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை.அவர்களது எல்லாக் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன.அவர்களது வளர்ச்சி நின்றுவிட்டதனால் நவீன உலகோடு அவர்களது எந்தச் செயலும் ஒத்துச் செல்வதில்லை என நாம் நம்புகிறோம்.

ஒவ்வொரு வீட்டிலும் வயதில் மூத்த முதியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தமது பொழுதைப் போக்க எவ்வளவோ சிரமப்படுகிறார்கள்.புதிய தாளங்களுடன் அவர்களது ராகங்கள் சேர்வதில்லை.புறக்கணிப்பின் நிழல்கள் அவர்கள் மேல் விழுகின்றன.அந்த நிழல்கள் தரும் காயங்களுக்கு மருந்தேதும் இல்லை.முதுமையில் வாழ்க்கையின் விசித்திரக் கனவுகளை நனவாக்க எல்லா முதியவர்களாலும் முடிவதில்லை.அவர்கள் தமது கனவுகளை தங்கள் சுருட்டப்பட்ட கைகளுக்குள்ளும் பைகளுக்கும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

"எங்களுடைய பேச்சை எங்கே அவர்கள் கேட்கப் போகிறார்கள்".என்று வயது முதிர்ந்த எத்தனையோ பெற்றோர்கள் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். "உங்களுக்கு அது விளங்காது" என்று ஏகப்பட்ட மறுப்புரைகளால் நாம் முதியவர்களின் மனதில் ஆணியாய் அடித்துக் கொண்டிருக்கிறோம்.ஒரு எதிர்ச்சொல்லால் ஒரு முதியவர் காயப்படும் தருணமானது வாழ்க்கையின் முதுகில் ஒருவர் ஏறி மிதிப்பதற்குச் சமம்.ஒரு முதியவர் மதிக்கப்படாமல் விடப்படும் போது உறவு தன் அர்த்தத்தை ஒரு தடவை இழந்து கொள்கிறது.

முதியவர்கள் எப்போதும் விசித்திரமான ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.பலபோது அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை. இன்றைய இளைஞர்களால் அதனைப் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. எமது ஆசைகளே அவர்களையும் தீர்மானிக்கின்றன.எமது பலமான வார்த்தைகளால் நாம் அவர்களைக் கட்டுப்படுத்திவிடுகிறோம்.தம் உணர்வுகளை,ஆசைகளை தனிமையோடு சேர்த்து அவர்கள் கரைத்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கனத்தையும் உழைப்புடனும் தியாகத்துடனும் வலிகளுடனும் கழித்த மனிதர்கள் தம் அந்திம கட்டத்தில் படும் அவலங்களைக் காண்கையில் கண்கள் ஈரலிக்கின்றன.கிராமத்திலிருந்து மாநகரம் வரை நான் கடக்கும் தெருக்களில் பலநூறு முதியவர்களைக் கடந்து செல்கிறேன்.ஒவ்வொருவரும் ஒரு துயரக் கதையை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.நோயினாலும் வறுமையினாலும் வாடும் முதியவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

மா நகரங்களில் கொழுத்தும் வெயிலில் அலைந்து திரிந்து கையேந்தி உணவு கேட்டு பாதை ஓரங்களில் உறங்கும் முதியவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களது சொந்தங்கள் ஏன் அவர்களைப் பாரமரிப்பதில்லை? நடுத்தெருவில் நாய்களுக்குச் சமமாக நடத்தப்படும் இவர்கள் வாழ்க்கையில் என்ன குற்றம் செய்தார்கள்?அழுக்கு நிறைந்த ஆடைகளுடன் இழுக்கான தோற்றங்களில் நொந்து போன இதயங்களுடன் அலைவதற்காய் இத்தகையவர்களை சுமை என்று கருதி நடுத்தெருவில் விட்டுச் செல்லும் குழந்தைகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்ளவும் வீடுகளை தம் பெயரில் எழுதிக் கொள்ளவும் வயோதிப் பெற்றோர்களின் மரணத்திற்காய் நாள் பார்த்திருப்பவர்களும் இந்த உலகத்தில் இல்லாமலா இருக்கிறார்கள்..?

மழை கொட்டும் நாளொன்றில் வீதியோரமாய் குளிர் காற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு போர்வை இல்லாது உறங்கித் தவிக்கும் ஒரு முதியவரை அண்மையில் நான் பார்த்தேன்.மழை நீரோடு மனிதமும் கரைந்து கொண்டிருந்தது.

ஒரு முதியவர் இருக்கும் வீடு வெளிச்சம் உள்ள அறை போன்றது.அந்த வெளிச்சம் இல்லாமல் போகும் போதுதான் அதன் தன்மையை நாம் உணர்கிறோம்.ஒரு முதியவர் என்பவர் வெறுமனே உடம்பு மாத்திரமல்ல. அவர் கடந்த காலத்தின் சாட்சியமாக நம் முன் நிற்கிறார்.வாழ்க்கையின் அனுபவம் எனும் அற்புதத்தை தனக்குள் நிறைத்துக் கொண்டு மௌனமாக அவர் காட்சி தருகிறார்.அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் அதன் சுவடுகளும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

முதியவர்களின் தனிமையைப் போக்குவதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.தனிமையோடு தம்மை அவர்கள் கரைத்துக் கொள்ளும் பொழுதுகள் மிகவும் துயரம் வாய்ந்தவை.நான் சந்திக்கும் பெரும்பாலான முதியவர்களை இப்படிக் கண்டிருக்கிறேன்.பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாதவர்கள் ஒருபுறமும் அவர்களது பேச்சை காது தாழ்த்திக் கேட்க ஆளில்லாமல் மறுபுறமும் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.

மனதில் இருக்கும் சுமைகளை,நோய்கள் பற்றிய அச்சத்தை,தமது நிலைப்பாடுகளை அவர்கள் பேச விரும்புகிறார்கள்.நிஜ வாழ்க்கையில் பலருடன் எனக்கு இதில் அனுபவம் இருக்கிறது.சுவர்கள் மட்டுமே அவர்களை உள்வாங்கும் பொறுமையுடன் இருக்கின்றன.

இன்னுமொருவருடைய உதவியை எதிர்பார்த்து நிற்கும் குழந்தைமை போல முதுமையும் மற்றவர்களுடைய நீட்டப்பட்ட கரங்களுக்காக காத்திருக்கின்றன. வாழ்க்கை ஒரு சிறிய பயணம்.என்றோ ஒரு நாள் அது முடிந்துவிடுகிறது. அதற்குள்தான் வாழ்க்கையின் எல்லா வர்ணங்களும் கரைந்து சேகரமாகிவிடுகிறது. அடுத்தவரை மதிப்பதும் பராமரிப்பதும் வாழ்க்கையில் உயர்ந்த செயல்.

முதுமை ஒரு ததும்பும் அனுபவம்.குழந்தைகளின் மனதில் நடமாடித் திரியும் முதியவர்களின் குரல்களைக் கேட்கும் போது வாழ்க்கை மேல் இருக்கும் பிடிமானம் சற்றே தளர்ந்துவிடுகிறது.முதியவர்கள் இல்லாத வீட்டிலோ ஊரிலோ வாழ்க்கை சுவாரஷ்யமாக இருக்கப் போவதில்லை.

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

பெத்த தாயவள் செத்துப் போனால்

மொத்த உலகமும் இருள்கிறது..

தவிர்க்க முடியாமல் என் செவிகளுக்குள் இதை எழுதும் போது இந்தப் பாடல் வந்து விழுகிறது. முதுமையின் கொடுமைகளால் தவிக்கும் மனிதர்களை நினைத்து உளம் வாடுகிறது.

அந்த வயதின் இயலாமைகளின் பள்ளத்தாக்கில் வாழ்க்கை விழுவதை யாரும் விரும்புவதில்லை. யாரும் முதியவர் ஆவதில்லை. அவர்கள் வளர்வதை நிறுத்திக்கொள்ளும்போது தான் வயதானவர்கள் ஆகிறார்கள் என்றார் எமர்சன் என்ற தத்துவ ஞானி.

ஒரு குழந்தையைக் கொண்டாடும் அளவுக்கு ஒரு முதியவரை யாரும் கொண்டாடுவதில்லை.ஒரு குழந்தை சிரிப்பில் நம்மை சந்தோசப்படுத் துகிறது.ஒரு முதியவர் தனது பிள்ளையை சிரிக்க வைப்பதற்காக தன் சந்தோசத்தையே இழக்கிறார்.

அவர்களை சிரிக்க வைப்பதுதான் அவர்களது இறுதிக் காலத்தில் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் பரிசு.முதுமை என்பது நோய் அல்ல அது ஒரு பருவம் என்பதை நாம் உணர வேண்டும்.நமது வாழ்க்கைப் பாதையில் நரைத்த முடியுடன் கையில் ஒரு குடையுடன் நம்மைக் கடக்கும் ஒரு முதியவரின் புன்னகையைப் பெற்றுக் கொள்ளாத வாழ்வில் என்ன சுகம் இருக்கப் போகிறது.

ஆக்கம் : இன்ஸாப் ஸலாஹுதீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com