புன்னகை ஓர் தர்மம்! கட்டுரை!!அச்சிடுக
08 மே 2015 மாலை 04:21

வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என எல்லா மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் நினைப்பதுண்டு.எதைச் செய்வது? எதைச் செய்யாமல் விடுவது என்ற தேர்வில் மனிதனுக்கு எப்போதும் ஒரு குழப்ப நிலை இருக்கின்றது. நன்மைகளைச் செய்ய தர்மம் செய்ய வேண்டும், பள்ளிவாயலுக்குப் போக வேண்டும் அல்லது மக்காவுக்குப் போக வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு.அதில் தவறில்லை.

ஆனால் அதைத் தவிர்த்து நல்லது செய்ய ஆயிரம் வழிமுறைகள் இருக்கின்றன. செல்வந்தர்கள் எங்களை விட தமது செல்வத்தால் அதிகம் நன்மை செய்கிறார்கள் என்று நபியவர்களிடம் ஸஹாபாக்கள் முறைப்பட்ட போது அதற்கான வாயில்களின் விசாலத்தை நபியவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

நன்மைகளை எதுவென்று அறிந்து வைத்துக் கொள்வதும் நல்லது செய்யத் தூண்டுதலாய் அமையும்.மானுடத்தின் நன்மைக்கான ஒவ்வொரு அசைவும் நன்மைதான்.

எல்லா நல்ல செயல்களும் தர்மம் என்பது நபிவாக்கு.அப்படியிருந்தும் மனிதன் ஏன் அடுத்தவனுக்கு நன்மை செய்யத் தயங்குகிறான்.நண்மை என்பதன் பரிமாணத்தை அவன் சுருக்கிப் பார்ப்பதுதான் அதற்கான காரணம்.நன்மையின் விரிந்த எல்லைகள் பள்ளிவாசல்,கிணறு,மத்ரஸா என்ற வட்டத்திற்குள் பெரும்பாலும் முடக்கப்பட்டிருக்கின.

இஸ்லாம் ஒரு சர்வதேசத் தூது.அது மானுடத்திற்கான விழுமியங்களைப் பரிசளித்துள்ளது.தர்மம் என்பதன் பரந்த எல்லைகளைப் படிக்கும் ஒருவர் அதனைக் கண்டு கொள்வார்.

பயனுள்ள அறிவைப் போதித்தல்,குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுத்தல்,பாதையை விட்டும் தீங்குகளை அகற்றுதல்,உலக மக்களுக்காக துஆச் செய்தல், அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோரல்,ஒரு கைதியை விடுதலை செய்ய சிபாரிசு செய்தல்,ஒரு சகோதரனுக்கு நன்மை செய்ய அல்லது தீங்கைத் தடுக்கப் பேசுதல்,ஒரு உற்பத்தியாளனுக்கு உதவி செய்தல்,ஒரு வேலையை சரியாக செய்ய முடியாதவனுக்கு அதனை செய்து கொடுத்தல்,அடுத்தவருக்கு தீங்கிழைக்காமல் வாழ்தல்,அடுத்தவரைப் பார்த்து புன்னகைத்தல், பாதையிலுள்ள தீங்கை அகற்றுதல்,பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டல், பலவீனனை சுமத்தல்,சரியாகப் பேச முடியாதவனின் பேச்சை இன்னொரு வருக்கு தெளிவு படுத்தல்,ஒருவன் அவனது தேவையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான இடத்தைக் காட்டல்,குடும்பத்திற்கு செலவு செய்தல்,ஒரு மரத்தை நடுதல்,மனைவிக்கு உணவு ஊட்டிவிடுதல், என பல தர்மங்களை நாம் நபியவர்களின் ஹதீஸ்களில் காணலாம்.

அன்றாட வாழ்க்கையில் அனைவரும் தவறவிடும் மானிடப் பெறுமானங்கள் இவை.முழு மனிதவர்க்கத்திற்கும் பயனள்ள ஒருவனால்தான் ஸதகாவின் வாயில்களைப் பூரணப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது.ஒருவன் ஸதகா செய்ய அவனிடம் பணம் இருக்க வேண்டும் என்பதில்லை.அவனிடமிருக்கும் விசாலமான மனசே அதற்குப் போதுமானது.

ஆக்கம் : இன்ஸாஃப் ஸலாஹுத்தீன்

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh