ஹஜ் விபத்துகள் - சில படிப்பினைகள்! பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி கட்டுரை!!அச்சிடுக
07 அக்டோபர் 2015 மாலை 11:30

கடந்த 24.9.2015 அன்று மெக்கா அருகேயுள்ள மினாவில், சாத்தானை நோக்கிக் கல்லெறியச் செல்லும் வழியில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 45 இந்தியர்கள் உள்பட 769 புனிதப் பயணிகள் மரணித்தது, 13 இந்தியர்கள் உள்பட 934 பேர் காயமுற்றது முஸ்லிம்களை மட்டுமன்றி, உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் அனைவரையுமே உறைய வைத்துள்ளது.

அதற்கு ஒரு வாரம் முன்பு மெக்காவில் கட்டுமான மின்தூக்கி சூறைக்காற்றில் விழுந்து 107 பேர் பலியாகி, பலர் பலத்த காயமடைந்த சோகம் ஆறுவதற்குள் அடுத்த விபத்து. இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்வதும், பல உயிர்கள் பலியாவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

25 லட்சம் பேர் குவிகின்ற ஹஜ்ஜில், புனிதப் பயணிகளைப் பாதுகாக்கும் பெருந்திரள் மேலாண்மையில் சவூதி அரேபிய அரசு தோல்வியடைந்து வருகிறதா?

எங்கள் விதிமுறைகளை மீறியதால்தான் விபத்து ஏற்பட்டு உயிர்ப் பலிகள் நடந்தன என்று இலகுவாகச் சொல்லிவிட்டு ஒரு நாடு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்து விட முடியுமா?

இயற்கைப் பேரிடர்களால் வரும் இழப்புகளைத் தாண்டி, மனிதத் தவறுகளாலும் உயிர்ப் பலிகள் ஏற்படுவதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை ஆகிய கேள்விகள் எழுகின்றன.

ஹஜ் பயணத்தைப் பொருத்தவரை, பன்னாட்டு மக்களும் சவூதி அரசின்

ஹஜ் நுழைவுச் சீட்டை (விசா) பெற்றே வரமுடியும். இதற்குமேல் உள்நாட்டினர் இரண்டு லட்சம் பேர் வரை பங்கேற்

கலாம். எனவே, ஹஜ் புனிதப் பயணத்தின் ஜனத்திரள் ஓரளவு முன்கூட்டியே கணிக்கத்தக்கதுதான். ஆயினும் ஏன் விபத்துகள்?

அன்று கட்டுமான மின்தூக்கி வேகக் காற்றின் வீரிய வீச்சில் முறிந்து விழுந்து 107 பேர் பலியான நிகழ்வு குறித்து, தனது 20 ஆண்டு கால மெக்கா வாழ்வில் இவ்வளவு வேகம் கொண்ட சூறைக் காற்றைப் பார்த்ததில்லை என்றும், இந்த விபத்து யாருமே எதிர்பாராதது என்றாலும், சவூதி அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் மனத்திருப்தி அளித்தன என்றும் காயல் இப்ராஹிம் என்கிற நண்பர் கூறுகிறார்.

சவூதி மன்னர் சல்மான், நேரடியாக மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார். இழப்பீட்டு ஆணைகளை உடனடியாகப் பிறப்பித்தார்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற இயலாத அளவுக்கு காயமுற்றவர்கள், ஓர் உதவியாளருடன் அடுத்த ஆண்டு ஹஜ் கடமையை இலவசமாக நிறைவேற்ற ஏற்பாடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அடுத்த ஆண்டு மன்னரின் விருந்தினராக ஹஜ்ஜுக்கு வர வாய்ப்பு போன்ற இழப்பீட்டு உத்தரவுகளைப் பிறப்பித்த மன்னர் சல்மான், கட்டுமான மின் தூக்கியை அங்கு நிறுத்தியிருந்த பின்லாடன் கட்டுமான நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கையையும் எடுத்துள்ளார்.

இவ்வழக்கு முடியும் வரை பின்லாடன் நிறுவனத்துக்கு எவ்விதமான ஒப்பந்தப் பணிகளும் வழங்கப்படக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தியாகத் திருநாள் அன்று, மினாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சாவுகளுக்கு பல்வேறு காரணங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சவூதி இளவரசரின் வருகைக்காகக் கூட்டத்தைத் திசைமாறிச் செல்லச் செய்ததாகக் கூறப்படும் செய்தி. இதை சம்பவ இடத்தில் அன்று இருந்த நண்பர்கள் திட்டவட்டமாக மறுப்பதோடு, சவூதி அரேபியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவராத அல்லது வெளியிடத் தயங்குகிற ஒரு காரணத்தையும் சொன்னார்கள்.

அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா செல்லும் வழியில் ஓரிடத்தில் பழங்குடி அரபுகள் (பத்தூக்கள்) தின்பண்டங்கள் சுட்டு விற்பதுண்டு. இதற்கு அரசு அனுமதி கிடையாது. ஆனால், தடுப்பதும்

முடியாது.

அங்கு சம்பவ தினத்தின் காலையில் ஒரு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் போக்குவரத்து முக்கால் மணிநேரம் முடங்கியதாகவும், அதுவே, இந்தப் பெரும் கூட்ட நெரிசலுக்குக் காரணமானதாகவும் சொல்லப்படுகிறது.

ஜனத்திரள் திருப்பி விடப்பட்ட இடத்தின் சாலையின் நுழையுமிடம் மிக அகலமாகவும், உள்புறம் குறுகலாகவும், கூம்பு வடிவில் இருந்ததால், பின்னால் நுழைந்த பெருந்திரளை முன்னால் சிக்கியக் கூட்டத்தால் சமாளிக்க முடியவில்லை என்கின்றனர். இப்படிப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஈரானியர்கள் முழக்கங்களை எழுப்பி நகர்வுகளை முடக்கியதும், நைஜீரியர்கள் ஒரு வழிப் பாதையில் பலப்பிரயோகம் செய்து திரும்பியதும், வயதானவர்கள், நடக்க முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டதும், கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று பல்வேறு காரணங்கள் சொன்னாலும், இதிலிருந்து பல படிப்பினைகளைப் பெற வேண்டியுள்ளதையும் மறந்துவிடக் கூடாது.

அபயமளித்தல் என்பதன் உள்பொருள் மனிதருக்கு மனிதர் அபாயம் ஏற்படுத்தாமல் இருப்பதே என்கிறார், சவூதியின் ராக்கா இஸ்லாமிய மையத்தின் அழைப்பாளரான மவ்லவி முஜாஹித் இப்னுரசீன்.

ஹரம், ஹராம் என்ற சொற்களுக்கு சங்கை பொருந்தியது, தடுக்கப்பட்டது ஆகிய பொருள்களுண்டு. மெக்காவின் புனித ஆலயம், மஸ்ஜிதுல் ஹரம் என்றும், மஸ்ஜிதுல் ஹராம் என்றும் அழைக்கப்படும். தடுக்கப்பட்டது (ஹராம்) என்ற சொல்லை உண்ண, பருக, உபயோகிக்க தடுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடவே பொதுவாகப் பயன்படுத்துவர்.

முஸ்லிம்களின் புனிதத் தலத்தை ஏன் ஹராம் என்ற சொல்லால் குறிப்பிட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பேசுவது, உண்பது, குடிப்பது போன்ற இயல்பான செயல்கள் தொழுகையின்போது தடுக்கப்பட்டவை.

எனவே, தொழுகையின் துவக்கத்தில், தக்பீர் தஹ்ரிம் என்ற இறைத் துதியைக் கூறுவர். அதன்பிறகு தொழுகை முடிவது வரை, பேசுவது, உண்பது, குடிப்பது, சைகை செய்வது போன்ற செயல்கள் தடுக்கப்பட்டதாகிவிடும்.

அதேபோல, மெக்காவின் புனிதப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், ஒரு புல்லைக் கிள்ளுவது, ஒரு மனிதரைத் தள்ளுவது, ஓர் உயிரைக் கொல்லுவது உள்ளிட்ட செயல்கள் யாவும் தடுக்கப்பட்டதாகிவிடும். கஃபத்துல்லாஹ் என்ற கன சதுர வடிவப் புனித ஆலயத்தின் நான்கு மூலைகளுக்கும் ருக்னுல் ஹிந்த், ஹிஜ்ரி இஸ்மாயில், ருக்னுல் ஷாம் (சிரியா), ருக்னுல் யமான் (ஏமன்) எனப் பெயர்களுண்டு (ருக்ன் என்றால் மூலை என்றுபொருள்).

இதில் இந்திய மூலையான (ருக்னுல் ஹிந்த்) மற்றும் புனித நுழைவாயிலான முல்தஜம் ஆகியவற்றினிடையே பதிக்கப்பட்டுள்ள ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல்லை நபிகள் நாயகம் தனது தோளில் தாங்கி சுவரில் பதித்ததாகவும், அதனை முத்தமிட்டதாகவும் செய்தி உண்டு.

நபிகள் நாயகம் அதை முத்தமிட்டதால், புனிதப் பயணிகளும் அதை முத்தமிட முனைவதுண்டு. ஆனால், அதற்காக முண்டியடித்து, தள்ளுமுள்ளில் ஈடுபட்டு, முரட்டுத்தனம் காட்டக் கூடாது. அதை முத்தமிடுவது நபிவழி (சுன்னத்) தான், ஆனால் அங்கு ஒருவரைப் பிடித்துத் தள்ளுவதும், நெருக்குவதும் தடுக்கப்பட்டது (ஹராம்). ஒரு ஹராமை செய்து சுன்னத்தை நிறைவேற்றுவது ஏற்புடையதல்ல. ஆனால், இதை மிகப் பெரும்பான்மையான புனிதப் பயணிகள் கடைப்பிடிப்பதில்லை.

மெக்கா நகரின் உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஹஜ் முடிந்தபின் பெருந்திரள் மேலாண்மையின் புதிய கூறுகள் குறித்து ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன.

நம் நாட்டில் பெருந்திரளில், அத்துமீறுவோரைக் கட்டுப்படுத்த தடியடி, கண்ணீர்ப் புகை, தண்ணீர் வீச்சு, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். உலகம் முழுவதும் இதே நிலைதான். ஆனால், மெக்காவில் காவல் துறையினருக்கு ஹாஜிகளை வன்மையாகத் தொடக்கூட அனுமதி இல்லை. வாய்மொழியின் மூலமே 25 லட்சம் பேரை அவர்கள் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

மெக்காவின் பெருந்திரள் மேலாண்மையில் உள்ள மிகப் பெரிய சவாலும் சிக்கலும் இதுதான். சாத்தானுக்குக் கல்லெறியும் சடங்கின்போது ஏற்படும் கூட்ட நெரிசல் விபத்துகளைத் தடுக்க, ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதை கூடாரத்திலேயே குறித்து விடுகிறார்கள். கடமையை விரைந்து நிறைவேற்றும் ஆர்வக் கோளாறில் நெறிப்படுத்தல்களைப் புறக்கணிப்பது விபத்துகளுக்கு வித்திடுகிறது.

ஒப்பீட்டளவில் இதற்கு முன் இருந்த சவூதி மன்னர்களைவிட, இப்போதைய மன்னர் சல்மான், சவூதி அல்லாதவர்

களின், குறிப்பாக அங்குள்ள இந்தியர்களின் அன்புக்கு உரியவராகத் திகழ்கிறார்.

இவருக்கு முன்பிருந்த மன்னர் அப்துல்லா ஒரு சவூதிக் குடிமகனைத் தாக்குவது என்னையே தாக்கியதற்கு சமம் என்று கூறி அரபு தேசியத்திற்கு ஊக்கமூட்டினார். இதனால், சவூதி அரபிகள் அங்குள்ள பிற நாட்டவர்கள் மீது அத்துமீறும் சம்பவங்கள் பல அரங்கேறின.

இப்போதுள்ள மன்னர் சல்மான், முறையான நுழைவுச் சீட்டு பெற்று, சவூதியில் வசிக்கின்ற, பணியாற்றுகின்ற யாவரும் சமமானவர்களே என்று பதவியேற்றவுடன் அறிவித்தது, நம் மக்களுக்கு பெரும் உற்சாகம் தந்துள்ளது.

இறைவனின் விருந்தினர்கள் என்ற தகுதிப்பாட்டோடு வரும் ஹாஜிகளை தனது குடிமக்களை விடக் கூடுதல் மரியாதையுடன் சவூதி அரசு நடத்த வேண்டும் என்கிற மன்னர் சல்மானின் விருப்பப்படியே நடத்துவதாக அங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.

ஹஜ் நேரத்தில் ஹாஜிகளுக்குப் பணிவிடை செய்வதற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் ஹஜ் ஊழியர்கள் (காதிமுல் ஹுஜ்ஜாஜ்) வரவழைக்கப்படுகின்றனர். தமிழக அரசும் தனது முஸ்லிம் ஊழியர்களை இப்பணிக்கு அனுப்பி வைக்கிறது. அதேபோல், மருத்துவக் குழுவும் பல்வேறு நாடுகளிலிருந்து அழைக்கப்படுகின்றன.

ஹஜ்ஜைவிட அதிக அளவில் மெக்காவில் மக்கள் திரளும் புனித ரமலான் மாதங்களில் மிகச் சிறப்பான முறையில் பெருந்திரள் மேலாண்மைத் திறனை சவூதி அரசு வெளிப்படுத்துகிறது. அதில் உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதில்லை.

சாத்தான் மீது கல்லெறிவது இறைத் தூதர் இப்ராஹிமை நினைவு கூரும் வகையில் அமைவதாகும். சாத்தான் அவரது மனதைக் கலைக்க முயன்ற இடங்களில் கல்வீசும் சடங்கு நடைபெறுகிறது. இயலாமையும், முதுமையும் உடையோர் தன்சார்பில் மற்றவரைக் கல்வீச நியமிக்கலாம். ஏன் ஹஜ் பயணத்திற்கே தன் சார்பில் பதிலியை அனுப்பலாம். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.

தொழுகையையும், நோன்பையும், தன்சார்பில் நிறைவேற்றுமாறு பிறரிடம் சொல்ல முடியாது. சாரத்தை மறந்துவிட்டு சடங்கை நிறைவேற்றுவதில் மட்டும் கடுமுனைப்புக் காட்டுமாறு இஸ்லாம் கூறவில்லை.

எந்த ஓர் ஆத்மாவுக்கும் அல்லாஹ் அதன் சக்திக்கு மீறி சிரமம் கொடுப்பதில்லை (திருக்குர் ஆன் 2 : 286) } என்ற இறை வசனத்தை சிந்திக்க வேண்டும்.

இந்த சாந்தி மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை என திருக்குர்ஆன் அறிவிக்கிறது. எவர் மென்மையை இழந்துவிட்டாரோ, அவர் நன்மையை இழந்துவிட்டார் என நபிகள் நாயகம் எச்சரித்தார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா எனப்படும் நபிகள் நாயகம் இவ்வுலகிலிருந்து விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதிப் பேருரையில், அறியாமைக் காலத்தின் மூடத்தனங்கள் யாவும் என் பாதங்களின் கீழே நசுக்கப்பட்டு விட்டன.

இந்த நாளும், நகரமும் எப்படிப் புனிதமானதோ அதைப்போல, உங்களின் சக இறை நம்பிக்கையாளரின் உயிர், உடைமை, மானம் ஆகியவை புனிதமானவை என்று குறிப்பிட்டார்கள்.

புனிதப் பயணம் செல்கிற யாவரும் தங்கள் மனதில் நபிகள் நாயகத்தின் நல்வழி காட்டலை ஆழமாய்ப் பதித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும் எனக்கூறும் திருக்குர்ஆன், எவ்வளவு உறுதியான கோட்டையில் மனிதன் இருந்தாலும் உரிய தவணை வந்துவிட்டால் மரணம் வந்தடைந்தே தீரும் எனவும் தெளிவுறுத்துகிறது.

மரணத்தின் மீது எதிர்பார்ப்பும், ஈர்ப்பும் இருக்கக் கூடாதே தவிர, இறை இல்லத்தில் எதிர்பாராமல் இறப்பதை இழப்பாக இறை நம்பிக்கையாளர்கள் கருதுவதில்லை. அதேநேரம், எதிர்பாரா விபத்துகளை எதிர்பார்த்து, பன்னாட்டு நிபுணர் குழுவை சவூதி அரசு எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வது மிக அவசியமானது.

கட்டுரையாளர்:

பேராசிரியர். ஜெ. ஹாஜாகனி

தினமணி 30 September 2015

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh