بسم الله الرحمن الرحيم
Sunday 21st July 2019 | 18 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயல் அரசியலர் கண்விழிக்கும் நேரமிது!அச்சிடுகமின்-அஞ்சல்
11 மார்ச் 2012 மாலை 10:49

நமது சின்னம்.... நமது வேட்பாளர்....போடுங்கம்மா ஓட்டு....போடுங்க லாத்தா ஓட்டு....உங்கள் சின்னம்...தாய்மார்களின் சின்னம்....வெற்றியின் சின்னம்.....காயல் மாநகர பெருங்குடி மக்களே! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை இந்த சின்னத்திலே முத்திரையிடுங்கள்...இவர்தான் வெற்றிவேட்பாளர், நமது வேட்பாளர் பற்றிய அறிமுகம் உங்களுக்கு அவசியமில்லை. காரணம் நீங்கள் அழைத்த போதெல்லாம் அல்லது நீங்கள் அழைக்காமலேயே நமதூரின் திருமண நிகழ்ச்சிகளாகட்டும் அல்லது மைய்யித் வீடாகட்டும், உடனடியாக ஓடோடிவந்து உங்களோடு அமர்ந்து உறவாடியவர். நம்மோடு கலந்து நாம் அளிக்கும் விருந்தை உண்டு மகிழ்பவர். எத்தனையோ வேட்பாளர்கள் வருவார்கள், உங்களிடத்தில் வாக்குகளை கேட்டுவிட்டுச் செல்வார்கள். ஆனாலும் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய சின்னம் நமது சின்னம்தான்.

நமது உயிரினும் மேலான நபிகள் பெருமானால் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் லா யர்ஹமுல்லாஹூ மன்லா யர்ஹமுன்னாஸ் - மனிதர்களிடம் இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். நம்மோடு விருந்தோம்பல் புரிந்து நமதூரோடு என்றும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் நம் பாசத்திற்குரிய என் கட்சிக்காரருக்குத்தான் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம்மீது இரக்கம் காட்டும் அவர்மீது நாமும் இரக்கம் காட்டவேண்டும். எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலே நீங்கள் மறக்காமல் நமது சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளர் அவர்களை அமோக வெற்றிபெற செய்வது உங்களின் தார்மீகக்கடமை. இதை நான் சுயமாக சொல்லவில்லை நபிகள் பெருமானாரின் கூற்றின் அடிப்படையில் சொல்கிறேன் - நிற்க!

என்ன வாசகரே! கட்டுரையின் ஆம்பம்பமே அரசியல் கூப்பாடோடு துவங்குகிறதே என்று எண்ண வேண்டாம். காயலராகிய நம்மிடையே இருக்கவேண்டிய அரசியல்சார் விழிப்புணர்வை அலசுவதுதானே இந்த தலைப்பின் நோக்கம். மேற்கண்ட வரிகள் வேறொன்றுமில்லை, கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலின்போது நமதூரில் அனல் பறக்கும் பிரச்சார உரை வீச்சின் ஒருபகுதிதான் அது.

இப்பிரச்சாரங்களை சற்று விலகியிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்பர் அருகாமையில் நின்று கொண்டிருந்த ஒரு ஆலிமிடம் இப்படி சொன்னார், என்ன ஆச்சு? தன் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதற்கு நபி மொழியையா இழுத்துப் போடுவது?

Politics is a rotten egg; if broken, it stinks  அதாவது அரசியல் என்பது ஒரு அழுகிய முட்டை, அது உடைந்தால்தான் தெரியும் அதன் வாசனை என்ற ரஷ்ய பழமொழிதான் நம் நினைவிற்கு வருகிறது.

நமதூரின் நற்குணம் கொண்ட சிந்தனைவாதிகள் கனிசமான அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் தங்களை இணைத்துக் கொண்டு நமதூருக்காக நற்பணியாற்றிக் கொண்டிருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கத்தான் செய்கிறது- அவர்களையும் நாம் மறுப்பதிற்கில்லை. மார்க்க அடையாளங்களை இழக்காமல் அரசியல் களப்பணியாற்றிடும் அத்தகைய நன்மக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத்து செய்வானாக!. இருப்பினும் நமதூர் நன்மைக்காக நமதூர் ஓட்டுவங்கியை காட்டி, தான் சார்ந்திருக்கும் கட்சித்தலைமையில் காரியம் சாதிப்பதற்கு பதிலாக தங்களுக்கு கிடைக்கும் சில காரியங்களை மனதிற்கொண்டு நமதூர் நலனை மறக்காமல் மறக்கும் சிலரும் நம்மில் உண்டு என்பதையும் எவரும் மறைக்க இயலாது. ஆக மொத்தத்தில் அரசியலில் நேர்மை - பொது வாழ்வில் தூய்மை - இலட்சியத்தில் உறுதி போன்ற எதுகை மோனைகளும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற அடுக்கு மொழிகளும் எழுத்திலும் பேச்சிலும் மட்டும்தான் பிரகாசிக்கின்றது.

நமதூரில் ஒரு வயதுமுதிர்ந்த மூத்த அரசியல்வாதி இவ்வாறு சொன்னார்கள். மனிதன் பிறக்கும்போதே அரசியல் தெரிந்தவனாகவே பிறக்கிறான். அதனால்தான் தனக்கு பால் கிடைப்பதற்காக குழந்தை அழுகையை வெளிப்படுத்தி அதை பெற்றுக்கொள்கிறது. அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற பழமொழி நம் நாட்டு அரசியலுக்கு சாலப் பொறுந்தும். நாங்கள் 1960 களில் அரசியல் பொது வாழ்வில் இருந்தபோது தேர்தல் வருவதற்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே, மதராஸூக்கு பயண மேற்கொள்வோம். எங்கள் கட்சி மேலிடத்தை சந்தித்து எங்கள் தலைவர்களிடம் இவ்வாறு பேரம் பேசுவோம். அதாவது எங்கள் ஊர் காயல்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நம்கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கிறது. அவைகள் இன்னென்ன காரணங்களினால் எதிர்கட்சிக்கு சென்றுவிடுமோ என்று அஞ்சுகிறோம்.

அவ்வாறு ஒட்டுமொத்தமாக நமது வாக்குகள் மாறிவிழும் பட்சத்தில் நாம் வரும் தேர்தலில் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல. எனவே எங்கள் ஊர் ஒட்டுமொத்த ஜமாஅத்தார்கள் முடிவின்படி இவைகளெல்லாம் எங்கள் மக்களின் கோரிக்கைகள். இக்கோரிக்கைகளை நிறைவேற்றவதற்காக தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே நீங்கள் திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்துங்கள் என்போம். Those who do not do politics will be done in by politics - அரசியல் செய்யாதவன் அரசியல் மூலம் செய்யப்படுவான் என்பதுபோல கட்சி பாரபட்சமின்றி இவ்வாறு பேசிதான் பல கோரிக்கைகளையும் நமதூருக்காக நாம் வென்றிருக்கிறோம். அனால் இன்றைய காலகட்டத்தில் நமது அரசியலர்களிடம் தம் தலைமையிடம் நேரிடையாக சென்று கோரிக்கை வைக்கும் அளவிற்குக்கூட செல்வாக்கு இல்லாத நிலைதான் உள்ளது. மேலும் ஊர் நலனில் யார்தான் அக்கரை கொள்கிறார்? இன்று அரசியல்கூட வியாபாரம் ஆயிற்றே! என்று வருந்தினார். மேலும் அவர்கள் கூறுகையில் இன்றைய தலைமுறையினர் எங்களைப் போன்று செயல்படாவிட்டாலும் பரவாயில்லை எங்கள் ஊர் ஓட்டு அனைத்தும் உங்களுக்குத்தான் தலைவரே! என்று வழியபோய் நம்மை அடகுவைக்கும் போக்குகளும், ஒரே கட்சியினரிடம்கூட நிலவும் ஒற்றமையின்மையும், சககட்சிக்காரர்களை பழிவாங்கும் போக்குகளும் நம்மிடையே இன்று மலிந்துவிட்டனவே என்று வேதனையுற்றார்.

அவர்கள் சொன்னது ஏதோ உண்மைதான். தனக்கு பிடிக்காதவர் என்பதற்காக ஒருவருக்கு இரண்டு ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளன என்றும், இவருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கின்றன எனவே இந்த வார்டிலிருந்து இவர் பெயரை நீக்குங்கள் என்றும், ஜாபிதாவில் இன்னென்ன பெயர்களையெல்லாம் நீக்கவேண்டும் என்றும், இவர்களெல்லாம் எங்கள் வார்டைச் சார்ந்தவர்கள் இல்லை என்றெல்லாம் தேர்தல் பணியாளர்கள், வட்டவழங்கல் அலுவர் போன்றோரிடம் வழியபோய் போட்டுக்கொடுக்கும் தன்னார்வத் தொண்டர்கள், ஐந்தாம்தர அரசியல்வாதிகள் இன்று நாடெங்கும் மலிந்து விட்டார்கள் என்பது கசப்பான உண்மைதான். ஒரு கட்சிக்கு வாக்களிப்பதுதான் நம் தார்மீகக் கடமைபோன்று நமதூர் மக்கள் இன்றும் கருதிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மிடையே எத்தகைய அரசியல் விழிப்புணர்வு அவசியம் தேவை என்பதைக்கூட வரையறுக்கத் தெரியாத நிலையில்தான் நமது அரசியலர்கள் பலர் உள்ளனர்.

உதாரணமாக நகரில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிவரும் படிதாண்டும் மங்கையர்களை தடுத்து நிறுத்தவும், அவ்வாறு காதலின் பெயரால் திட்டமிட்டு நமதூர் இளம்பெண்களை கடத்தி அவர்களின் மானத்தோடு விளையாடும் கயவர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் எந்த பொதுநால அரசியல் அமைப்பினர் முன்வந்துள்ளனர்? இதற்காக நமதூரில் என்னென்ன முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன?. சரி தம் பிள்ளைகளை அவ்வாறு பரிகொடுத்தவர்களின் குடும்பத்தினராவது ஒன்று சேர்ந்து இந்த அபாயத்தை தடுப்பதற்கு முன்வந்துள்ளனரா என்றால் அதுவும் இல்லை. நாங்கள் அரசியலில் மூத்தவர்கள்,சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள் என கர்ஜிப்பவர்களின் வாய்கள் இவ்விசயத்தில் மெளனம் காப்பதும் அவர்களின் கூர்வாள் பேனாக்கள் மேற்கண்ட விஷயத்தில் முனைமழுங்கி போனதும் ஏனோ?

இன்னும் நமதூருக்கென்றே பிரத்தியேகமாக நடைமுறையில் உள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எத்தனை அரசியலர் எத்தனை கூட்டங்களை கூட்டியுள்ளனர்? நமதூர் மக்களின் வீடுகட்டுமானப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக இதே காயல்நியூஸ் இணையதளம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதே  அவற்றை எந்த அரசியலர் கண்டுகொண்டார்? நமதூரின் தனியார் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதற்கு தீர்வுகள் என்ன?நமதூரை கொன்றொழிக்கும் கேன்ஸரை ஒழிக்க அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் என்ன?இன்னும் நமதூரில் சுகாதாரமற்ற நிலை என்பது DCW என்னும் உயிர்க்கொல்லி தொழிற்சாலையின்கழிவுகள் முதல் நாம் அன்றாடம்தொழப்போகும் பள்ளிவாயில் கழிப்பறைவரை அசுத்தக்கேடுகள் தொடர்கிறதே இவைகளுக்கு என்ன தீர்வு எட்டப்பட்டுள்ளது?

சில நேரங்களில் பொதுமக்களின் விமர்சனங்கள் தங்கள் பக்கம் பாயும்போது அதற்கு பதிலாக நமதூரின் எழுத்தாளர்களையும், சமூகசேவகர்களையும் அநாகரிக சுடுசொற்களாலும், இன்னபிற நெருக்கடிகளை கொடுக்க தயங்காத அரசியலர்கள் இவ்வாறான அவசியம் கவனம் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்களில் என்ன தீர்வை சொல்லியிருக்கின்றனர்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் தொடுக்க இயலும்.

சரி இவைகளெல்லாம் நமதூருக்கான சேவைகள் என்ற பட்டியலில் சேரும், அரசியலுக்கும் சேவைக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் கேட்கலாம். அரசியல் பொதுவாழ்வில் பல ஆண்டுகாலம் பணியாற்றுவதாக மார்தட்டிச் சொல்லும் என் அன்பிற்கினிய அரசியலர்களே! நீங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி சார்பில் நம் தொகுதியில் ஏன் போட்டியிடக் கூடாது?

உங்கள் சட்சி சார்பில் அதற்காக ஏன் நீங்கள் விண்ணப்பிக்கக் கூடாது? சகோதர சமுதாயத்தவர்களை சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் உங்கள் உடல் பொருள் ஆவியை செலவளிக்கும் உங்களுக்கு, கட்சி வளர்ச்சிக்காக உங்கள் குடும்பத்தைக்கூட பிரிந்து தியாகம் செய்யும் உங்களுக்கு, உங்கள் கட்சியின் வெற்றிக்காக கச்சை கட்டிக்கொண்டு உழைத்து அதற்காகவே மூளையை கசக்கிப் பிழியும் உங்களை சட்டமன்றத்தில் அமர்த்தி அழகுபார்க்க உங்கள் கட்சித்தலைமைக்கு மனம் வருவதில்லையே ஏன்? நீங்கள் ஒரு முஸ்லிம் என்பதால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்பது உண்மையா இல்லையா? அல்லது அவ்வாறு தொடர்ந்து உங்களை புறக்கணிப்பதைக் கூட நீங்கள் அறியவில்லையா?

ஈட்டிமுனையில் நிறுத்தினாலும் என் கட்சியைவிட்டு பிரியமாட்டோம் என்ற கொள்கை பிடிப்புள்ள சகோதரனே! இதை எப்போதாவது யோசித்ததுண்டா? சட்டமன்றம் இருக்கட்டும், உங்கள் கட்சியின் மாவட்ட மண்டல மாநில பொறுப்புகளில் உருப்படியான பொறுப்புகளை உங்கள் கட்சி தலைமை உங்களுக்கு தரட்டுமே பார்க்கலாம். இங்கு கட்சி கட்சி என்று நாம் குறிப்பிட்டுள்ளது நமது மாநிலத்தை ஆட்சி புரியுமளவிற்கு வளர்ந்துள்ள பெரிய கட்சிகளை குறிப்பிடுகிறோம் லட்டர்பேடு கட்சிகளை அல்ல.

மக்களே! மற்றொரு கோணத்தில் நாம் சிந்தித்தால் நமது நகர அரசியலர்கள் பாவம் அப்பாவிகள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அரசியலில் தங்களை இணைத்துக் கொண்டதற்காக அவர்கள் இழந்த நிம்மதிகள் ஏராளம். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சொல்லிமாளாது. அவ்வாறு அவர்கள் எதிர் நோக்கும் கஷ்டங்களுக்கு சமூகத்தில் எவ்வித அதரவுகளோ அனுசரனையோ கிடைப்பதில்லை. நகரில் யாரோ சிலர்கள் ஆர்பாட்டம் பண்ணுவர், வழக்கம்போல இவர்கள் மீதும் வழக்கு விழும். பிரச்சனைகளின் போது காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் விசாரிப்பது முதலில் இவர்களைத்தான். இவர்களது கட்சிகளில் மாவட்ட அல்லது மேலிடமட்டத்தில் நடக்கும் முறைகேடுகளுக்குகூட இவர்கள்தாம் நமதூர் வீதிகளில் நின்று பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம்.

இன்னும் இவர்களுக்கு நம் சமுதாயத்தில் பெரிய அளவில் அங்கீகரங்களோ, தங்கள் குடும்பத்தை தூக்கி நிறுத்தும் பொருளாதார சக்திகளோ இல்லாமல் தங்கள் வாழக்கையை அரசியல் பணிகளுக்காக அற்பணித்தவர்கள். அவ்வளவு ஏன் அரசியலர்களின் பொதுவாழ்வில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு அவர்களின் சொந்த குடும்பத்தில் தார்மீக ஆதரவு கிட்டியுள்ளது என்பதையும் அவர்களிடமே கேட்டால் நிலைமை புரியும். இவற்றை சரிசெய்யாமல் அரசியல்வாதி லஞ்சம் வாங்குகிறான், ஊழலுக்கு ஒத்து ஊதுகிறான் என்று வெறுமனே சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. காரணம் அரசியல்வாதிகளில் எத்துனை பேர் நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள்? இவர்கள் அரசியலைவிட்டும் விலகி நிறுவனங்களில் வேலை செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாதவர்கள்தாம் அதிக அளவில் இருக்கின்றனர். இவைகள் யாரும் மறுக்க இயலாத உண்மைகளே!

இருப்பினும் இத்தனை தியாகங்களும் நாளை மறுமையில் அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தருமா என்பதையும் நகரின் ஒட்டமொத்த அரசியலர்களும் தயவுகூர்ந்து ஒரு கணம் சிந்தனை செய்யவேண்டும். நாளை மறுமையின் நிரந்தரமான வெற்றி தற்போதைய சாக்கடை அரசியலில் களப்பணியாற்றுவதின் மூலம் கிட்டுவது அசாத்தியமே!

மக்களே! நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளும் நம் ஒரேதலைவர், ஈடுஇணையற்ற தலைவர், அல்லாஹ்வின் தூர் முஹம்மது (ஸல்) அவர்களின் அரசியல் வாழ்வை நாம் அனைவருமே சற்று ஒப்பிட்டுபார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து அவர்கள் மதினா சென்ற பிறகு அவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் ஒருசேரப் பெறுகிறார்கள். அன்றைய உலகில் கோலோச்சியிருந்த ரோமாபுரியும் பாரசிகமும் கண்டு நடுங்கிய முஹம்மது (ஸல்) என்ற மாமன்னருக்கு பல்லாக்கு இல்லை, வாயிற்காப்போன் இல்லை. அவர்களுக்கு முன் பின் அடியாட்கள் இல்லை. எவரையும் தனது காலில் விழுவதற்கு அவர்கள் அனுமதித்ததில்லை. மனிதன் காலில் மனிதன் விழும் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்தார்கள். தனக்காக யாரும் எழுந்து மரியாதை செலுத்தக்கூடாது என்றார்கள். மிகச்சாதாரண மனிதன் எதிர்பார்க்கும் புகழைக்கூட வெறுத்தார்கள். கிருத்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை வரம்புமீறி புகழ்ந்தது போன்று என்னை புகழ்ந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். நூல் : இப்னு மாஜா 3303

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன்' எனக் கூறினார்கள். நூல் : பஸ்ஸார் 1293

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். நூல் : புகாரி 3906

தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். நூல் : தப்ரானி (கபீர்) 12494

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகிறார். நூற்கள்: அபூதாவூத் 3278இ இப்னுமாஜா 240 அஹ்மத் 6262

நம் இந்திய நாட்டில் ஒருவர் MLA ஆகிவிட்டாலே அவர் போடும் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக ஆட்சி அதிகாரத்திலிருந்தும் அரண்மனை சுகம் காணாமல் இறுதி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணிக்கிறார்கள். இந்த சத்திய இஸ்லாத்தைச் சொல்லி தனக்காக எந்த நிலையிலும் செல்வம் திரட்டவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அன்றாடம் வயிரார உண்டதில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து அவர்கள் வீட்டில் அடுப்பெறிந்த சரித்திரமில்லை.

பல நாட்கள் பட்டினியோடும் உண்ண உணவின்றி வெறும் பேரீத்தம் பழத்தையும் தண்ணீரையுமே உணவாக உட்கொள்ளும் அளவிற்கு ஏழ்மை நிலையிலே வாழ்ந்தார்கள். பைத்துல்மால் என்னும் அரசுக்கருவூலத்திற்கு நிதிகளும் கனிவர்க்கங்களும் வந்து குவிந்து கிடந்த வேளையில் ஒரு நாள் சிறு வயது தனது பேரக்குழந்தை ஹஸன் (ரழி) அரசுக்கருவூலத்தில் இருந்த ஒரு பேரீத்தம் பழத்தை தனது வாயில் விட்டுவிடுகிறார். இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரக்குழந்தையின் வாயில் தன்விரலை விட்டு பேரீத்தம் பழத்தை வெளியே துப்பச்செய்து 'அப்பேரீத்தம் பழம் அரசாங்கத்தின் சொத்து தமக்குச் சொந்தமானதல்ல' என்று அறிவுறுத்துகிறார்கள்.

தனது கவச ஆடையை தன் உணவிற்காக அடமானம் வைத்து அதை மீட்க முடியாத ஏழ்மை நிலையிலேயே அன்றைய மாமன்னராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கின்றார்கள்.

இத்தகைய அப்பழுக்கற்ற தலைவரின் வழிகாட்டுதலில் அமையப்பெற்ற இஸ்லாம் என்னும் பேரியக்கத்தின் அங்கங்களாகிய நாமும், நம் அரசியலர்களும் எவ்வாறு நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நிதானமாக சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரமிது! செய்வோமா?

ஆக்கம் : நமது கட்டுரையாளர்,

அபூ ரைஹான்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com