இறைவனை ஏன் நினைவுகூர வேண்டும்..? ஆன்மீக கட்டுரை!!அச்சிடுக
09 செப்டம்பர் 2015 மாலை 10:13

வணக்கங்களிலேயே இலகுவான வணக்கம் இறைவனை நினைவு கூருதல் தான். இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கவேண்டிய தேவையில்லை.. தனி முயற்சிகள் எதுவும் செய்யவேண்டியதில்லை. நிம்மதியை அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் கூறும் வழிபாடுகளிலேயே மிகச் சிறந்த வழிபாடு இதுதான். ஒருவகையில் நிம்மதியைப் பெறுவதற்கான மிகச்சிறந்த வணக்கம் என்றும் இதனைக் கூறலாம்.

தொழுகை, நோன்பு, ஜகாத் இவை அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம், காலம் இருக்கின்றது. ஆனால் இறைவனை நினைவு கூருவதற்கு எதுவும் தேவையில்லை. எப்போதும் செய்யலாம். எங்கும் செய்யலாம். அங்கத் தூய்மை என்று கூறப்படும் 'ஒளு' இருந்தாலும் இல்லையென்றாலும் இதனைச் செய்யலாம்.

படுக்கையில் படுக்கும்போதும், சமையலறையில் சமைக்கும் போதும், பிறருக்காக காத்திருக்கும் போதும் எங்கும் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வணக்கம்தான் இறைவனை நினைவு கூருதல். இதற்கென தனி இடம் தேவையில்லை, தனி ஏற்பாடுகள் தேவையில்லை, தனித்திட்டமிடுதல்கள் தேவையில்லை.

இறைவனை நினைவு கூருதலே பெரும் நிம்மதியைப் பெற்றுத்தரும் என்பதை திருக்குர்ஆன் உறுதிபடக் கூறுகின்றது.

'மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!' (13:28)

இறைவனை ஏன் நினைவுகூர வேண்டும்..?

மனிதனுக்கு இன்றைய நாகரிகம் தந்த பரிசு என்ன தெரியுமா..? கவலை, மன அழுத்தம், பதற்றம், தனிமை உணர்வு, வெறுமை.. என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஏதோ ஒருவகையில் எல்லோரும் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊமை கண்ட கனவுபோல யாரும் வெளியே சொல்வதில்லை. சொல்வதில்லை என்று கூறுவதை விட சொல்ல முடிவதில்லை. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஊமை கனவு கண்டால் அதை எப்படி வெளிப்படுத்த முடியாதோ அவ்வாறே அனைவரும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

எல்லோரும் இவற்றில் இருந்து விடுதலை பெற நாடுகின்றனர். ஆயினும் முடியவில்லை. 2011–ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் மன நோயாளிகளின் எண்ணிக்கை 24 கோடி. உலகுக்கே நாகரிகத்தைக் கற்றுக்கொடுப்பவர்கள் என்று சிலர் கருதும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தற்கொலை செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்திற்கும் அதிகமான மணவிலக்குகள் அங்கே நடைபெறுகின்றது. இது 2004–ம் ஆண்டின் கணக்கெடுப்பு. தற்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித் திருக்கும்.

ஏன்..? என்னவாயிற்று..? பண்டைய காலத்தைவிட மனிதன் அனைத்து விவகாரங்களிலும் முன்னேறியிருக்கின்றான். வசதி வாய்ப்புகள் முன்பைவிட பலமடங்கு பெருகியிருக்கிறது. எல்லாம் இருக்கிறது.. இருந்தும் ஏன் இந்த தற்கொலை..? கேட்டவை எல்லாம் கிடைக்கிறது. இருந்தும் ஏன் இந்த விரக்தி நிலை..? விரும்பும் அனைத்தையும் அனுபவிக்கலாம். இருந்தும் ஏன் இந்த மனச்சோர்வு..? ஏன் இந்த நிம்மதியின்மை..?

காரணம் ஒன்றுதான். ஆன்மிகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இறைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் மனிதம் கண்டிருக்கும் அபரிமிதமான வசதியும் வாய்ப்புகளும் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்கவில்லை. சிரிப்பவன் கூட இன்று போலியாக சிரிக்கின்றான்.

20–30 வருடத்திற்கு முன்பைவிட வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கின்றது. ஆனால், கவலைகளும் அதே போன்று உயர்ந்திருக்கின்றது. வசதிகளும் வாய்ப்புகளும் அதிகரித்த அதே அளவுக்கு மனநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஏன்...? என்ன காரணம்..? பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்துவிட்டால் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எண்ணியதால் ஏற்பட்ட விளைவு.

இன்றைய மனிதனுக்கு எல்லாம் தெரிகின்றது. விண்ணைத் தெரிகிறது. மண்ணைத் தெரிகிறது. ஆனால், தன்னைப் படைத்த இறைவனை மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.

இதயத்தின் மருத்துவர் என்று புகழ்பெற்ற இப்னுல் கையூம் என்ற பேரறிஞர் கூறுகிறார்: 'மனித உள்ளத்தில் ஒரு தனிமை உணர்வு இருந்து கொண்டே இருக்கும் – படைத்தவனை அறிவதாலேயன்றி அதற்கு மருந்து இல்லை. மனித உள்ளத்தில் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருக்கும் – இறைவனை நினைவு கூருவதைத் தவிர அதற்கு வேறு தீர்வு இல்லை. மனித உள்ளத்தில் ஒருவித கவலை இருந்துகொண்டே இருக்கும் – இறைநெருக்கத்தைத் தவிர அதற்கு வேறு விடையில்லை'.

மகான்கள் என்று சொல்லப்படுபவர்கள் இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனை என்ன தெரியுமா...? 'இறைவா! எல்லா சுகங்களையும் முட்டாள்களின் காலடியில் வை! நிம்மதியை மட்டும் எங்களுக்குத் தா!'.

ஆம்! இறைவனைக் குறித்த நம்பிக்கை மனதில் இருந்தால் துன்பம் எல்லாம் தூசுதான்.

ஆக்கம்: நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh