இயலாத சுமையை தூக்காதே! ஆன்மீக கட்டுரை!!அச்சிடுக
15 செப்டம்பர் 2015 மாலை 11:18

ஒருசிலர் இப்படியும் இருக்கின்றார்கள்... யார் எதைக் கேட்டாலும் 'நான் இருக்கின்றேன்.. என்கிட்ட சொல்லிட்ட இல்லே.. பிரச்சினையை விடு.. நான் முடித்துத் தருகின்றேன்' என்று கூறுவார்கள். பின்னர் எதையும் செய்ய முடியாமல், எதற்கும் இயலாமல் கைகளைப் பிசைந்தவாறு, இறுதியில் வருத்தம் தெரிவிப்பார்கள்.

இவர்கள் ஏமாற்றுபவர்கள் அல்ல. ஆயினும் தன்னால் தூக்க முடியாத சுமையைத் தூக்கியவர்கள்.

Heavy-load

எண்ணம் என்னவோ நல்லதுதான். ஆனால், நம்மால் முடியுமா.. என்னால் இது சாத்தியமா..? என்று எதைக் குறித்தும் யோசிக்காமல் சகட்டு மேனிக்கு வாக்குகுறுதி கொடுப்பது தவறு.

தெரிந்த ஒரு நண்பர், பள்ளிவாசல் இமாம் (தொழுகைக்குத் தலைமை தாங்குபவர்). மாதத்தில் ஒரு சில நாட்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளிவாசலுக்குக் கூட செல்வதில்லை. பொதுமக்களின் புகார் அதிகரித்தபோது விசாரித்தனர். அப்போதுதான் ஓர் உண்மை வெளிப்பட்டது.

பள்ளிவாசல் இமாம் என்றால் பலரும் அவரை சந்திப்பார்கள். உதவி கேட்பார்கள். நமது நண்பரோ, யார் எதைக் கேட்டாலும் அனைவரிடமும் , 'என்னால் முடியும்.. நான் முடித்துத் தருகின்றேன்' என்று வாக்குறுதி கொடுப்பவர். ஆனால் எது தன்னால் இயலும், எது இயலாது என்று எதைக் குறித்தும் ஆலோசிக்காமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதி கொடுத்துள்ளார்.

கொடுத்த வாக்குறுதியில் அநேகமானவற்றை நிறைவேற்ற முடியாமல் போக.. இறுதியில் வீட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாத நிலை. காரணம், மக்களுடைய புகார் தான்.

'முடியாது என்றால் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமே..?, உங்களை நம்பித்தானே நான் இருந்தேன்.. இறுதியில் கழுத்தை அறுத்துவிட்டீர்களே..!. நீங்கள் உதவுவீர்கள் என்ற எண்ணத்தில் நான் வேறு யாரிடமும் இது சம்பந்தமாக பேசவில்லை.. கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே..!' என்று சகட்டு மேனிக்கு ஏகப்பட்ட புகார்கள்.

தூக்க இயலாத சுமையைத் தூக்கியதன் விளைவு.. மக்களின் வசைவும்.. வெளியே தலை காட்ட முடியாத நிலையும்.. தலை குனிவும்.

என்னால் முடியாது என்று இறுதியில் கூறுவதைவிட, எது முடியும் எது முடியாது என்று ஆராய்ந்து, உதவி கேட்பவர்களிடம் ஆரம்பத்திலேயே தெளிவான பதிலைக் கூறுவதுதானே புத்திசாலித்தனம். தூக்க இயலாத சுமையை ஏன் தூக்க வேண்டும்?

திருக்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை' (2: 286)

மேலும் இறைவன் கூறுகின்றான்: 'அல்லாஹ் எவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கின்றானோ அதற்கு மேலாக அவர் மீது அவன் பொறுப்பு சுமத்துவதில்லை' (65:7)

பொது மக்களுடைய தேவைகளின் போது மட்டுமல்ல.. மனைவி மக்களுடைய தேவைகளாக இருந்தாலும்.. தம்மால் எது முடியும்.. எது முடியாது என்பதைத் தெளிவாக அறிவித்து விடுவது தான் புத்திசாலித்தனம்.

வீட்டிலிருந்து வெளியேறும் போது தான்.. மனைவி கூறுவார் 'வரும் போது சர்க்கரையும், தேயிலையும் வாங்கி வாருங்கள்.. நாளைக்கு டீ குடிக்க சர்க்கரை இல்லை'.

உடனே 'சரி..சரி..' என்று தலையாட்டிவிட்டு வெளியே சென்றுவிடாதீர்கள். முடியும் என்றால் ஒத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் ஆரம்பத்திலேயே தெளிவாக 'என்னால் முடியாது' தெளிவாக அறிவித்து விடுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்கள்.

ஹுனைன் யுத்தம் முடிந்த கால கட்டம். அந்தப் போரில் மதீனாவைச் சார்ந்த அன்சாரிகள் நபிகளாருடன் பெரும் பங்கு வகித்தனர். பெரும் தியாகங்களைச் செய்தனர்.

போரின் முடிவில் பெரும் செல்வம் கிடைத்தது. அனைத்து செல்வத்தையும் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும், இஸ்லாத்தில் புதிதாக இணைந்தவர்

களுக்கும் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொடுத்தார்கள்.

மதீனாவாசிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. இச்செயல் மதீனாவாசிகளின் உள்ளங்களில் ஒருவித கவலையைத் தோற்றுவித்தது. 'இறைவனின் தூதர், தமது மக்களைக் கண்டபோது நம்மை மறந்துவிட்டார்' என்று வெளிப்படையாகவே பேசத்துவங்கினர்.

இயற்கையான உணர்வு தான் இது. ஏனெனில், போரில் தியாகங்களை அதிகம் தாங்கிக் கொண்டது மதீனாவாசிகள். நபிகளாருடன் நிழல் போல எப்போதும் கூடவே இருந்தவர்கள் மதீனாவாசிகள். ஆனால், நபிகளார் தங்களை மறந்துவிட்டார்களே என்று எண்ணினர்.

செய்தி அறிந்த நபிகளார் (ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப் பாருங்கள்.

மதீனாவாசிகள் அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டினார்கள். அவர்களிடம் உரையாடினார்கள். ஆனால் அந்த உரையாடல் எவ்வாறு அமைந்து இருந்தது தெரியுமா.. தன்னால் எது முடியும், எது முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக அறிவிக்கும் முகமாக, அனைவரும் திருப்தியுடன் கலைந்து செல்லும் முகமாக அமைந்து இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் அம்மக்களிடம் கேட்டார்கள்: ''அன்சாரிகளே..! உங்களிடம் நான் வருவதற்கு முன் நீங்கள் வழி கேட்டில் இருந்தீர்கள். என்னால் இறைவன் உங்களுக்கு நேர்வழியைக் காட்டவில்லையா..?

அன்சாரிகளே..! உங்களிடம் நான் வருவதற்கு முன் நீங்கள் வறுமையில் இருந்தீர்கள். என் வருகைக்குப்பின் இறைவன் உங்களுக்கு செல்வத்தைத் தரவில்லையா..?

அன்சாரிகளே..! உங்களிடம் நான் வருவதற்கு முன் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை பாராட்டக் கூடியவர்களாக இருந்தீர்கள். என் வருகைக்குப்பின் உங்களிடையே ஒற்றுமை நிலைநாட்டப்படவில்லையா..?

அன்சாரிகளே..! அழிந்து போகும் இந்த செல்வத்தையா நீங்கள் ஆசைப்படுகின்றீர்கள்?

அன்சாரிகளே..! மக்கள் அனைவரும், போரில் தங்களுக்குக் கிடைத்த பங்கீடாக ஒட்டகங்களையும் ஆடுகளையும் ஓட்டிக்கொண்டு செல்லும்போது, உங்களுடைய பங்கீடாக இந்த இறைத்தூதரை அழைத்துச் செல்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அன்சாரிகளே..! மக்கள் அனைவரும் ஒரு பாதையிலும் அன்சாரிகளாகிய நீங்கள் மற்றொரு பாதையிலும் நடந்து சென்றால்.. அன்சாரிகளாகிய நீங்கள் எந்தப் பாதையினூடாக நடந்து செல்கின்றீர்களோ அந்தப் பாதையில்தான் நானும் நடந்து செல்வேன்..!''

இந்த உரையைக் கேட்ட அனைத்து மதீனாவாசிகளும்.. மனம் மகிழ்ந்து, கண்களில் கண்ணீருடன், 'இறைத்தூதரே எங்களுக்குப் போதும்' என்று கூறினர். இது ஒரு நீண்ட வரலாற்று நிகழ்வு.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 'இன்னொரு போர் வரட்டும் உங்களுக்குத் தருகின்றேன்..' என்றோ, 'பார்க்கலாம்.. பார்க்கலாம்.. நான் இருக்கின்றேன்..! ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்' என்றோ நபி (ஸல்) அவர்கள் அம்மக்களிடம் பொய் சமாதானம் செய்யவில்லை. மோசடி வாக்குறுதிகளை அள்ளி வீசவும் இல்லை. உண்மை எதுவோ அதனை மட்டுமே கூறினார்கள். மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி, மக்கள் உள்ளங்களில் நம்பிக்கைத் தீயை ஏற்றிவிட்டு, பின்னர் என்னால் முடியாது என்று வருத்தம் தெரிவித்து, முடியாத சுமையைத் தூக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இந்நிகழ்வில் பெரும் பாடம் உள்ளது.

கட்டுரை: மவ்லவி நூஹ் மஹ்ழரி, 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh