பேச்சுலர் சமையல்!அச்சிடுக
01 ஜூன் 2011 மாலை 02:00

முதலில் சிக்கன் கறி...

தேவையான பொருள்கள்.

கோழி - 1

இஞ்சிபூண்டு அரைத்தது -கொஞ்சம்..

என்னத்த லிஸ்ட் போட்டுக்கிட்டு.

கோழியை சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி, நன்கு நீரை பிழிந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொட்டுங்க, அரைத்த இஞ்சி பூண்டு கொஞ்சம் போடுங்க(அளவா-நாம போடுறது தாங்க அளவு),இரண்டு பச்சை மிளகாய் ஒடித்து போடுங்க, கொஞ்சம் பட்டை,கிராம்பு, ஏலக்காய், போடுங்க, ஊர் மசாலா கொஞ்சம் போடுங்க, தேங்காய் பூ இரண்டு குத்து- மை போல கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொட்டுங்க.

(பயப்படாதீர்கள், இரண்டு குத்து என்பது தங்கள் நினைப்பது அல்ல, கல்யாண ரிசப்சனில் ரோஜாப் பூவை ஐந்து நுனி விரல் கொண்டு அள்ளுவோமே, அது மாதிரி இரண்டு அள்ளு-.முன்பு தேங்காய் கொலொஸ்ட்ரால் அதிகம் தொடவே கூடாது என்றார்கள், பின்பு கொலொஸ்ட்ரால் இல்லை என்றார்கள், இப்போது நல்ல கொலொஸ்ட்ரால் உற்பத்திப்பண்ணும் வேதிப்பொருட்கள் இதில் உள்ளது என்று சொல்லுகிறார்கள், ஒரே குழப்பம்தான் போங்க).

பின்பு கொஞ்சம் தயிர் ஊத்துங்க, கறிவேப்பிலை கொஞ்சம் போடுங்க, உப்பு போடுங்க அத்துடன் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி நன்றாக கிளறி அடுப்பில் ஏற்றுங்க...நெருப்பு மிதமாக எரியட்டும்..

(கையை கழுவும் முன்,கொஞ்சம் நாக்கில் வைத்து உப்பு பாருங்க..நுனி நாக்கில் வைத்துப் பாருங்க, அங்கு தான் சுவை அறியக்கூடிய அரும்புகள் உள்ளன,நடு நாக்கில் வைத்தால் சுவை அறிய முடியாது-ஆகவே தான் மாத்திரைகள் போடும் போது நடு நாக்கில் வைத்து லபக் என்று தண்ணீர் குடித்து விழுங்குகிறோம்-கசப்பு தெரியாமல் இருக்க.)

உப்பு சரியாக இருந்தால் ஓகே..குறைவாக இருந்தால் சொஞ்சம் போடுங்க,என்னது அதிகமாக இருக்கா...ஒரு உருளைகிழங்கை வெட்டிப் போடுங்க.

இன்னும் ஒரு டிப்ஸ், சட்டியை மூடிப்போட்டு மூடாமால், அரிசியை களைந்து, தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு அந்த சட்டியை கோழி வேகும் சட்டி மேலே வைத்து மூடி விடுங்க. ஆவியில் சோறும் பாதி வெந்து விடும்.

இப்போ,நீங்க உங்க அழுக்கு துணிகளை எல்லாம் துவைக்க போங்க..எல்லாம் துவைத்து முடிந்ததும் குளிக்க போவதற்கு முன்பு, கோழியை ஒரு கிளறு கிளறி விட்டு, வெந்து விட்டதா என்று பாருங்க. இன்னும் கொஞ்சம் கிடக்கணுமா..நெருப்பை சிம்மில் வைத்து விடுங்க..என்ன முழிக்கிறீங்க..SIM என்று காஸ் அடுப்பிலும் உள்ளதுங்க.

குளித்து முடித்ததும்,பாருங்க..கோழிக்கறி ரெடி.

நல்ல அளவா சாப்பிடுங்க..

மீதம் கோழிக்கறி இருக்கா..இரவு குழல் சேமியா,சங்கு சேமியா வாங்கி, தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து, வடித்து, கோழிக்கறியில் கொட்டி, கிளறி,சிறிது நேரம் தம்மில் வைத்து,பரிமாறுங்க.

காரம் அதிகம் என்றால் அடுத்த தடவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்க, புளிப்பு அதிகமா- தயிரை குறைத்து விடுங்க..இப்படி தான் சமையல் EXPERT ஆவது.

சாளை S.I.ஜியாவுதீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh