بسم الله الرحمن الرحيم
Monday 20th August 2018 | 08 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
பெண்ணின் பெருமை!அச்சிடுகமின்-அஞ்சல்
13 ஏப்ரல் 2012 காலை 08:27

பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.

பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.

பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தைதான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தப் பெண்மணிக்கு, கருப்பை பாதிக்கப்பட்டுள்ளதால் இனி குழந்தைப் பேறுக்கே வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக ஜோதிடரை கட்டி வைத்து அடிக்க நினைத்தாலும் முடியாதபடி அனைவரும் சிறையில் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) உடல் முழுதும் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட குழந்தை பாலக், சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்தக் குழந்தையைக் கொண்டுவந்த வளர்இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணின் தாய் உள்பட சிலர் பல மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, பலரால் சீரழிக்கப்பட்ட அவலம் தெரியவந்தது. இப்போது 13 பேரை கைது செய்திருக்கிறது புது தில்லி போலீஸ்.

சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில், இந்தப் பெண் குழந்தை என் குழந்தையே இல்லை. செவிலியர்கள் மாற்றிவிட்டார்கள் என்று மருத்துவமனையில் தகராறு செய்த ஒரு தந்தையை சமாதானப்படுத்தி உட்கார வைத்து, குழந்தையின் டிஎன்ஏ சோதனை மூலம் அது அவருடைய குழந்தைதான் என்று நிரூபித்துக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

பிளஸ்-2 தேர்விலும், கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும் பரிசும் பாராட்டும் அள்ளிக்கொண்டு வருவது பெண் குழந்தைகள்தான். வயதான பெற்றோர்களை, மகன்களைவிடப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வது யார் என்று கணக்கெடுத்தால், அதிலும் பெண்கள்தான் முன்னிலை வகிப்பார்கள். வயதான அப்பா, அம்மாக்கள் தங்களோடு வசிக்காவிட்டாலும், அவர்களுக்கு மகன்கள் கொடுக்காத அளவுக்கு கணிசமான பாக்கெட்மணி கொடுப்பதும் மகள்களே!

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்தாயிற்று. குடியரசுத் தலைவர், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என அரசியலில் ஆணுக்கு இணையாகச் செயல்படுகிறார்கள். அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் பெண்கள். இருந்தும்கூட, பெண் குழந்தை என்றால் குடும்பத்துக்குச் சுமை என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. பெண்களின் இந்தச் சாதனைகளை நம் வீட்டுக் குழந்தைகள் செய்யாது என்கின்ற அவநம்பிக்கைதான் இந்த பிற்போக்குத்தனத்துக்குக் காரணம்.

பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பிரச்னை தமிழகத்தில் இன்று பெருமளவு நீங்கிவிட்டது எனலாம். சாதனைக்குப் பாலினம் தடையல்ல எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெண்சிசுக் கொலைகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்பதற்கு தமிழகமே சாட்சி. இப்போது தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்ற பேச்சே இல்லை. அரசு அமைத்த தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதற்காகத் தமிழக அரசை மனமாரப் பாராட்டலாம்.

பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இளவயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.

இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!

காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.

""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

நன்றி: தினமணி

13 Apr 2012 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘இயற்கையைத் தேடி’ மூலிகைத் திருவிழா! 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்பு!!
அபூதபீ கா.ந.மன்றம் ஆக. 19இல் நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளம் வழியே பெயர் பதிவு செய்யலாம்!
ஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் & ஷிஃபா நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வசதி!
ஆக. 19 அன்று, காயல்பட்டினம் நகர மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படும் மருத்துவர்கள் விபரம்!
அமெரிக்காவில் மீண்டும் ஒரு காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com