RTO அலுவலகம் & “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில் சாலை பாதுகாப்பு வாரம் - 2017: ஜன. 18இல் இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணி நடைபெற்றது!அச்சிடுக
19 ஜனவரி 2017 மாலை 04:44

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO Office), காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இணைந்து, 18.01.2017. புதன்கிழமையன்று - காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப் பேரணி, 18 வயது பூர்த்தியடைந்த பொதுமக்கள் தலைக்கவசத்துடன் பங்கேற்ற - இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணி ஆகியவற்றை நடத்தின. 

துவக்க நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (United Sports Club – USC) மைதானத்தில், மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 

“நடப்பது என்ன?” குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் அஹ்மத் ரம்ஸீ கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து - “நடப்பது என்ன?” குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார். குழுமத்தின் மக்கள் நல செயல்பாடுகளை விளக்கி - அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார். 

வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள எல்.கே.லெப்பைத் தம்பி சாலை (கூலக்கடை பஜார்), முதன்மைச் சாலை (மெயின் ரோடு) ஆகிய இரு வீதிகளிலும்... 

>>> நாற்சக்கர வாகனங்களை நிறுத்த நிரந்தரத் தடை விதித்தல் 

>>> இரு சக்கர வாகனங்களை நிறுத்த நிரந்தர இடங்களை நிர்ணயித்தல் 

>>> நகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க போக்குவரத்துக் காவலர்களை நிரந்தரமாக நியமித்தல் 

>>> முதன்மைச் சாலை (மெயின் ரோடு), ஹாஜியப்பா தைக்கா பள்ளிவாசல் சந்திப்பில் – போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றல் 

ஆகிய கோரிக்கைகளை - காவல்துறையிடமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடமும், காயல்பட்டினம் நகர பொதுமக்கள் சார்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அவற்றைப் பரிசீலித்து, வெகு விரைவில் காயல்பட்டினத்தில் முறைப்படியான வாகனப் போக்குவரத்திற்கும், வாகன நிறுத்தத்திற்கும் வழிவகை செய்யப்படும் என காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது. 

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், அதன் மோட்டார் வாகன ஆய்வாளர் ஃபாத்திமா பர்வீன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பாஸ்கரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் சுந்தரநேசன், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், எல்.கே.மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதிர் கான், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ரப்பானீ ஆகியோர் - சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கினர். 

ன்றியுரைக்குப் பின், நாட்டுப் பண்ணுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பின்னர், பேரணி துவங்கியது. திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். 

துவக்கமாக ஹெல்மெட் - தலைக்கவசம் அணிந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், அவர்களைத் தொடர்ந்து அறிவிப்பு வாகனம், மாணவர்கள் நடைப் பேரணி, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கும் வாகனம், பொதுமக்கள் நடைப் பேரணி, திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்திற்குட்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் வாகனங்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மருத்துவ உதவி (ஆம்புலன்ஸ்) வாகனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பயிற்சி வாகனம் ஆகியன பேரணியில் அடுத்தடுத்து வரிசையாக அணிவகுத்துச் சென்றனர். 

காயல்பட்டினம் மகாத்மா காந்தி நினைவு வளைவில் துவங்கி, தைக்கா பஜார், முதன்மைச் சாலை (மெயின் ரோடு), கே.டீ.எம். தெரு, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத் தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலையம் வழியாக பேரணி புறப்பட்ட இடத்திலேயே நிறைவுற்றது. பின்னர் அனைவருக்கும் குளிர்பானம் - சிற்றுண்டி வழங்கப்பட்டது. 

பள்ளி மாணவர்கள் கலைந்து சென்றதும், இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணியும், இதர வாகனப் பேரணிகளும் – ஆறுமுகநேரி வரை சென்று திரும்பின. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலர் தலைமையிலான குழுவினரும், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர். 

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், ஜூனியர் ரெட் க்ராஸ், ஸ்கவுட் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மாணவர்களும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை முழங்கியும் - இப்பேரணியில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். 

நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட்டுடன் அணிவகுத்துச் சென்றதும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும், 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஹெல்மெட் பேரணியைத் தொடர்ந்து நடைப் பேரணியாகச் சென்றதும் குறிப்பிடத்தக்கவை. 

தகவல் & படங்கள்: 
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh