SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – சரியான துறைகள் மூலமாக வலிமையான கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மீராத்தம்பி படுகொலை செய்யப்பட்டு 4 நாட்களாகிவிட்ட பின்பும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக “நடப்பது என்ன?” குழுமத்திடம் நேற்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:- 30.08.2017. அன்று இரவு சுமார் 7 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ADSP அவர்களும், ஆறுமுகநேரி காவல் ஆணையர் திரு சிவலிங்கம் அவர்களும் நமது “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளைத் தொடர்புகொண்டனர். சம்பந்தப்பட்ட கொலையாளிகள் இருவருள் ஒருவரை அவர்கள் பிடித்துவிட்டதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவண், நிர்வாகிகள், நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம், காயல்பட்டினம். Add comment |