بسم الله الرحمن الرحيم
Sunday 05th April 2020 | 11 ஷஃபான் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயல்பட்டினம் தைக்கா தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பில், 2018 ஜுலை மாத ‘றெக்கை’ சிறார் இதழ் வெளியீடு!!அச்சிடுகமின்-அஞ்சல்
05 செப்டம்பர் 2018 மாலை 01:20

றெக்கை’ சிறார் மாத இதழின் 2018 ஜுலை பதிப்பில், காயல்பட்டினம் தைக்கா தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கையெழுத்து ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. ‘பதியம்’ சிறார் இலக்கியத் தளத்தின் மூலம் வெளியான இந்த சிறப்பு ஆக்கங்கள் குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள தகவலறிக்கை: 

அன்புடையீர், இறைவனின் அமைதி உங்கள்மீது என்றென்றும் நிலவட்டுமாக! 

சிறகடித்து பறக்க – றெக்கை 

2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட தமிழ் சிறார் இதழ் றெக்கை. சென்னையில் இருந்து வெளியாகும் இந்த மலர், பல்சுவைப் பகுதிகளுக்கும் பளபளப்பான வண்ணப் பக்கங்களுக்கும் பிரபலமானது. சிறார் இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களோடு, குழந்தைகளின் சிறப்பான ஆக்கங்களையும் சேர்த்தே பதிப்பிக்கிறது இந்த கலகல மாத இதழ். 

தனிச்சுற்றாக வெளியாகும் இது, நூல் அறிமுகம், சித்திரக் கதை, ஓவியப் பயிற்சி, சிறார் திரைப்படங்கள் குறித்த தகவல், தேர்ந்த எழுத்தாளர்களின் சிறார் கதைகள், ஆளுமைகளின் பிறந்தநாள் நாட்காட்டி, சிறார் இலக்கிய அறிமுகம், பாடல், சாதனைகள் போன்ற சுவையான பல பகுதிகளைத் தாங்கி வருகின்றது. 


றெக்கை இதழ்கள் 


ஆசிரியர் சரா சுப்ரமணியன் 

கையெழுத்துப் பதிப்பு 

இந்த சிறார் மாத இதழின் முத்தாய்ப்பாக, ‘நம்ம றெக்கை’ எனும் கையெழுத்துப் பகுதி விளங்குகிறது. தமிழகத்தின் ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு றெக்கை ஆசிரியர் குழு நேரில் சென்று, சிறார்களுக்கான ஒருநாள் முகாமினை ஒருங்கிணைத்து, அந்நிகழ்வின்போதே அக்குழந்தைகளிடம் ஆக்கங்களைப் பெற்று, அவ்வாக்கங்களை அவர்களின் அழகிய மழலைக் கையெழுத்துகளிலேயே (தட்டச்சு ஏதும் செய்யாமல்) இந்த சிறப்பு பகுதியில் பதிப்பிக்கின்றனர். 

காயல் புத்தகக் கண்காட்சி 2018 

அத்தகைய ஒரு முகாம், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளியில், காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகிய இரு அமைப்புகள் இணைந்து அண்மையில் நடத்திய காயல் புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தகக் கண்காட்சியின் முதலாம் நாள் (18.06.2018) நடைபெற்ற இதில், காயல்பட்டினம் தைக்கா தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 

முகாமினை றெக்கை இதழின் ஆசிரியர் சரா சுப்ரமணியனும், பதிப்பாளர் கு.கலைச்செல்வனும் ஒருங்கிணைத்தனர். 

காயல் மாணவர்களின் சிறப்பு பக்கங்கள் 

முகாமில் பங்கேற்ற 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ஆக்கங்கள் ஜுலை மாத இதழின் ‘நம்ம றெக்கை’ பகுதியில் பதிவாகியுள்ளது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே! 

ஓவியம், கவிதை, சிறுகதை, காகித மடிப்பு ஆக்கம் (ஓரிகமி / Origami) ஆகியவற்றோடு சுற்றுவட்டாரத்தை குறிக்கும் வண்ணம் காயல்பட்டினத்தில் தங்களுக்கு விருப்பமான விருப்பமில்லாதவற்றையும் மாணவர்கள் பகிர்ந்துள்ளனர். 

அனைத்து ஆக்கங்களும் மாணவர்களின் ஒளிப்படங்களோடு இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

கூடவே, புத்தகக் கண்காட்சி உள்ளரங்கில், தங்களுக்கு விருப்பமான நூல்களை ஒருசில மாணவர்கள் கைகளில் ஏந்தியபடி எடுத்துக்கொண்ட தற்படங்களையும் (Selfie), இப்பகுதியில் தொகுத்துள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த கருத்துப் பரிமாற்றமும், இந்த இதழில் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது. இதில் பங்கேற்ற 7-ஆம், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதை உறுதியாகப் பதிவுசெய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. மாவட்டத் தலைநகரில் 22.05.2018 அன்று நடந்த அந்த துயரமான நிகழ்வு, நம் குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த பதிவு தெளிவாகப் பிரதிபலிக்கிறது. 


2018 ஜுலை மாத ‘றெக்கை’ சிறார் இதழ் 

றெக்கை ஆசிரியர் குழுவின் அன்பளிப்பு 

‘நம்ம றெக்கை’ பகுதிக்கான முகாமில் பங்கேற்று சிறப்புற ஆக்கங்களை வழங்கிய மாணவர்களுக்கு, றெக்கை இதழின் சார்பாக 25 படிகள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் மூலம், உரிய மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

23.08.2018 வியாழனன்று 10:00 மணியளவில், தைக்கா தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அந்த சிறுநிகழ்வில், பள்ளி மாணவர்களோடு ஆசிரியர்களும் பங்கேற்றனர். 

நிகழ்வின் துவக்கமாக சமூக ஆர்வலர் அல்-ஹாஃபிழ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீது கிராஅத் ஓத, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் அ,ர,ஹபீப் இப்றாஹீம் அறிமுக உரையாற்றினார். 

அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சாளை பஷீர் ஆரிஃப், சமூக ஆர்வலர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, ரைஸ் டிரஸ்ட் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹமீது மூஸா, ஃபஹீம் அஹமத் & முஹம்மத் ரிஃப்கான் ஆகியோர் மாணவர்களுக்கு நூல்களை வழங்கினர். 

முன்னதாக, இதழில் வெளியாகியுள்ள தத்தம் ஆக்கங்களை, அந்தந்த மாணவர்களே முன்வந்து வாசித்துக்காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மது ஷுஐப், இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பது குறித்து சுருக்கமாக உரையாற்றினார். 

குழந்தைகளின் ஆக்கங்களை வண்ணப் பக்கங்களில் தாங்கி வந்துள்ள இந்த முயற்சி, அவர்களோடு தங்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக, கையெழுத்து முகாமை ஒருங்கிணைத்த பள்ளியின் அறிவியல் ஆசிரியை எம்.அன்னசெல்வி தெரிவித்தார். 

இறுதியாக, கோவையில் இருந்து வெளிவரும் ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களை தாங்கி வரவுள்ள (இறை சித்தம்) நெய்தல் திணை குறித்த சிறப்பு பதிப்பிற்கு, சுவைமிக்க பல ஆக்கங்களை தருமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது. 

இறை வேண்டுதலோடு, அந்த குறுநிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

காயல் பள்ளிகளில் றெக்கை 

இறையருளால் பதியம் சிறார் இலக்கியத் தளத்தின் முயற்சிகளுக்கு கிடைத்த முதன்முதல் பெருவெற்றி இது. இதனை கொண்டாடும் வகையில், காயல்பட்டினத்தின் பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் றெக்கை இதழ் அன்பளிப்பாக வழங்கிட, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் மூலம், ஜுலை 2018 இதழ் கூடுதலாக 25 படிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

அது தவிர, நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கல்விச்சாலைகள் / நூலகங்களில் றெக்கை இதழ் ஓராண்டுக் காலம் அன்பளிப்பாக கிடைக்கவும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் மூலம் ஆண்டு கட்டணம் செலுத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இன்ன பிற பள்ளிகளிலும், நூலகங்களிலும், வீடுகளிலும் (கட்டணம் செலுத்தி) பெற, றெக்கை குழுவின் தொடர்பு விபரம் கீழே: 

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

ஆண்டுக் கட்டணம்: ரூ 400
வங்கிக் கணக்கு விபரம்:
Thoorika The Creative Studio
A/c No.: 357201010036527
Union Bank of India, Besant Nagar Branch, IFSC: UBIN0552721
 

நன்றியும் அன்பும் 

இந்த இனிய துவக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்கள், முகாமில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களை ஒருங்கிணைக்க உதவிய முன்னாள் நகர மன்ற தலைவி ஆபிதா ஷேக், தைக்கா தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜா.எஸ்தர், துணை தலைமை ஆசிரியை பி.ரோஸி மிராண்டா, அறிவியல் ஆசிரியை எம்.அன்னசெல்வி, முகாமிற்காக நிகழ்விடம் அளித்த முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி நிர்வாகிகள், காயல் புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், றெக்கை இதழின் ஆசிரியர் சரா சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றியினை உரித்தாக்குகிறோம். 

வருங்காலங்களிலும் எழுத்து, வாசிப்பு, கலை ஆகிய துறைகளில், நம் பிள்ளைகளின் ஈடுபாட்டை மிகுதியாக்க, நல்ல பலத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம் (இறைவன் நாடினால்). 

அந்த இலக்கினை விரைவில் அடைந்திட, நகரின் அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள், மாணவச் செல்வங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. வல்ல நாயன் நம் நல்ல நாட்டங்களுக்கு அருள்புரியட்டுமாக, ஆமீன்! 

நிகழ்வில் எடுக்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களையும் காண, கீழுள்ள முகநூல் பதிவினைக் காண்க: https://m.facebook.com/story.php?story_fbid=728655657489310&id=720134981674711 

தகவல்:
பதியம் சிறார் இலக்கியத் தளம்
கண்ணும்மா முற்றம்
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு
https://www.facebook.com/ezhuthumedaitn/ 

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018
செய்தி #: EM2808201801
 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com