நகர்மன்ற தேர்தலும் மக்களின் மனநிலையும்!அச்சிடுக
14 செப்டம்பர் 2011 மாலை 03:36

எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே.

தற்போது நம் ஊர் நகர்மன்ற தேர்தலை எதிர் நோக்கி இருக்கின்றது. இதுவரை நடந்த தேர்தலுக்கும் எதிர்வரும் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசத்தை காணமுடிகின்றது. முன்பு நகராட்சி உடைய தலைவர் பதவிதான் பரபரப்பாக இருக்கும், மற்ற வார்டு பிரதிநிதிகளை பற்றி கவலை படுவது கிடையாது. யாரோ நிற்கிறார்கள், யாருக்காவது ஓட்டு போடுவோம் அல்லது சும்மா இருந்து விடுவோம் என்று இருந்தார்கள். ஆனால் இந்த தேர்தலில் அதிகமான மக்கள் வார்டு மெம்பர்களை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுவதை பார்த்தால் மிகுந்த சந்தோசமாக இருக்கின்றது. நிறைய மாற்றங்களை மக்களிடம் காண முடிகின்றது.

இருந்தாலும் மக்களிடம் சிறிய குழப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றது. யார் சொல்லுவதை நாம் செவிமடுப்பது. MEGA என்று ஒன்றும், நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என்று ஒன்றும், ஐக்கிய பேரவை என்று ஒன்றும், ஜமாஅத், ஜமாஅத் என்றும் வழி காட்டுகிறேன் என்று கூறுகிறார்களே.. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிவதிலிருந்தே மக்கள் விடுபடவில்லை.

கொஞ்சம் படித்தவர்கள், இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் ஓரளவு புரிதலுடன் இருக்கின்றார்கள். மற்றவர்களுக்கு இன்னும் குழப்பம் தான்.

50% மக்களிடம் எதிர்வரும் நகர்மன்ற தேர்தலைப்பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.

அவர்களின் கவலைகள் எல்லாம்..

இன்று பத்து ரூபாய்க்கு நான்கு சாளை மீன் விற்கின்றதே, நாளைக்கு ஆறு மீன் கிடைக்குமா?

மோட்டார் போட்ட 2 நிமிடத்திலே கிணற்றில் தண்ணீர் வற்றி விடுகிறதே, இந்த வறட்சி என்று தீரும், மழை எப்போது வரும் என்றும்,

முருங்கைக்காய் இவ்வளவு மலிவாக கிடைக்கிறதே, இதே நிலை ஹஜ் பெருநாள் வரை தொடருமா...சென்ற வருடம் உப்புக்கறிக்கு போட ஒரு முருங்கைக்காய் 10 ரூபாய்க்கு வாங்கினோமே...

இப்படி பல கவலைகள் அவர்களுக்கு.

இவர்களை விசாரித்தால், நம் அனைத்து ஜாமாத்களின் ஒருங்கினைப்பான ஐக்கிய பேரவை அனைத்தையும் பார்த்துக்கொள்ளும், அவர்கள் நல்ல ஒழுக்கமான ஆட்களை கைகாட்டுவார்கள், அவர்களுக்கு நாங்கள் ஓட்டு போடுவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

இந்த நம்பிக்கையை காப்பாற்றுவது ஐக்கிய பேரவை உடைய கடமை அல்லவா. இந்த ஐக்கிய பேரவையின் செயல்பாடுகள் சிலவற்றை பாராட்டியே ஆகணும். இப்படி ஒரு பேரவை பெரியவர்களின் தலைமையில், சீரிய வழிகாட்டுதலுடன் இருப்பதே நம் ஊருக்கு ஒரு தனி பலம் தான்.

இங்கு சேவை செய்பவர்கள் யாரும் ஊதியம் பெற்றுக்கொண்டோ, சொந்த லாபத்திற்காகவோ, இல்லை வேலை வெட்டி இல்லாமல் நேரத்தை போக்க அங்கு இருப்பதாகவோ நினைக்காதீர்கள். அவர்களின் நோக்கம் நல்ல சூழ்நிலையை கொண்டுவருவதும், ஊரின் நலனுமே அன்றி வேறு ஏதும் இல்லை.

சுமார் 23 லட்சம் ரூபாய் திரட்டி, நகரில் துணை மின் நிலையம் அமைக்க நிலம் வாங்கியதில் அவர்களின் பங்கை பாராட்டாத மனது ஒரு நல்ல மனது அல்ல. இப்படி லட்சக்கணக்கில் அள்ளிக்கொடுத்த நல்லவர்களையும், ஒருங்கினைத்து நல்ல ரிசல்டை கொண்டுவந்த ஐக்கிய பேரவைக்கும் கோடான கோடி நன்றிகள்.

நம் மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஆறுமுகநேரியை அடுத்துள்ள குரங்கன்தட்டு என்ற பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டன மக்களுக்கும் உதவிய பாங்கயையும் பாராட்டியே ஆகணும்.

இப்படி ஒரு சக்திவாய்ந்த அமைப்பு சில சமயங்களில் சறுக்கும் போது எடுத்து சொல்லுவதும் நம்முடைய கடமை தான். நகர்வல நிருபர் எழுதிய கட்டுரை "காய(ல்)பட்டினம் நகர் மன்றத் தேர்தல் - ஒரு சாமானியனின் உணர்வலைகள்!!" மிகவும் அருமையாக மக்களின் கருத்தை பிரதிபலிக்கின்றது.

எல்லோரும் ஒன்றுகூடி விவாதித்து நல்ல முடிவு எடுக்கலாம் என்று கூட்டம் கூட்டி, கையில் முன்பே எழுதி வைத்த தீர்மானங்களை வாசித்து, அல்லாஹ்வை துதிபாடி, யாருடைய கருத்தையும், எந்த ஜமாத்துடைய கருத்துக்கும் மதிப்புக்கொடுக்காமல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி விட்டோம் என்று அந்த தீர்மானங்களை பிரிண்ட் போட்டு கொடுக்கின்றீர்களே.. இது தான் நாங்கள் உங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையா. விவாதம் நடந்ததா...மற்றவர்களின் கருத்துக்கள் செவிமடுக்கப்பட்டதா..சொல்லுங்கள்.

ஐக்கிய பேரவைக்கு 11 பிரதிநிதிகள் என்று முடிவு செய்துவிட்டு, மறுநாள் கூட்டத்தில் 25 பிரதிநிதிகள் என்று அதிகரிக்க காரணம் என்ன. ஒரே இரவில் உங்களை மாற்றிய சக்தி எது.

அந்த 25 பிரதிநிதிகளும் இவர்கள் தான் என்று ஒரு லிஸ்டும் தங்களுக்கு வந்ததாகவும் நாங்கள் அறிகின்றோம். இது உண்மைதானா, இப்படி ஒரு லிஸ்டை கொடுத்து இவர்கள் தான் ஐக்கிய பேரவை உடைய பிரதிநிதிகள், இவர்கள் தான் வரனும் என்று உத்தரவு வரும் அளவு நம் பேரவை உடைய நிலைமை இருக்கிறதே. அல்லாஹ்விற்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகனும்.

தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.

(அல்குர்ஆன் 55:46)

இந்த செயல்கள் எல்லாம் எதை காட்டுகின்றன. யாருடைய கருத்துக்கும் மதிப்பு கொடுப்பதோ, எந்த ஜமாத்துக்கும் அதிகாரம் கொடுப்பதோ கூடாது என்றும், தாங்கள் நினைக்கும் நபர் தான் அதிகாரத்துக்கு வரனும், என்ற நிலையை நிலைநாட்டனும் என்ற செயல்தானே.

" வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான் "

(அல்குர்ஆன் 85:9)

(நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்."

(அல்குர்ஆன் 3:26)

அடுத்தது " நகரில் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியத்திற்கு ஐக்கிய பேரவை சார்பில் நிலம் வழங்கப்பட்டது" -

என்ன விலைக்கு வாங்கி, என்ன விலைக்கு விற்கப்பட்டது.

சுமார் 23 லட்சம் ரூபாய் அளவில் நிலம் வாங்கப்பட்டு, சுமார் ஒன்பது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதை நான் குறையாக சொல்லவில்லை.

அரசாங்கம் யாரிடமும் நிலங்களை இலவசமாக பெறாது. அரசாங்க காரியங்களுக்கு நம்முடைய நிலத்தை அரசாங்கம் பெற்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அரசாங்க மதிப்பை (இடத்தை பொருத்து) நமக்கு தரும். அப்படி இந்த நிலத்தின் அரசாங்க மதிப்பு என்ன?. அரசாங்கத்திடம் இருந்து இந்த ஒரு 1 ஏக்கர் நிலத்திற்கு குறைந்தது 10 லட்சம் ரூபாய் கிடைக்கலாம்.( கூடுதல், குறைவு இருக்கலாம்). இந்த ரூபாயை வேறு நல்ல திட்டங்களுக்கு பயன் படுத்தலாமே. பல லட்சங்கள் கொடுத்த நன்மக்களின் மனநிலையை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்.

(இப்படி அவசரமாக கொடுக்கவில்லை என்றால் இந்த துணை மின்நிலையம் பக்கத்துக்கு ஊருக்கு சென்றுவிடும் என்றும் சில சகோதரர்கள் கூறுகிறார்கள். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிந்ததில் அப்படி ஒரு திட்டமோ அல்லது யோசனையோ அரசாங்கத்திடம் இல்லை என்றே அறிய முடிகிறது.)

இதை எல்லாம் விடுங்க, ஒரு 10 ஆட்டோ வைத்து ஒரு சங்கம் நடத்துபவர் கூட, அதை அரசாங்கத்திடம் முறையாக பதிவு செய்து நடத்தி வருவதை பார்க்கலாம். ஆனால் நம்முடைய ஐக்கிய பேரவை இன்னும் அரசாங்கத்தில் பதிவு செய்யாத ஒரு அமைப்பாகவே இருக்கிறதே.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. அனைத்தையம் எழுதினால் அன்னாந்து நம்மை நாமே துப்புவது போல ஆகிவிடும்.

மக்கள் இன்னும் உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இறைவனுக்கு பயந்தவர்களாக நடந்து, இரு உலகிலும் வெற்றி பெற்றவர்களாக ஆக வல்ல ரஹ்மானிடம் பிராத்திக்கின்றேன்,நம் அனைவர்களுக்கும் நல்வழியை காட்டுவானாக..

காதில் விழுந்தது.

சில அம்மணிகள் என்னிடம் குடும்ப திருமண அழைப்பு நிகழ்ச்சியில் கேட்டது..

தம்பி ஜியாவுதீன், MEGA , MEGA என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்களின் MEGA TV இல் இதுவரை நம் ஊரைப்பற்றியோ, தேர்தல் பற்றியோ ஒன்றும் ஒளிபரப்ப வில்லையே..

(அவர்களிடம் விபரமாக சொல்லி புரிய வைப்பதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது,,புரிந்த பின்பு அவர்கள் மற்ற பெண்மணிகளிடம் சொன்ன விதம் ஆச்சரியமாக இருந்தது..நான் தான் கடினமாக அவர்களிடம் விவரித்து எனக்கு புரிந்தது).

கண்ணால் கண்டது.

IOB வங்கிக்கு பணம் எடுக்க 40 நிமிடம் காக்க வைத்துவிட்டார்கள். அந்த 40 நிமிடத்தில் நான்கு நம் குடும்பங்கள் நகைகளை அடகு வைத்த காட்சியை காண முடிந்தது. ஒரு குடும்பத்தாருடன் வந்த தாடி வைத்த மனிதரையும் கண்டு மனது பிசைந்தது. இவ்வளவு பைதுல்மால் இருந்தும் (பல வீடுகளில் தனியாகவும் அழகிய கடன் கொடுக்கின்றார்கள்) இவர்கள் வட்டின் பக்கம் செல்லுவது ஏன் என்று புரியவில்லை.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

(அல்குர்ஆன் 2:275)

வல்ல ரஹ்மான் இந்த கொடுமையான வட்டியின் பிடியில் இருந்து நம் சமூகத்தை காப்பானாக.

இன்ஷாஹ் அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.

சாளை S.I.ஜியாவுதீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh