"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி)அச்சிடுக
11 டிசம்பர் 2011 மாலை 07:39

(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள்;நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம். 11:109

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனித சமூதாயத்தை நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் அவர்களிலிருந்தே ஒரு தூதரை எற்படுத்துகின்றான். இறை நெறிகளையும், இறைக் கட்டளைகளையும் இறைவனிடமிருந்து வேதத்தின் மூலம் மக்களுக்கு ஓதிக்காண்பித்து இருளிலிருந்து பிரகாசத்தின் பால் மக்களை அழைக்கின்றனர்.

'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!'என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை. (21:25)

முதன்மையாக அனுப்பப்பட்ட தூதர் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை ஓரிறைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அனுப்பப்பட்டனர். அவர்களில் தூதர்களை உண்மைப்படுத்தியவர்களும் உள்ளனர், பொய்ப்பித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்;ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.(16:36)

இறைவனுடைய தூதர்களை பொய்பித்தவர்கள் இறைவனுக்கு இணையாக சிலைகளையும், சூரியன்,நெருப்பு, இறந்தவர்களின் மன்னரைகளிலும் வழிபாடு செய்துவந்தனர். இறைவனுடைய கட்டளைகளையும், தூதர்களையும் பொய்பித்த காரணத்தினால் இறைவன் அவர்களை உரு தெரியாமல் அழித்தும் விட்டான். இறைவனின் கட்டளை பொய்யர்களின் பால் இறங்கிய போது அவர்கள் வணங்கிய அல்லாஹ் அல்லாத பொய்யான தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை.

(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.(11:100)

அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை. (11:102)

மேலும் அத்தூதர்களை உண்மைப்படுத்தியவர்கள் தூதர்கள் அவர்களோடு இருக்கும் குறிப்பிட்ட காலம் வரை நல்வழியில் இருக்கின்றனர். அத்தூதர்கள் அவர்களை விட்டும் பிரிந்த பின் இறைநெறிகளையும், இறைக்கட்டளைகளையும் புறக்கணித்து இறைவனுக்கு இணையாக இறைத்தூதர்களையும் வணங்கி தமக்கு தாமே அநீதி இழைத்து வழிதவறிய சமூகமாகவும் ஆகிவிட்டனர்.

முன் சென்ற சமூகம் வழிதவறியதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

யூதர்களையும், கிறித்தவர்களையும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால், அல்லாஹ் சபித்துவிட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா அவர்கள் அறிவித்துவிட்டு,"இவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்காவிட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட) உயாத்தப்பட்டிருக்கும்" என்றும் கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

மேலும் முன் சென்ற சமூகம் வழிதவரியதைப் போன்று தமது சமூகமும் இவ்வாறான காரியங்களை செய்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன். அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை பாருங்கள்.

கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள். நூல்: முஸ்லிம் 1610

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிக்கும் தருவாயிலும் முன் சென்ற நபிமார்களின் அடக்கதளம் வணக்கதலமாக மாறியதைப் போன்று தம்முடைய அடக்கத்தலமும் இவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்காமல் இருந்திருந்தால் அவர்களின் கப்ரும் உயர்தப்பட்டிருக்கும் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம் கப்ரை உயர்த்தியோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது என்பதை. ஆனால் நாமோ நல்லடியார்கள் கப்ர் வேறு சாமானியர்கள் கப்ர் வேறு என்று கூறி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை கேலி செய்யும் வகையில் நாம் நடந்து கொள்கின்றோம்.

இருளிலும் பிரகாசிக்கும் மார்க்கம்..

"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அஹ்மது,இப்னு மாஜா 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த மார்க்கம் இருளிலும் பிரகாசிக்கும் அளவிற்கு வெள்ளை வெளேரென்ற நிலையில் விட்டுச் சென்றுள்ளார்கள். முன்னோர்களை நினைவுக் கூறுகின்றோம் என்ற பெயரால்.. இனைவைப்பையும், சந்தனக்கூடு விழாக்களையும், மாற்று மத கலாச்சாரத்தையும்,வீணான அனாச்சாரங்களையும் இஸ்லாம் என்ற போர்வையில் பின்பற்றப்படுகின்றன. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் காட்டிதராத தடை செய்துள்ள காரியங்களாகும்.

'"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எடுத்துரைக்கப்படும். நூல் : அபூதாவுத் (1746)

பொதுவாக கப்ரை உயர்த்திக் கட்டுவதையும், கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

மேலும் நபியவர்கள் தன்னுடைய கப்ரைக் கூட விழாக் கொண்டாடக் கூடிய இடமாக ஆக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கும் போது இன்றைக்கு நாம் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ஹாக்கள் கட்டி விழாக் கொண்டாடுகிறோமே இது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இறைவனுக்கு இணைவைத்தால் சுவர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது  என்றும், இறைவனிடம் மன்னிப்பு கிடையாது என்றும், அணைத்து அமல்களும் அழிந்து விடும் என்றும் அல்லாஹும் தன் திருமறையில் எச்சரித்துள்ளான். இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய காரியங்கள் அனைத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு தெளிவுப்படுத்தி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்கள். எனவே உரியமுறையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி சுவர்க்கத்தில் அவர்களோடு இருக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புரிவானாக!

ஆக்கம் : பி.ஜி.எம் அலீ

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh